பொருள் புதிது 04: சுவர்களை ஊடுருவிப் பார்க்கும் ஆரா

By முகமது ஹுசைன்

 

ரா (Aura) எனும் புதிய தொழில்நுட்பத்துக்கு கேமராவோ நகர்வை உணரும் உணரியோ தேவையில்லை. இது நம் வீட்டில் உள்ள வைஃபை மூலம் திருடர்களின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்து நம்மை எச்சரிக்கும் திறன் கொண்டது.

பாதுகாப்பு சாதன அமைப்புகள் தங்களுக்கு முன் உள்ளவற்றை மட்டும்தான் பாதுகாக்கும் தன்மை கொண்டவாறு இதுவரை இருந்துள்ளன. இதற்கு ஜன்னல்களிலும் கதவுகளிலும் பொருத்தப்படும் உணர்கருவிகளோ அறைகளில் பொருத்தப்படும் இயக்கத்தைக் கண்டறியும் கருவிகளோ தேவைப்படும். தானாக வேலைசெய்யும் பல பாதுகாப்பு அமைப்புகள் ஒளிபரப்பும் கேமராக்களைத்தான் சார்ந்து இருக்கின்றன. எனவே, இவை நம் அன்றாட குடும்ப வாழ்வைத் தொலைக்காட்சியில் வரும் ஒரு உண்மை நிகழ்ச்சி போல் மாற்றிவிடும் ஆபத்தைக் கொண்டது. இதனால் இணையத்தில் இருக்கும் தகவல் திருடர்களுக்கு இவை ஒரு வரப்பிரசாதம் ஆகக் கூடும்.

ஆனால், இங்கு நாம் பார்க்கும் இந்தச் சுவரை ஊடுருவிப் பார்க்கும் கண்களைக் கொண்ட பாதுகாப்பு அமைப்புக்கு கேமராக்கள் தேவை இல்லை. இது எப்படிச் சாத்தியம் என்று ஆச்சர்யமாக உள்ளதா? நம்மைச் சுற்றி நிறைந்திருக்கும் ரேடியோ அலைகளில் நிகழும் குறுக்கீடுகளை எப்படி அறிவது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துவிட்டதன் மூலம் அவர்கள் நமது வைஃபைக்குப் பார்க்கும் சக்தி அளித்துள்ளனர்.

இது வெறும் மனப்பிரமை அல்ல; உண்மை. ரூபாய் மூன்று லட்சம் விலை கொண்ட இந்த ரேடியோ அலைகளை உணரும் ஆரா கருவியைப் பலர் தங்கள் வீடுகளில் தற்போது உபயோகப்படுத்துகின்றனர். இது கொஞ்சம் விலை அதிகம்தான், இருந்தாலும் நம் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கண்காணிக்கும் இந்த எளிய சாதனம் நமது சுதந்திரத்தில் ஊடுருவாமல் நமக்கு வேண்டிய பாதுகாப்பையும் நிம்மதியையும் அளிக்கிறது.

ஆரா, ADT போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் மாத வாடகைக்கு வீட்டில் நிறுவிக் கண்காணிக்கப்படும் அமைப்பு அல்ல. ADT போன்ற வடிவமைப்பாளர்கள் தங்கள் அமைப்பு தான் சிறந்தது என்று சத்தியம் அடித்துச் சொல்வார்கள், ஆனால், இந்தப் புதிய தொழிநுட்பம் தானியங்கி முறையில் வீட்டைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. ADT போன்றவற்றுடன் ஒப்பிடும்போது இதன் விலை சற்று அதிகம். இதன் செயல்பாடு ஸ்மார்ட் போனைச் சார்ந்து உள்ளதால் இதை பயன்படுத்துவதும் மிக எளிது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ரேடியோ அலைகள் நம் வீடு எங்கும் பரவி உள்ளன. கல் எறிந்தால் குளத்தின் மேல் பரவும் அலை போன்று, இந்த ரேடியோ அலைகள் யாரும் குறுக்கே வராத வரையில், ஒரே சீரான வடிவில் சுவரின் வழி ஊடுருவி எதிரொலித்து வந்து கொண்டிருக்கும். இந்த ரேடியோ அலைகளை ஆராயும் ஆரா (Aura) அதில் நிகழ்ப் போகும் குறுக்கீடுகளை எப்போதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்.

வீட்டின் ஜன்னலை அல்லது கதவை உடைத்து உள் நுழையும் திருடனின் நடமாட்டத்தை ஆரா தன்னகத்தே கொண்ட உணரிகள் மூலம் உணர்ந்து அதை நமது கைப்பேசியில் அலை வடிவில் காட்டும். இந்த அலை வடிவமானது நிலநடுக்கத்தை அறிய உதவும் சீஸ்மோகிராப் கருவியில் ஏற்படும் அலைவடிவம் போன்று இருக்கும். திருடன் நடந்தால் மட்டும் அல்ல, அவன் ஊர்ந்து வந்தாலும் இது கண்டுபிடித்துவிடும்.

இது கனடாவில் இருக்கும் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ எனும் நகரத்தில் இயங்கிவரும் ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஜோடி ஆரா உணரிகள் பல அடுக்குமாடிகளைக் கொண்ட வீட்டில் நிகழும் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் அளவு திறன் கொண்டது. நம் வீட்டில் சுழலும் மின் விசிறி, வீட்டில் பறக்கும் இலைகள் மற்றும் காகிதங்களைப் போன்றவற்றைப் புறந்தள்ளி ஆட்களின் நடமாட்டத்தால் ஏற்படும் அலைக் குறுக்கீட்டை மட்டும் நமக்கு உணர்த்தும் சிறப்புத் தன்மை கொண்டது.

இது ஒரு சிக்கலான அறிவியல் தொழில்நுட்பம்தான், ஆனால் இதை நிறுவுவது மிகவும் எளிது. வீட்டின் ஒரு மூலையில் பள்ளிக் குழந்தைகள் எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸ் அளவை ஒத்த ஹப் (Hub)பையும் மறு மூலையில் குச்சி ஐஸ் அளவை ஒத்த உணரியையும் செருக வேண்டும். அவ்வளவு தான், ஆரா அதன் பின் அந்த இரண்டுக்கும் இடையே உள்ள பரப்பளவில் ஒரு கால்பந்து வடிவிலான புலத்தை ஏற்படுத்தி, அதை விடாமல் ஆராய்ந்துகொண்டே இருக்கும். இந்த ஹப்பையும் உணரியையும் தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து நிறுவுவது அவசியம்.

இதை நாம் நமது கைப்பேசியுடன் நாமாகவே இணைத்துக்கொள்ளலாம் அல்லது ஆராவின் மூலம் கைப்பேசியுடன் நடமாடும் நம் குடும்ப உறுப்பினர்களைக் கண்டுணர்ந்து அவர்களின் கைப்பேசியில் தானாகவே இணையும் படியும் சொல்லலாம்.

ஆள் நடமாட்டத்தை உணர்ந்தவுடன், அபாய ஒலி எழுப்பச் செய்யலாம்; நம் கைப்பேசியில் ஒரு எச்சரிக்கை எழுப்பச் செய்யலாம்; வீட்டில் உள்ள விளக்குகள் எரியச் செய்யலாம்; பாதுகாப்பு கேமராவை இயக்கி நடமாட்டத்தைப் பதியச் செய்யலாம். இதில் எதை வேண்டுமானாலும் செய்யும்படி ஆராவை நாம் நிறுவலாம். ஆராவின் ஒரு ஜோடியானது 40 அடி இடைவெளிக்கு இடையே உள்ள பரப்பளவைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.

ஆனால், இதன் செயல்பாடுகளில் சில பாதகமான அம்சங்கள் இருக்கத் தான் செய்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் வீட்டில் செல்ல பிராணிகள் இருக்கும்பட்சத்தில், அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதைத் தவிர்க்கும் திறனும் இதற்குக் கிடையாது. மேலும், மற்ற கண்காணிப்பு கேமராக்கள் போன்று இதனால் காவல்துறைக்கு சாட்சியாக இருக்கும் வண்ணம் துல்லியமான படங்களைப் பிடிப்பதும் இயலாது.

மலிவான விலையில் வீட்டைப் பாதுகாப்பதற்கு நிறையப் பாதுகாப்பு அமைப்புகள் சந்தையில் இருக்கின்றன. ஆனால், பார்க்கப்படுபவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் நடவடிக்கையைக் கண்காணிப்பது இந்த ஆரா மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும். வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடுகளில் உள்ள வைஃபை ரௌட்டர்கள் (wi-fi router) இந்த ஆராவைத் தன்னகத்தே உள்ளடக்கிய படி இருக்கலாம். அப்போது நமது சுவர்கள் பார்க்கும் திறனை மட்டும் கொண்டிருக்காது, அது கேட்கும் திறனையும் பெற்றிருக்கக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்