இ
ந்தியாவின் இறகுப் பந்தாட்ட (பாட்மிண்டன்) வரலாற்றில் 2017 ஆகஸ்ட் 27-ம் தேதி ஒரு மைல்கல்! அன்றுதான் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று உலக அரங்கில் சாதனை படைத்தனர். பி.வி.சிந்து வெள்ளியை முத்தமிட, சாய்னா நேவால் வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
கடந்த ஞாயிறு அன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக சிந்து இறுதிப் போட்டியில் நுழைந்தார். இதற்கு முன்பு 2013, 2014-ம் ஆண்டுகளில் அரையிறுதிவரை முன்னேறி, வெண்கலப் பதக்கத்துடன் அவர் வெளியேறினார்.
மூன்று சாதனைகள்
இந்த முறை சிந்து மிக முக்கியமான மூன்று சாதனைகளைப் படைத்தார். முதலாவது, உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது முறையாகப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை. இரண்டாவது, உலக பாட்மிண்டன் வரலாற்றில் பெண்கள் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது நீண்ட நேரப் போட்டி ஸ்காட்லாந்தில் சிந்து விளையாடிய இறுதிப் போட்டிதான்! சிந்துவும் ஜப்பானின் நொசோமி ஒக்குஹராவும் 110 நிமிடங்களுக்கு விளையாடினார்கள் என்று சொல்வதைவிட, கடைசிவரை போராடினார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பெண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் நீண்ட நேரப் போட்டி (111 நிமிடங்கள்) இதே நொசோமி ஒக்குஹராவுக்கும் சீனாவின் ஷிசியான் வாங் ஆகியோருக்கு இடையே மலேசியாவில் 2011-ம் ஆண்டு நடந்தது. அந்தப் போட்டியிலும் ஒக்குஹராதான் வென்றார்.
சிந்துவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒக்குஹரா அவ்வளவு எளிதில் வெல்ல முடியவில்லை. 21-19, 20-22, 22-20 என்ற செட் கணக்கைப் பார்த்தாலே புரியும், ஒக்குஹராவுக்கு சிந்து எப்படி ‘டஃப்’ கொடுத்திருக்கிறார் என்று! அதிலும் இரண்டாவது ஆட்டத்தில் 73 ‘ஷாட்’கள் கொண்ட ஒரு ‘ரேலி’யை ஆடி, அந்த ஆட்டத்தில் 22 புள்ளிகள் பெற்று தனதாக்கிக் கொண்டார் சிந்து.
2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இதே ஒக்குஹராவை வென்றுதான், இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் சிந்து. அந்தத் தோல்விப் புண்ணுக்கு, இப்போது பெற்றிருக்கும் வெற்றி மூலம் மருந்திட்டுக்கொண்டார் ஒக்குஹரா.
வெற்றி கேட்கும் வலிமை
கால்கள் காற்றில் பறக்க, கைகள் இறகுப்பந்து வரும் திசையை நோக்கி நீள, கண்கள் எதிராளியின் அசைவுகளைப் பின்தொடர என பாட்மிண்டன் விளையாட்டு வியர்வையையும் வலியையும் கோருவது. ஒரு ஆட்டக்காரரின் உடலும் உள்ளமும் முழுமையாகத் தயாராக இருந்தால் மட்டுமே இப்படியொரு ஆட்டம் சாத்தியம்.
சிந்துவுக்கு உள்ளம் தயாராக இருந்தது, ஆனால் உடல் சொன்ன பேச்சை முழுமையாகக் கேட்கவில்லை. அதனால்தான் மூன்றாவது செட்டில் 12-12 என்ற புள்ளிகளில் ‘நெக் டு நெக்’ ஆக போட்டி விறுவிறுப்பைத் தொட்ட நேரத்தில் சுதாரித்து விளையாட முடியாமல், மைதானத்தில் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார். அதனால் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி நடுவர் அவருக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
சிறந்த ‘ஃபிட்னெஸ்’ இருந்தால் மட்டுமே ஜப்பானிய, சீன ஆட்டக்காரர்களுக்கு எதிராக நமது ஆட்டக்காரர்கள் தாக்குப்பிடிக்க முடியும். நமது ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் சறுக்கும் இடம் இதுதான். இதை மட்டும் சரி செய்துவிட்டால் தங்கம் கைக்கு எட்டும் தூரம்தான்.
அந்த நாள் அருகில்
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இறுதிவரை வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையோடு, அந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் 2015-ம் ஆண்டு படைத்த சாய்னா நேவால், இந்த ஆண்டு வெண்கலம் வென்றிருக்கிறார். ஒருவேளை அரையிறுதியில் சாய்னாவிடம் ஒக்குஹரா தோல்வி அடைந்திருந்தால், இறுதிப் போட்டியில் சிந்துவும் சாய்னாவும் எதிரெதிராக யுத்தம் செய்திருப்பார்கள்.
“அப்படியொரு காலம் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்கிறார் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த். அப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். வலிமையும் வாய்ப்பும் இருக்கிறபோது அவர்கள் இருவரில் ஒருவர் எதிர்காலத்தில் தங்கம் வெல்வது நிச்சயம்!
கடந்த ஞாயிறு, விளையாட்டு ரசிகர்கள் தோனியிடமிருந்து சிந்துவை நோக்கித் திரும்பினார்கள். கிரிக்கெட் சேனலிலிருந்து பாட்மிண்டன் சேனலுக்கு மாற கைகள் ரிமோட்டைத் தேடின. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்கூட, சிந்து தங்கம் வெல்ல பிரார்த்தித்தனர். இந்த மாயம்தான் அன்று சிந்து செய்த மூன்றாவது முக்கிய சாதனை!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago