அகம் புறம்: ஊட்டம் இழந்து தவிக்கும் பெண்கள்

By எல்.ரேணுகா தேவி

அம்மாவாக, தங்கையாக, மனைவியாக, தோழியாக எனப் பெண்ணின் எந்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் பிம்பம்தான் நமக்கெல்லாம் சட்டென்று தோன்றும். இப்படி ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களில் பெரும்பாலோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது மத்திய அரசின் கணக்கெடுப்பு.

தாயே சேயின் நலம்

நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் ஊட்டச்சத்து வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது. ‘பச்சிளம் குழந்தைகளுக்கு சரியான பாலூட்டுதல் மற்றும் வழிகாட்டுதல்’ என்பதுதான் இந்த ஆண்டு ஊட்டச்சத்து வாரத்தின் மையக்கரு. பச்சிளம் குழந்தைகளின் உடல்நலன் பாதுகாக்கப்பட வேண்டிய அதேநேரம், தாய்மார்களின் உடல்நலனும் கவனிக்கப்பட வேண்டியது அவசியம். மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குடும்ப சுகாதார மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 15 வயது முதல் 49 வயதுவரை உள்ள இந்தியத் தாய்மார்களில் ஐம்பது சதவீதம் பேர் ரத்தசோகைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

25CHLRD_Umaஊட்டச்சத்து நிபுணர் உமா ராகவன்

“உடலில் உள்ள ரத்த நாளத்தின் வேலை என்பது ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதாகும். உடலுக்கு போதிய இரும்புச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதபோது ரத்த சோகை ஏற்படுகிறது. இதன்காரணமாக ரத்த நாளங்கள் உடல் முழுவதும் போதிய அளவு ஆக்ஸிஜனை எடுத்து செல்ல முடியாமல் போகும். இதனால் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படும்.

கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்த சோகை ஏற்பட்டிருந்தால் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் உற்சாகம் இழந்தும் காணப்படுவார்கள். தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த ரத்த சோகைக் குறைபாட்டை megaloblastic anemia என மருத்துவரீதியாக அழைக்கிறார்கள். இதனால் கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த தாயின் நலனை சார்ந்தே உள்ளது” என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் உமா ராகவன்.

குழந்தைகளையும் பாதிக்கும் ரத்த சோகை

மேலும் இந்த ஆய்வில், பெண்களுக்கு சராசரியாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவைவிட 22 சதவீத பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் பதினோரு வயதுக்கு உட்பட்ட 58 சதவீதமான இந்தியக் குழந்தைகள் ரத்த சோகைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்கள் 53 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

“இன்றைய தலைமுறைக் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதே குறைந்துவிட்டது. வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடினால்தான் அவர்களால் எந்த அளவுக்கு, எவ்வளவு மணி நேரம் விளையாட முடிகிறது என்பதைக் கண்காணிக்க முடியும். அல்லது விளையாடி கொண்டிருக்கும்போதே குழந்தைகள் சோர்வாகி விடுகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும். ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு வீடியோ கேம், கைபேசிகளுடன் பொழுதைக் கழிக்கிறார்கள். இதனால் இன்றைய குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதே கஷ்டமாக உள்ளது.

ரத்த சோகைக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கவனச் சிதறல், ஞாபக ஆற்றல் குறைவாக இருக்கும். வீட்டு பாடம், ஓவியம் வரைதல் போன்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கவனம் செலுத்தி செய்யும் விஷயங்களை, அவர்களால் செய்ய முடியாது. குறிப்பாக எட்டு முதல் பன்னிரெண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுக்குதான் அதிகளவு ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வயதில் பொதுவாக பெண் குழந்தை பருவம் அடைவதால், இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக இரும்புச் சத்துள்ள கீரை, பழங்கள், பேரீச்சை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்” என்கிறார் உமா ராகவன்.

தமிழகத்தை பொறுத்தவரை 55 சதவீதமான பெண்கள் ரத்த சோகைக் குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் 14 சதவீதமான பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுய கவனம் அவசியம்

நாடு முழுவதும் சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட மாதிரிக் கணக்கெடுப்பில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுவரை மற்றவர்களின் நலனில் பெண்கள் அக்கறை எடுத்துக்கொண்டதுபோல், இனிமேல் தங்கள் உடல்நலனிலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பெண்களின் உடல்நலனைப் பாதுகாப்பதில் அரசு கூடுதல் கவனம் எடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.

# இந்திய அளவில் 15 வயது முதல் 49 வயதுவரை உள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பு இது.

# நாடு முழுவதிலும் 53 சதவீதம் பெண்களுக்கு ரத்த சோகைக் குறைபாடு உள்ளது. 22 சதவீதமான பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

# தமிழகத்தில் 55 சதவீதம் பெண்கள் ரத்த சோகைக் குறைபாட்டுடன் உள்ளனர். 14 சதவீதம் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்