பெண்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்த பிறகு ஒழிந்திருக்க வேண்டிய, மாறியிருக்க வேண்டிய பல நடைமுறைகள் நமது சமுதாயத்தில் இன்னும் தொடர்வதை விந்தை என்று சொல்வதா வேதனை என்று சொல்வதா? “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று சொல்வார்கள். நமது சமுதாயத்தில் புதியன புகுதல் உண்டு. ஆனால், பழையன கழிதல் இல்லை” என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அடிக்கடி குறிப்பிடுவார். அதிலும் சில விஷயங்கள் முன்பைவிட மோசமாகப் பரிணாமம் அடைந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த வரதட்சிணை.
சீதனம் பெண்ணின் சொத்து
தமிழ்நாட்டில் பல சாதிய சமுதாயங்களின் பண்டைய திருமண முறையில் வரதட்சிணை என்ற சொல்லே இடம் பெற்றதில்லை. மாறாக நம்மில் பலரும் ‘சீதனம்’ என்ற வழக்கையே கடைப்பிடித்துவந்தோம். சீதனம் என்ற சொல் ‘ஸ்திரீ தனம்’ என்பதிலிருந்து வந்தது என்பார்கள். தாயின் வழி வருகிற சொத்து பெண் மக்களுக்குச் சொந்தம். அசையும் சொத்துக்களாகிய நகை, பாத்திரங்கள், உடைகள் போன்றவை வழிவழியாகப் பெண்களின் சொத்துக்களாகப் பாவிக்கப்பட்டுவந்தன.
ஒரு பெண், பிறந்த வீட்டிலிருந்து கொண்டுவரும் சொத்துக்களை அவள் புகுந்த வீட்டார், எந்நிலையிலும் சொந்தம் கொண்டாட முடியாது. ஒருவேளை இடையில் அந்தப் பெண் வாரிசின்றி இறந்துவிட்டால், அந்தச் சொத்துக்கள் அனைத்தும் அவள் பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் பழக்கமும் இருந்திருக்கிறது. இந்த நடைமுறை பெண்ணுக்கான குறைந்தபட்ச சொத்துரிமையாகப் பண்டைய சமுதாயத்தில் இருந்துவந்திருக்கிறது.
வரதட்சிணை என்னும் கொடுமை
பரிசம் போடுதல், நிச்சயதார்த்தம் என்ற சடங்கின் முன்னோடி. இதில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்குப் பணம் கொடுத்து, அந்தப் பெண்ணை மணமுடிப்பதற்கு நிச்சயம் செய்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் பணம் இருப்பவர்களுக்கு. இல்லாதவர்கள், பொன் வைக்குமிடத்திலே பூ வைப்பார்கள். ஆனால், இதெல்லாம் தலைகீழாக மாறி இன்றைக்கு வரதட்சிணை எனும் பெயரில் பெண்ணைப் பெற்றவர்கள் பெரும் பாடுபடுகிறார்கள்.
பணமாகவும், நகையாகவும், உடைகளாகவும் வரதட்சிணை கொடுக்க வேண்டும். மணமகனுக்கு வாகனம், நகை, வீடு என்று வரதட்சிணைப் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இன்று சீதனம், பரிசம் எல்லாம் மறைந்து போய் வரதட்சிணையே நடைமுறையில் பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.
வரதட்சிணை, சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த அளவில் அது வெற்றிபெற்றிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். பழைய எல்.ஐ.சி விளம்பரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அது பெண்ணைப் பெற்றவர்களைப் பார்த்து மருமகன்களுக்காகச் சேமிக்கக் கூறி புதிய பாலிசியை அறிமுகப்படுத்தியது. நாகர்கோவிலில் செயல்பட்ட மகளிர் விடுதலை மன்றம், அந்த விளம்பரத்தை எதிர்த்துக் குரலெழுப்பிய பின்பே அது நிறுத்தப்பட்டது. அப்படித் தவிர்க்க முடியாத விதியாக வரதட்சிணை நம் மனங்களில் படிந்துபோயிருக்கிறது.
எங்கும் வரதட்சிணை மயம்
பொதுவாக எல்லாச் சடங்குகளையும் தங்கள் சாதி பார்த்துச் செய்யக்கூடிய மக்கள் வரதட்சிணையை மட்டும் அனைத்து சாதிக்காரர்களுக்கும் உரியதாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். கல்வியும் நகர நாகரிகமும் சமுதாயத்தின் மேல்தட்டில் இருப்பவர்களைப் பார்த்து அவர்களைப்போல் நடக்கும்படி மற்ற மக்களை வழிநடத்துகின்றன. அந்த வகையில்தான் பார்ப்பனர்கள், ஒரு சில மேல்சாதிக்காரர்களின் சாதிய வழக்கமான வரதட்சிணை என்ற நடைமுறை, இன்று அனைத்து மக்களுக்குமானதாக மாறி நிற்கிறது.
பல பெண்களின் வாழ்க்கையை மோசமாகத் தீர்மானிப்பதும் பல பெண்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்பட முடியாமல் போவதற்கும் வரதட்சிணையே முக்கியக் காரணம். பல பெண்களுக்குத் திருமணத்துக்குப் பின் தொடரும் கொடுமையாகவும் இது உருவெடுப்பதை என்னவென்பது?
பெண்ணுக்குச் செய்ய வேண்டிய திருமணச் செலவுக்குப் பயந்தே கள்ளிப்பால் ஊற்றிப் பெண்களை சிசுவிலேயே அழித்துவிடுகிற கொடுமையும் நடக்கிறது. “அவ்வளவு செலவு செய்ய, நாங்க எங்க போவோம்?” என்ற கேள்வியில் அவர்கள் கொலை செய்பவர்களாக அல்ல, இந்தச் சமுதாயத்தால் கொலை செய்யப்படுபவர்களாகவே காட்சியளிக்கிறார்கள்.
இந்த வரதட்சிணையோடு தொடர்புள்ள இன்னொரு விஷயம் திருமணத்துக்குச் செய்யப்படும் செலவு. பெரும்பாலும் குலதெய்வக் கோயில்களில், கொஞ்சம் வசதி இருந்தால் வீட்டு வாசலில் பந்தல் போட்டு நடத்தப்பட்டுவந்த திருமணங்கள் இன்று திருமண மண்டபங்களுக்கு மாறிவிட்டன. இது ஏன் நடந்தது? ஏன் அந்த எளிமை நம் கையைவிட்டுப் போனது? அதிலும் திருமண மண்டபங்களின் ஆடம்பரங்களும் அலங்காரங்களும் எல்லைமீறிப் போய்விட்டன.
பலியாகும் பெண்களின் வாழ்வு
கடந்த இருபதாண்டுகளாக நம் வீடுகளுக்குள் வந்து, குறிப்பாக நமது பெண்களின் மூளையை ஆட்சிசெய்துகொண்டிருக்கும் சின்னத்திரை மெகா தொடர்களுக்கு ஒரு பங்கிருக்கிறது. முதன்முதலில் பிரபலமாக வந்துகொண்டிருந்த ஒரு தொடரில், அந்தக் குடும்பத்தில் நடைபெறும் ஒரு திருமணம் மட்டும் ஒரு வாரத்துக்கு மேலாகக் காட்டப்பட்ட நினைவிருக்கிறது. இதில் திரைப்படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இது இளவயது பெண்களை அதிகம் பாதித்தது. அவர்கள் மனக்கோட்டையில் பிரம்மாண்டமான திருமணங்கள், வாழ்க்கையின் அத்தியாவசிய அடையாளங்களாகிவிட்டன. கூண்டிலிருந்து விடுதலையாக வேண்டிய அந்தப் பறவைகள் தங்களுக்கு அலங்காரமான, ஆடம்பரமான கூண்டுகள் வேண்டுமெனக் கேட்கத் தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் பல இடங்களில் வரதட்சிணை வரனின் கோரிக்கையாக மட்டுமல்லாமல், அந்த வீட்டிலிருந்து விடைபெற்றுப் போகிற பெண்ணின் கோரிக்கையாகவும் மாறியது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று தன்னைச் சுற்றியிருக்கும் காட்சி ஊடகங்களுக்கு அவர்கள் பலியானது. இரண்டாவது, போகிற இடத்தில் தனக்கான ஊன்றுகோல், தான் கொண்டு செல்லும் பொருட்கள்தான் என்று அவர்கள் நம்பியது. அதேநேரம் நாம் மறக்கக்கூடாதது, எந்தவொரு சமுதாயத்திலும் ஒட்டுமொத்த சமுதாயப் புரட்சிக்காக அனைத்துத் தனிமனிதர்களும் காத்துக்கொண்டே இருப்பதில்லை.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago