மனைவியே மந்திரி: அன்பை அள்ளித் தரும் துணை - எடிட்டர் ரூபன்

By கா.இசக்கி முத்து

படைப்பாற்றல் சார்ந்த துறையில் இயங்குபவர்களுக்குக் குடும்பத்தில் எப்போதும் அமைதியான சூழல் தேவை. அதற்கு முழுமுதல் காரணமாக இருப்பதுடன் அன்பால் ஆராதித்து இளைப்பாறச் செய்பவர் என் மனைவி சண்முகப்ரியா.

அவரை எனக்கு 2004-ல் இருந்து தெரியும். நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் விஸ்காம் படித்தோம். முதலில் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்தோம். கல்லூரி நண்பர்கள் குழுவில் நாங்களும் உண்டு. அடிக்கடி சின்னச் சின்ன சண்டைகள் வரும். அப்படி ஒரு சிறு சண்டையின் விளைவாக, என்னை அவருக்குப் பிடித்துப்போனது. ஒரு கட்டத்தில் அவருடைய காதலை என்னிடம் சொன்னார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.

மணநாள் தடுமாற்றங்கள்

எனது திருமண நாளே மறக்க முடியாததுதான். காதல் திருமணம் என்பதால் திருமண நாள் அன்று மிகவும் பயந்தேன். திருமணம் என்றவுடனே குடும்பத்தினர் ‘நாங்கள் இந்த முறையைக் கடைப்பிடிப்போம். நீங்கள் அதைச் செய்யவில்லை’ என்று பேச்சுவாக்கில் கூறிவிடுவார்கள். பல பிரச்சினைகள் வரும். இதனால் அன்றைக்கு இரண்டு குடும்பங்களிலுமே சின்னச் சின்ன குழப்பங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் சமாளித்து ‘திருமணம் நடந்து முடிந்தால் போதும்’ என்றாகிவிட்டது. ‘வாழ்க்கையில் இன்னும் நிறைய விஷயங்களைக் காண உள்ளோம். முதலில் இந்தச் சூழலைச் சமாளித்துவிட்டால்போதும்’ என்று மனதுக்குள் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.

கடிகாரச் சேகரிப்பு

எங்கள் குழந்தை மித்ரா 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிறந்தாள். அவளைக் கையில் வாங்கியது பெரிய பரிசு. ஏனென்றால், என் மனைவி உடல்ரீதியாகப் பல பிரச்சினைகளை அதற்காகக் கடந்துவந்திருந்தார்.

காதலிக்கும்போது நிறைய வாழ்த்து அட்டைகள் கொடுத்திருக்கிறேன். அந்த நேரத்தில் வருமானம் இருக்காது. விஸ்காம் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே உதவி எடிட்டராகப் பணிபுரிந்துவந்தேன். அதனால், கல்லூரி சென்று அவரைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கும். அவருக்கு கைக்கடிகாரம், பேக்குகள் பிடிக்கும். திருமணத்துக்குப் பிறகு பட வேலை தொடர்பாக எந்த ஊருக்குச் சென்றாலும் அவருக்குக் கண்டிப்பாகக் கைக்கடிகாரம் வாங்கிவிடுவேன். அப்படி வாங்கிக்கொடுத்த நிறைய கைக்கடிகாரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்.

நிறைவு தரும் சிறுபயணங்கள்

நான் அதிக நேரம் வீட்டில் இருக்க வேண்டும் என சண்முகப்ரியா எதிர்பார்ப்பார். ஆனால், எனது பணிச்சுமையால், அதிக நேரம் வீட்டிலிருக்க முடியாத சூழல் ஏற்படும். அது அவருக்கும் தெரியும். வேலைக்கு புறப்படும்போதே, ‘இன்றைக்கு எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வர முடியுமோ வந்துவிட வேண்டும்’என்று நினைத்துக்கொண்டுதான் கிளம்புவேன். அதற்கு என் இயக்குநர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். என்னை நம்பி வீட்டுக்குப் படத்தைக் கொடுப்பார்கள். வீட்டிலிருந்தும் எடிட்டிங் பணிகளைக் கவனிப்பேன். தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு சிறு பயணங்கள் செல்வேன். இதை வழக்கமாகவே வைத்திருக்கிறேன். இதுவே தனக்கு நிறைவு தருவதாக என் மனைவி சொல்வார்.

22chlrd_ruben 3நிலைக்கும் அமைதி

வீட்டில் எல்லா நாட்களுமே சுமுகமாகக் கடந்துவிடும் என்று சொல்ல முடியாது. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும் எப்படி அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதை சண்முகப்ரியா தெரிந்து வைத்திருக்கிறார். நாம் எப்படி இருக்கிறோம் என்பதைத் தாண்டி, எதிரில் இருப்பவர் எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு நடந்துகொள்வது ரொம்பவும் முக்கியம்.

அந்த வகையில், மகிழ்வான தருணங்களோ நெருக்கடியான சூழல்களோ அவற்றை எப்படிக் கச்சிதமாக அணுகுவது என்பதில் அவருக்கு நல்ல தெளிவு உண்டு. இதனால், குடும்பத்தில் எப்போதும் அமைதியான சூழலை என்னால் உணர முடிகிறது.

கற்க வேண்டிய பாடம்

நேரத்தை நிர்வகிப்பதில் அவர் வல்லவர். 10 மணிக்கு ஓர் இடத்திலிருக்க வேண்டுமென்றால் 9:45 மணிக்கு அங்கிருக்க வேண்டும் என்பார். ஆனால், நானோ நேரெதிர். எந்த இடத்துக்கும் 10 நிமிடம் தாமதமாகச் செல்லும் வழக்கமுடையவன். அதனால் சண்முகப்ரியாவுடன் எங்கேயாவது வெளியூருக்குச் செல்ல வேண்டுமென்றால் எனக்கே பயமாகிவிடும். அனைத்து விஷயங்களுமே சரியான நேரத்தில் நடக்க வேண்டும் என்பார். எனது பணிகளுக்கு இடையே பெரும்பாலும் எதையும் சரியான நேரத்தில் செய்ய முடியாது. திருமணத்துக்கு முன்பு கல்லூரியில் எனது ரெக்காட் நோட் அனைத்தையுமே அவர்தான் முடித்துக் கொடுப்பார். அப்போதிலிருந்தே கால நிர்வாகம் நம்மிடம் கிடையாது. அதை மட்டும் விரைவில் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

நெகிழவைத்த நிகழ்வு

திருமணம் ஆன பின் வந்த எனது பிறந்தநாள் அன்று, பணிகளை முடித்துவிட்டு தாமதமாகத்தான் வீடு திரும்பினேன். வீட்டுக்கு வரும்போது என் கல்லூரி நண்பர்கள், திரையுலக நண்பர்கள் அனைவருமே இருந்தார்கள். எனக்கு சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என நினைத்து அவ்வளவு பேரையும் அழைத்து பிறந்தநாளைக் கொண்டாட வைத்தார். குடும்பத்தைத் தாண்டி எனக்கு நண்பர்களைத்தான் ரொம்ப பிடிக்கும். அவர்களை அழைத்து ஒருங்கிணைப்பது என்பது சாதாரண வேலையல்ல. அன்றைய தினத்தில் அவர் மேற்கொண்ட முயற்சியால் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்