175 மாரத்தான்களில் ஓடிய 81 வயது ஹிலாரி!

By திலகா

இங்கிலாந்தில் ராப் பரோ லீட்ஸ் மாரத்தான் போட்டி பிரபலமானது. ராப் பரோ பெயரில் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பல ஆச்சரியங்களும் சாதனைகளும் அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் ஹிலாரி வாரம் நிகழ்த்திய சாதனையும் ஒன்று. 81 வயது ஹிலாரி பங்கேற்றே 175வது மாரத்தான் போட்டி இது என்பது எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது!

52 வயதில்தான் ஹிலாரிக்கு ஓடுவதில் ஆர்வம் வந்தது. முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு, 55 வயதில் முதல் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக மாரத்தான்களில் பங்கேற்று வருகிறார். அதனால் இங்கிலாந்தில் மாரத்தான் வீரர்கள் மத்தியில் ஹிலாரி பிரபலமானவராக இருக்கிறார்.

கடந்த 14ந் தேதி நடைபெற்ற லீட்ஸ் மாரத்தானில் பங்கேற்ற ஹிலாரி, 8 மணி நேரம் 15 நிமிடங்களில் ஓட்டத்தை நிறைவு செய்தார்.

“நான் இலக்கை அடைந்ததும் ஏராளமான மக்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். வாழ்த்து மழையில் நனைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை. என் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் ஓட ஆரம்பித்தேன். இன்று 175வது மாரத்தானை ஓடி முடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், என் இலக்கு 300 மாரத்தான்களில் ஓட வேண்டும் என்பதுதான். அதற்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும். பொழுதுபோக்குக்காக நான் மாரத்தானில் ஓடவில்லை.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை ஓட்டப்பயிற்சி எனக்கு வழங்கியிருக்கிறது. தினமும் அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு, ஓடுவேன். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவேன்.

இப்படித் திட்டமிட்டுச் செய்யும்போது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கிறது. வயதாகிவிட்டதே என்கிற எண்ணம் வருவதில்லை. நல்ல செயலுக்காக ஓடும் இந்த மாரத்தான் வீரர்களின் வாழ்த்து, என்னை அடுத்த மாரத்தானில் பங்கேற்க வைப்பதற்கான உற்சாகத்தை வழங்கியிருக்கிறது” என்கிறார் ஹிலாரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE