அ
ரசியல் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலை அறிய முற்படுவதே அரசியல்தான். நம்மைச் சுற்றி நடைபெறும் அனைத்துச் சம்பவங்களும் சமூக நிகழ்வுகளுமே அரசியல்தான் என்ற புரிதல் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், அதற்கான காரணங்களை அவரவர் சார்ந்திருக்கும் கட்சி விசுவாசம் காரணமாகவோ மேம்பட்ட அரசியல் உணர்வுகள் காரணமாகவோ உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் வேறுபடுகிறோம்.
எல்லாமே அரசியல்தான்
அரசியல் என்பதைக் கட்சி அமைப்பாக மட்டுமே பலரும் நினைக்கின்றனர். தங்கள் தலைவர் அல்லது தலைவி பற்றியோ கட்சியின் சிறப்புகள் பற்றியோ பேசுவதே அரசியல் என்றும் தங்களுக்கு எதிராக உள்ள மாற்று அமைப்பினரை வசை பாடுவது இன்னொருவிதமான முக்கிய அரசியலாகவும் கருதப்படுகிறது. இங்கே அரசியல் பேசக் கூடாது என்று சொல்வதுகூட அத்தகைய மனநிலையிலிருந்துதான்.
நீங்கள் தினமும் அருந்தும் தேநீர் விலை ஏன் உயர்ந்தது? உங்கள் வாகன எரிபொருளின் விலை இன்று காலை திடீரென உயர்ந்தது எப்படி? வரதட்சணையின் தோற்றுவாய் எது? தீர்வு என்ன? இவை போன்ற பல கேள்விகளையும் அவற்றுக்கான விடைகளை அறிய முயற்சிப்பதையும் உள்ளடக்கியதுதான் அரசியல்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அரசியல் தேவையில்லை. பெண்களுக்கு எதற்கு அரசியல்? எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது; இந்த நடிகர் அரசியலுக்கு வரலாமா? அந்தச் சாமியார் ஏன் கற்பின் பெருமை குறித்துக் கதறுகிறார்? உனக்கெல்லாம் அரசியலின் அரிச்சுவடி தெரியுமா? இப்படிப் பல கேள்விகளும் சந்தேகங்களும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அரசியலுக்கு உட்பட்டே நிகழ்கின்றன.
வேட்டைத் தொழிலோடு பெண் தலைமையில் அமைந்த ஆதி கால சமூக அமைப்பு வீழ்த்தப்பட்ட பிந்தைய காலங்கள் பெண்ணடிமைத்தனத்தையும், சுரண்டலையும், அதை எதிர்த்த கலகங்களையும், புதிய சமூக மாற்றங்களையும் உள்ளடக்கிய சமூக நிகழ்வுகள் யாவும் அரசியல்தான்.
அரசு மீது பய பக்தி?
அரசியல் என்பது சமூக நிகழ்வுகள் எனில் அரசு என்பதன் பொருள் என்ன? இந்தச் சமூகத்தை நிர்வகிக்கிற அல்லது மத்தியஸ்தம் செய்கிற அல்லது அநீதிக்கெதிரான கலகத்தை ஒடுக்குகிற பலம் பொருந்திய முக்கிய அமைப்புதான் அரசு.
அந்த அமைப்பின் தோற்றம், அதன் வளர்ச்சி, அதன் நோக்கம் ஆகியவை குறித்து வரலாற்று ஆசிரியர்கள் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு முன்வைத்துள்ளார்கள்.
ஆன்மிகக் கருத்தோட்டம் மேலோங்கிய காலகட்டங்களில் அதர்மத்தைச் சரிசெய்ய கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே அரசென்று நம்பப்பட்டது. ஒரு லட்சம் அத்தியாயங்களுடைய அரசியல் சாஸ்திரத்தை பிரம்மன் உபதேசித்தார் என்றும் அறத்தைப் பற்றி மனுவும் அரசியலைப் பற்றி பிரகஸ்பதியும் கலைகளைப் பற்றி நந்தியும் முறையே பிரித்துக்கொண்டு அரசியல் சாஸ்திரத்தைத் தொகுத்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.
மனு என்பவரை அரசனாக பிரம்மாதான் அனுப்பினார் என்றும் அது உபரிசரஸ் மன்னன் காலம்வரை சொடர்ந்தது என்றும் பல புராணக் கதைகளோடு இணைந்ததாகவே அரசு என்ற அமைப்பு குறித்த பய பக்தியை மக்களிடத்தில் ஊட்டியிருந்தார்கள்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர், “பண்டைய இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்குத் துர்க்கையும் நிதித் துறைக்கு லட்சுமியும் கல்வித் துறைக்கு சரஸ்வதியும் அமைச்சர்களாக இருந்தனர்” என அவரே பிரம்மாவாக இருந்து இலாகாவைப் பிரித்துக் கொடுத்ததைப்போலப் பேசியதும் இதன் வழிவந்த தொடர்ச்சிதான்.
ஆதிக்கத்தை நிலைநாட்டும் அமைப்பு
மனிதகுல சமூக வளர்ச்சியை ஆய்வுசெய்த வரலாற்று ஆசிரியர்கள் மேற்காணும் கருத்தை ஆணித்தரமாக மறுத்துள்ளார்கள். “மனிதர்கள் மனிதர்களாக இருந்தவரை அரசு தேவையில்லாமல்தான் இருந்தது. அவர்கள் விலங்கு நிலைக்கோ அரக்க நிலைக்கோ இழிந்துவிட்டதால் சமுதாயம் நிலைகுலைந்து நின்றது. இதை நிலைநிறுத்த ஒரு சக்தி அல்லது சாதனம் தேவைப்பட்டது. அதுதான் அரசு” என்கிறார் புராதன இந்தியாவில் அரசியல் பற்றி ஆய்வுசெய்த வரலாற்று ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா.
ஆதிகாலச் சமூக அமைப்பில் அரசு என்ற அமைப்பே இல்லையென்றும் உடைமை வர்க்கம் உருவான பின்னர் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் இரண்டு வர்க்கங்களுக்கிடையிலான மோதல்களிலிருந்தே அரசு தோன்றியது எனவும் அந்த ஆய்வு சொல்கிறது. தோழர் ஏங்கல்ஸ், “தனி நபர்கள் புதிதாகச் சேர்த்த சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் தனி உடமையைப் பாதுகாப்பதற்கும் மென்மேலும் செல்வத்தைப் பெருக்குவதற்குமான ஒரு ஸ்தாபனமே அரசமைப்பாக மாறியது” என விளக்குகிறார். 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் அரசமைப்பின் கட்டமைப்புகள் குறித்து மிக நுட்பமாக விளக்குகிறது.
அரசியல் உரிமை இல்லையா?
இவை யாவும் தந்தைவழிச் சமுதாய அமைப்பு தோன்றிய பிறகே வளர்ச்சியுற்றதால் அதன் ஆதிக்கம் ஆணைச் சார்ந்தே இருந்தது. முடியரசோ குடியரசோ அது ஆண்களின் தலைமையைக் கொண்டிருந்தது. எங்கோ சில இடங்களில் சில பெண்கள் அதுவும் அரசக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கு வந்தார்கள்.
இத்தகைய வரலாறுகளோடு இணைந்த ஒன்றாகவே பெண்களின் அரசியல் பங்கேற்பை அல்லது பங்கேற்க முடியாத அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்காலத்திய அரசியல் சூழல் பெண்களுக்கு உகந்ததாக உள்ளதா என்பதும் கேள்விக்குறியதே. ஆணாதிக்கக் கண்ணோட்டம் நிரம்பியிருக்கும் இந்தச் சமூக அமைப்பில் ஒரு பெண் இன்னொரு ஆணோடு அரசியல் அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பெண் மீது பழிபோடுவதும் அவை உட்கட்சி அரசியல் என்ற முறையில் நாகரிகம் கருதி யாரும் தலையிடாமல் போவதும் பல அமைப்புகளில் நடக்கவே செய்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசியல் கட்சிகளின் பெண்ணுகளுக்கான சம உரிமை குறித்த பார்வை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஒதுக்கப்படும் பெண்கள்
கட்சி அமைப்புகளுக்குள் பெண்கள் இயங்குவதை அவர்களது குடும்ப ஆண்கள் அனுமதித்தால் மட்டுமே தொடரமுடிகிறது. இந்தத் தடைகளை மீறி வரும் பெண்கள், அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகவும் சில குறிப்பிட்ட பொறுப்புகளில் மட்டும் அங்கம் வகிப்பவர்களாகவுமே உள்ளனர். அதிலும் குறிப்பாக அரசியல் கட்சி அமைப்பின் பல பிரிவுகளில் ஒன்றாக ‘மகளிர் அணி’ என்ற பிரிவை உருவாக்கி அந்த அமைப்புகளை நிர்வகிக்கிற பொறுப்புகள் மட்டுமே பெண்களுக்கு வழங்கப்படுகின்றன.
பெண்ணுரிமை குறித்த எந்தப் புரிதலும் இல்லாத பெண்கள், குடும்பப் பெண்ணைப்போல அரசியலுக்கு வந்த அடிமைப் பெண்ணாகவே இருக்கிறார்கள். பெண்களைச் சமமாக நடத்துவதற்கோ மதிப்பதற்கோ அங்கே அதற்கான தலைமைகளும் இல்லை. பெண்ணின் கணவர் அல்லது தந்தையைச் சார்ந்தே கட்சி அமைப்புகளில் பெண்களைப் பற்றிய மதிப்பும் மதிப்பீடும் உள்ளது.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்ட அழைப்பிதழ்களில் ஒரு பெண்ணின் பெயரைக்கூட பிரசுரிக்காத பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் உண்டு. கடைசிவரை பேச முடியாமல் ஏமாற்றத்தோடு மேடையை விட்டுக் கீழிறங்கும் பெண்களும் இருக்கிறார்கள் .
ஆண்கள் மட்டுமே நிரம்பி வழியும் அரசியல் மேடைகளில் பெண் இருப்பது மிகக் கடினமும்கூட. சட்டமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் பேசுவதற்குரிய அனுமதியை அவர்களது கட்சியின் கொறடா மூலமே பெற முடியும். கடைசி நேரத்தில் கொறடா பெயரை மாற்றிவிட்டதால் பேச முடியாத ஏமாற்றத்தோடு புலம்பிய பெண் உறுப்பினர்களும் உள்ளனர்.
சமூக மாற்றம் தேவை
இந்தச் சமூக அமைப்பின் ஆணாதிக்க தாக்கத்தோடுதான் அரசியல் கட்சி அமைப்புகளும் உள்ளன. குடும்பம், குழந்தைகள் பராமரிப்பு என்ற வேலைப் பிரிவினையோடு இயங்கும் பெண்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி அமைப்புகளின் முக்கிய இடத்திற்கு வந்துசேர்வதில் பல வகையான தடைகள் இருக்கின்றன.
இவற்றைப் புரிந்துகொண்டு அரசியலில் பெண்களின் பங்கேற்பை உறுதிசெய்ய கட்சி அமைப்புகள் தங்கள் கொள்கைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டியது காலத்தின் கட்டாயம். ஆணாதிக்கத்தைத் தனிப்பட்ட மனிதரின் தவறான கருத்தாகவோ செயலாகவோ கருதுவதைவிட அது சரிபாதியாக உள்ள பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள மனோபாவம் என்பதைப் புரிந்துகொண்டு அதை மாற்றுவதற்கான செயலில் சமூகத்தின் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஈடுபட வேண்டும்.
சமூக மாற்றமே தனிமனித சிந்தனையை மாற்றும். சட்டங்களால் மட்டுமல்ல சமூகத்தின் இருபாலரும் இணைந்த போராட்டங்களால்தான் அதைக் கொண்டுவர முடியும்.
குடிநீர் பிரச்சினையிலிருந்து தங்களைப் பாதிக்கிற அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் சிந்திக்கிற, அதை மாற்றுவதற்கான உத்வேகத்தோடு செயல்படுகிற பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அமைப்பு சார்ந்தோ சாராமலோ செயல்படும் அனைத்துப் பெண்களுமே அரசியல் வானில் சுடர்விடும் நம்பிக்கை நட்சத்திரங்களே என்பதை எதிர்கால வரலாறு நிச்சயம் சொல்லும்!
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு:balabharathi.ka@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago