அ
சாம் மாநிலத்தில் உள்ள படத்ரோபா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்கூர் லதா டேக்கா தனது ஒரு மாத கைக்குழந்தைக்குப் பாலூட்ட சட்டமன்ற வளாகத்திலேயே ஒரு அறை வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து பத்திரிகை ஒன்றின் கேள்விக்குப் பதிலளித்த அசாம் சட்ட பேரவைத் தலைவர் ஹிதேந்திர நாத் கோஸ்வாமி, “சட்டமன்ற வளாகத்தில் பாலூட்டுவதற்கான அறை ஏற்படுத்தித் தருவது கடினம். 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் சட்டமன்ற விருந்தினர் இல்லத்தில் அந்த வசதியை ஏற்படுத்தித் தர முடியும்” என்று கூறியுள்ளார் . மேலும், சட்டமன்ற வளாகத்துக்குள் குழந்தைகளை அனுமதிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னுதாரண நாடுகள்
நமது நாடாளுமன்றத்தைப் போன்ற ஆஸ்திரேலிய செனட் சபை கடந்த ஆண்டு செனட் சபைக்குள்ளாகவே குழந்தைக்குப் பாலூட்டலாம் என்று சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின் மூலம் உலகிலேயே முதன்முறையாக செனட் சபையிலேயே தன் குழந்தைக்குப் பாலூட்டினார் ஆஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் லாரி வாட்டர்ஸ் . தான்சானியா நாட்டு நாடாளுமன்றத்தில் பாலூட்டும் அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது கோரிக்கையில் டேக்கா இதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா அளவுக்கு நாம் சட்டமியற்றாவிட்டாலும், சட்டமன்ற வளாகத்தில் ஒரே ஒரு அறையைப் பாலூட்டுவதற்காக ஒதுக்க முடியாதா என்ன ? எல்லாம் அரை நொடிப்பொழுதில் உத்தரவிடக்கூடிய விஷயம்தான். பணிக்குச் செல்ல வேண்டிய சூழலில் இருக்கும் பாலூட்டும் தாய்மார்களின் இன்னல்கள் குறித்த போதிய புரிதல் மற்றும் அக்கறையின்மைதான் இங்கே பிரச்சினை.
சட்டமன்றங்களுக்குச் சட்டங்கள் பொருந்தாதா?
குழந்தை பிறந்த சில மாதங்களே ஆன நிலையிலும் தன்னுடைய சட்டமன்றச் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்ற சிந்தனை அங்கூர் லதா டேக்காவுக்கு இருக்கிறது. அதற்கு ஏதுவாகப் பாலூட்டும் அறை வேண்டுமென்று அவர் கேட்டும், அது வழங்கப்படாமல் இருப்பது என்ன வகையான நியாயம்? இத்தனைக்கும், டேக்கா மத்தியிலும், அசாம் மாநிலத்திலும் ஆளும் பாஜக கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வேறு.
பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ள அனைத்துப் பணியிடங்களிலும் பாலூட்டும் அறை வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. 50 பெண் ஊழியர்களுக்கு மேல் இருந்தால் நிர்வாகமே குழந்தைகள் பராமரிப்பு மையம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அரசு சட்டமும் இயற்றி உள்ளது. ஆனால், பல சட்டங்களை இயற்றும் சட்டமன்றத்திலேயே பாலூட்டும் அறை ஒதுக்கும் கடமையைத் தட்டிக் கழிப்பதற்குச் சாக்குகள் சொல்லப்படுகின்றன.
‘பெண்கள் அரசியலுக்கு வரத் தேவையில்லை, மீறி வந்தால் அவர்கள் இதுபோன்ற இன்னல்களை எதிர்கொள்ளட்டும்’ என்ற ஆண்மையச் சிந்தனையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது
தமிழகம் பெருமைப்படலாம்
2016 ஆகஸ்ட்டில் சென்னையின் 39 பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் அறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். பாலூட்டும் தாய்மார்களுக்கு இதனால் ஏற்பட்ட நிம்மதி சொல்லில் அடங்காதது. இந்த நிம்மதி ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஏன் மறுக்கப்பட வேண்டும்?
நீண்ட பயணத்தின் தொடர்ச்சி
பெண்களின் எழுச்சியும் அவர்கள் எழுப்பிய கேள்விகளுமே பொது இடங்களில் அவர்களுக்கான வெளியைச் சிறிய அளவிலாவது பெற்றுத் தந்துள்ளன. திருநங்கையர்களின் போராட்டங்களின் விளைவாகத்தான் ‘அவர்களுக்கென்று தனிக் கழிப்பறை அமைக்கப்பட வேண்டும்’ என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டேக்காவின் கோரிக்கையும் பெண்களுக்கான பொதுவெளி கோரும் பயணத்தின் தொடர்ச்சிதான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
36 mins ago
சிறப்புப் பக்கம்
40 mins ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago