மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மருத்துவத் துறை தோல்வியடைந்திருப்பதாகச் சொல்கிறார். சண்டிகர் மருத்துவமனையில் சமீபத்தில் பத்து வயதுக் குழந்தை ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள்.
“இந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையும் எப்படி இருக்கும்?” என்ற கேள்வி வழக்கறிஞர் இந்திராவைப் பயமுறுத்தியிருக்கிறது. அதுதான் அவரை, வல்லுறுவால் பாதிக்கப்பட்ட இந்தப் பத்து வயது சிறுமிக்குப் பத்து லட்சம் இழப்பீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகவைத்திருக்கிறது. இந்த ஒரு வழக்குக்காக மட்டும் அவர் போராடவில்லை. இதுபோன்று பத்து, பன்னிரண்டு வயதுகளில் வல்லுறவால் பாதிக்கப்பட்டு கர்ப்பிணிகளாக நிராதவராகத் தவிக்கும் பல சிறுமிகளுக்காகவும் போராடுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாளடைவில் மறக்கப்பட்டு, சமூகத்தால் துடைத்தெறியப்படுகிறார்கள். இன்றைய சமூகம் தன்னுடைய அறநெறிகளை இழந்துவருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த ‘கர்ப்பிணிக் குழந்தை’களின் பின்னணியில் எழுப்பப்படும் பெரிய கேள்விகளை உச்ச நீதிமன்றம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் நீதிமன்றத்தின் கதவுகளைத் தொடர்ந்து தட்டிக்கொண்டிருப்பதாக அவர் சொல்கிறார். அவரது நேர்காணலில் இருந்து...
இந்த வழக்கு எழுப்பும் பெரிய கேள்விகள் என்ன?
வல்லுறவால் பாதிக்கப்பட்டுக் கருவுறும் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் மருத்துவத் துறையின் தலையீடும் உதவியும் கிடைப்பதில்லை. மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தின் (Medical Termination of Pregnancy Act) ஐந்தாவது பிரிவின்படி, உயிரைப் பாதுகாப்பதற்காகக் கருக்கலைப்பு செய்யலாம். வல்லுறவால் பாதிக்கப்பட்ட சண்டிகர் சிறுமியின் வழக்கிலும் ஐந்தாவது பிரிவின்படி, கருக்கலைப்பு என்பது உயிரைப் பாதுகாக்கும் நடவடிக்கைதான்.
25 அல்லது 35 வயது பெண்களைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால், ஒரு சிறுமியை மருத்துவரிடம் அழைத்துவரும்போது, அந்தச் சிறுமியின் இடுப்புப் பகுதி வளர்ச்சியடைந்திருக்காது என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவளது உடல் குழந்தைபேறுக்குத் தயாராக இருக்காது. அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது இறந்துவிட நேரிடலாம்.
10CHGOW_INDIRA_JAISING1_ இந்திரா ஜெய்சிங்வல்லுறுவால் பாதிக்கப்படும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தான சூழலே நிலவுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் இந்தச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவைப் பயன்படுத்தி இப்படிப் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய முடியும்.
ஆனால், இதெல்லாம் தெரிந்திருந்தும் மருத்துவர்கள் இதைச் செய்வதில்லை. அவர்கள் இப்படிப்பட்ட வழக்கைக் கைகழுவிவிடுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.
அதனால்தான், வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள் - சிறுமிகள், நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். இந்த மோசமான சூழ்நிலை மருத்துவத் துறையின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
மருத்துவர்கள் ஏன் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை?
இந்திய தண்டனைச் சட்டத்தின் 312-வது பிரிவில் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். இந்த 312-வது பிரிவின்படி, கருக்கலைப்புக்குக் காரணமாக இருப்பது தண்டனைக்குரிய குற்றம். அதனால், மருத்துவத் துறையினர் கவலைப்படுகின்றனர்.
அவர்களை நாடிவரும் பத்து, பன்னிரண்டு வயது சிறுமிகளுக்கு மருத்துவ உதவி செய்ய மறுக்கின்றனர். அந்தச் சிறுமி மகப்பேறு காலத்தின்போது உயிரிழக்க நேரிடலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த நடைமுறை சரியில்லை. அவர்களது தொழில்தர்மத்தின் படி, இந்த உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
வல்லுறவால் பாதிக்கப்பட்ட சண்டிகர் சிறுமியின் விஷயத்தில், மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த அறுவை சிகிச்சையை அவர்களால் இப்போது செய்ய முடியும்போது, ஏன் அந்தச் சிறுமி நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்னால் செய்திருக்கக் கூடாது?
சண்டிகர் சிறுமி வயிற்று வலி என்று கூறும்போதுதான், அவள் கருத்தரித்திருக்கும் விஷயம் தெரியவந்தது. பத்து, பன்னிரண்டு வயது சிறுமிகள் கருத்தரிப்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால், இந்த விஷயம் மருத்துவருக்குத் தெரியவந்தவுடன், கருக்கலைப்புச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவைப் பயன்படுத்தி அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இதில் ஒரு மாநிலத்தின் பொறுப்பு என்ன?
வல்லுறவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குக் கருக்கலைப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், அவளுக்கு அவசர மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். மாநிலத்தின் தனியார், அரசு மருத்துவமனை என எல்லா மருத்துவமனைகளிலும் அந்தக் குழந்தைக்கு உதவி கிடைக்க வேண்டும். மருத்துவமனைகளுக்குக் கருக்கலைப்புச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவைப் பற்றித் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மாநிலத்துக்கு இருக்கிறது. இதைப் பற்றி நிரந்தர வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவ நிறுவனங்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதைக் கண்காணிப்பதற்கு ஒரு மேற்பார்வை அல்லது கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.
வல்லுறவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஏன் உச்ச நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டீர்கள்?
எல்லா மாநிலங்களிலும் வல்லுறவால் பாதிக்கப்படுபவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டமிருக்கிறது. ஆனால், இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும். கோவாவில் இழப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சம். சண்டிகரில் இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சம். இன்னும் சில மாநிலங்களில் ஒரு லட்சம் ரூபாய்தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஏன் ஒரு பொதுவான இழப்பீட்டுத் திட்டத்தை வகுக்கக் கூடாது? நிர்பயா திட்டத்தில் ரூ. 200 கோடிக்குமேல் பயன்படுத்தாமல் இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்று சேரவில்லையென்றால், இந்தப் பணத்தால் என்ன பயன்?
சிறுமிகள் கருத்தரிக்கும் வழக்குகளை அவலங்கள் என்று மட்டும் சொல்ல முடியாது, அவை சமூகம் அறநெறிகளை இழந்துகொண்டிருப்பதற்கான அடையாளம் என்று ஏன் சொல்கிறீர்கள்?
வல்லுறவால் பாதிக்கப்பட்ட சண்டிகர் சிறுமிக்குக் குழந்தை பிறந்தவுடன், அந்த மருத்துவமனை ‘இரண்டு குழந்தைகளும் நலமாக இருக்கிறார்கள்’ என்ற ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஆமாம், தாயும் சேயும் என இருவருமே குழந்தைகள். ஒரு பத்து வயது சிறுமியால் எப்படித் தாயாக இருக்க முடியும்?
அந்தச் சிறுமி தாய் மாமனால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அதனால், அந்தக் குடும்பத்துக்கு இரண்டு சமரசங்கள் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அந்தச் சிறுமியின் தந்தை மருத்துவமனைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஏறி இறங்கிச் சோர்வடைந்திருக்கிறார். இதற்கிடையில் ஊடகத்தின் கவனமும் அவர்களைப் பாதித்திருக்கிறது. அதனால், நான் தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் பதிவுசெய்ய வேண்டியிருந்தது.
அந்தத் தந்தைக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கும் இருக்கிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக நீதிமன்றத்தில் இன்னும் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்படவேயில்லை. அந்தக் குடும்பத்துக்கு இன்னும் இழப்பீடும் கிடைக்கவில்லை.
நாம் அறநெறிகளை இழந்துவிட்டோம் என்பதுதான் இதற்குக் காரணம். பத்து வயதுப் பெண் கர்ப்பிணியானதற்கான காரணம், இந்தச் சமூகத்துக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்தக் கோபமும் வரவில்லை. அந்தச் சிறுமியின் தந்தை, குழந்தையை வளர்க்க மறுத்துவிட்டார். இந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையும் என்னவாகும், அடுத்த என்ன என்ற கேள்வியைத்தான் இப்போது நாம் கேட்க வேண்டியிருக்கிறது.
தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: என். கௌரி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago