‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்பது போல், ‘தாமரைக்கும் தமிழ் என்று பேர்’ எனச் சொல்லலாம். ‘தமிழ்’ என்னும் வார்த்தையில் முறையே த – வல்லினம், மி - மெல்லினம், ழ் - இடையினம் என்று இருப்பது போன்றே, ‘தாமரை’ என்னும் வார்த்தையிலும் தா - வல்லினம், ம – மெல்லினம், ரை - இடையினம் ஆக இருப்பது தற்செயல் அல்ல என்பதைக் கடந்த 25 ஆண்டு காலத் திரைப்பாடல்கள் மூலம் அவர் நிரூபித்திருக்கிறார்.
மற்ற திரைப்பாடலாசிரியர்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் (500 பாடல்களுக்கும் குறைவாக) பாடல்களை எழுதியிருந்தாலும் தனக்கென தனி ரசனை உலகத்தை உருவாக்கியிருப்பவர் தாமரை. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் நெஞ்சில் தான் எழுதிய பாடல்களின் வழியாக இதயத் தாமரையாய் தினம் தினம் பூத்துக் கொண்டிருப்பவரிடம் மோனையாய் நாம் முன் வைத்த கேள்விகளுக்கு எதுகையாய் அவரின் பதில்கள்:
‘தென்றல் எந்தன் நடையைக் கேட்டது’ பாடலை தாமரை எழுதியதற்கும் ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே’ பாடலை எழுதிய பாடலாசிரியர் தாமரைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு மனிதனின் வாழ்க்கையில் 25 ஆண்டு காலம் என்ன வளர்ச்சியை, மாற்றத்தை ஏற்படுத்துமோ அதைத்தான் என்னிடமும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதிலிருந்து திரைப்படப் பாடல்கள் கேட்டு ரசித்த ரசனையும், பள்ளியில் கற்றுக்கொண்ட தமிழ் இலக்கணமும் கைகொடுத்தன. பாடல் எழுத ஒரு வெகுளித்தனம் இருந்தால் நல்லதுதான்! ஆனால் 25 ஆண்டுகளில் அது அறவே அற்றுப்போய் நல்ல முதிர்ச்சி வந்துவிட்டது.
தாமரைக்குள் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்னும் திட்டமிடல் ஏற்கெனவே இருந்ததா, தற்செயலாக நிகழ்ந்த ஒன்றா?
திட்டமிடல் இருந்தது என்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். முதல் தலைமுறைப் படிப்பாளிகள், அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிலிருந்த பெற்றோர் என மிக மிக எளிய பின்னணியைக் கொண்டது என் குடும்பம். கோவையிலிருந்து சென்னை வருவதென்பது இமயத்தில் ஏறி கொடிநாட்டுவது போலத்தான்! எனவே, என் ரகசியக் கனவைக் கனவாகவே மனதில் புதைத்துக்கொண்டு படிப்பு, பட்டம், வேலை, சம்பளம் என்கிற வழியில் நடந்தேன். ஆனால், காலத்துக்கு என்றொரு கணக்கு இருக்கிறதல்லவா?
மிகச் சிறு வயதிலேயே புத்தகங்கள் படிக்கத் தொடங்கிவிட்டேன். பாடல் கேட்பதற்கு முன்பே புத்தக வாசிப்பு தொடங்கிவிட்டது எனலாம். அந்தத் தனிப்பட்ட என் படிப்பார்வம், இலக்கியத் தேடல் பின்னாளில் என்னை சென்னை கொண்டுவந்து சேர்த்துப் பாடலாசிரியர் கனவை நனவாக்கிவிட்டன!
தாமரையின் சிறப்பே தனித் தன்மையான வார்த்தைகள். ‘வசீகரா’, ‘கலாபக் காதலா’, ‘அழகிய அசுரா’. இந்த வார்த்தை வீச்சுகளுக்கு, படங்களை / பாடல்களை எழுதுவதில் மிகவும் தெரிவொடுக்கமாக (Selective) இருப்பது காரணமா?
இல்லை. வார்த்தை வீச்சுகளுக்குக் காரணம் என் இயல்பான திறமைதான்! சிறு வயதிலிருந்தே இலக்கியப் பரிச்சயம் உண்டென்பதால், சொற்களுக்குக் குறைவில்லை. இதற்கெல்லாம் பெரிதாக மெனக்கெடுவதில்லை. மாற்றி யோசிப்பதுதான் தனித்தன்மை!
பொதுவாகப் பெண்களைத்தான் மயிலுக்கு ஒப்பிடுவார்கள். காரணம் மென்மை, கண்கவர் அழகு, ஆட்டம் போன்ற கூறுகள். ஆனால், உண்மை யில் ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு. படத்தில் கதாநாயகன் காவலதிகாரி என்பதால் மென்மையும் கம்பீரமும் ஒருசேரக் கொண்ட உவமையாக ‘கலாப’த்தைப் பயன் படுத்தினேன். கலாபம் என்றால் தோகை என்று பொருள். கலாப மயில் என்று சொல்ல வேண்டியதில்லை. கலாபம் என்றாலே மயில் என்று ஆகி விட்டது. ஆண் மயிலை ஆணுக்கே பயன்படுத்திய முதல் கவிஞர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
நீங்கள் பாடல் எழுத வரும்போது பெண் பாடலாசிரியர்களுக்குப் பெரிய வெற்றிடம் இருந்தது. இப்போது எப்படி உணர்கிறீர்கள்? ஆரோக்கியமான போட்டி இருப்பதாக நினைக்கிறீர்களா?
இன்று எந்தத் துறையில்தான் பெண்கள் இல்லை? அடுப்படியை விட்டு வெளியே வந்தவர்கள் ஆகாயத்தில் போய் நிற்கிறார்கள். இனி பெண்களின் பங்களிப்பைத் தவிர்த்துவிட முடியாது. மடை திறந்த வெள்ளம் போலாகிவிட்டது. சொல்லப்போனால், ஆண்-பெண் என்கிற வேறுபாடே குறைந்துவருகிறது எனலாம். திரைப்படத் துறையிலும் ஏராளமானவர்கள் வந்து விட்டார்கள். எனக்கிருந்த தடைகள் அவர்களுக்கில்லை. அவரவர் திறமைக்கேற்ப வெற்றியும் அடைகிறார்கள்.
எந்த மாதிரியான சூழலுக்கும் பாடல்களை எழுதுவதற்கு ஒப்புக் கொள்வீர்களா? அல்லது ஏதேனும் கொள்கைகள் வைத்திருக்கிறீர்களா?
அநாவசியமான ஆங்கில வார்த்தைகள் கலக்க மாட்டேன், ஆபாசமாக எழுத மாட்டேன், இரட்டை அர்த்தம் தொனிக்க எழுத மாட்டேன் என்பவை நிலையான நிபந்தனைகள்! ஆரம்ப காலத்தில் நான் எழுதாவிட்டாலும் என் அனுமதியின்றி சேர்க்கப்பட்ட, மாற்றப்பட்ட பாடல் வரிகள் உண்டு. போகப்போக என் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற பாடல் சூழல்களோடுதான் என்னைத் தேடி வருகிறார்கள்.
சமூகத்தைத் திருத்துகிறேனோ இல்லையோ, கெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். புகை, மது, போதை இவற்றைத் தூக்கிப் பிடிக்கும் பாடல்களுக்கு அறவே மறுப்பு! என் பாடல் வாய்ப்புகளை நான்தான் தேர்ந்தெடுக்கிறேன். எனவே, என் வரையறைகளைக் காப்பாற்றிக் கொள்கிறேன்.
‘நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே’ போன்ற பாடல்களை எழுதுவதற்குப் பெரிய மெனக்கெடல் இருக்காதுதானே?
இதுபோன்ற துள்ளிசைப் பாடல்களை எழுதும்போது கூடுதல் கவனத்தோடு இருப்பேன். என்னைப் பற்றி நன்கறிந்த இயக்குநர்களுக்கு மட்டுமே எழுதுவேன். தவறான தொனி வந்துவிடக் கூடாது என்றால் மெனக்கெடத்தானே வேண்டும்?
இயக்குநர் - இசையமைப்பாளர் - பாடலாசிரியர் கூட்டு, ஒரு பாடலின் வெற்றிக்குப் பெரிதாக உதவும்தானே?
எந்தவொரு பாடலின் வெற்றிக்கும் இந்த மூன்று கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. தரமான பாடல்களை மூவர் தொடர்ந்து கொடுத்தால் அங்கே ‘வெற்றிக் கூட்டணி’ உண்டாகும். அதைத் தக்கவைத்துக்கொள்வது அவரவர் திறமை! ‘மின்னலே’ படத்தின் பாடல்கள் அடைந்த வெற்றியால்தான் கௌதம்-ஹாரிஸ்-தாமரை கூட்டணி உண்டானது. ஆனால், அந்தப் படம் வெளிவரும்போது அனைவரும் புதியவர்கள்தானே?
தான் எழுதும் பாடலைப் பாடகர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கும் பொறுப்பு பாடலாசிரியருக்கும் உள்ளதா?
ஆமாம். பாடலாசிரியர் நிச்சயம் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். நான், என்னை வைத்துக்கொண்டுதான் பாடல் பதியவேண்டும் என்று வலியுறுத்துவேன். ஆனால், திரைத்துறை இருக்கும் பரபரப்பில் பாடலாசிரியர்கள் இல்லாமலே பாடல் பதிவு செய்துவிடுகிறார்கள். நான் பங்குபெறும் ஒவ்வொரு பாடல் பதிவிலும் பாடகர்களுக்கு நான்தான் பாடல் வரிகளைக் கொடுத்து, அவர்களுக்கு உச்சரிப்பும் கற்றுத் தருவேன். மொழி தெரியாத பாடகர்கள் எனில் பல மணி நேரம் தமிழ்ப் பயிற்சி வகுப்பு வைத்து எனக்கு நிறைவு வந்த பிறகே விடுவேன். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோர் நானில்லாமல் பதிவு செய்யத் தயங்குவார்கள். நள்ளிரவு ஆனாலும் நாள்கணக்கில் ஆனாலும் உடனிருந்து பதிவுசெய்து கொடுப்பேன்.
‘மூப்பில்லாத் தமிழே’ பாடல் பனித்துளிக்குள் பாற்கடலை அடைக்கும் பணி. எப்படி அதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டீர்கள்?
எந்த முன்தயாரிப்புமின்றி மடமடவென்று அப்படியே எழுதிக்கொடுத்த பாடல் இது! நான் தமிழ்த் தேசியவாதி! என் நோக்கம், தமிழும் தமிழினமும் இழந்த பெருமைகளை மீண்டும் அடைய வேண்டும் என்பது! இதுபோன்ற பாடலுக்காகத்தான் காத்திருந்தேன் என்று சொல்லலாம். ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து அழைப்பு வந்தபோது, தமிழ் அரசியல் குறித்து விரிவாகப் பேசினேன். வியந்து போன அவர் எல்லாவற்றையும் விரிவாக எழுதுங்கள் என்று உற்சாகம் அளித்தார்.
தமிழின் பழமை, தொன்மைகளை ஒரு பாதியிலும் அதன் நவீன வீச்சை மற்றொரு பாதியிலும் எழுதிக் கொடுத்தேன். திட்டமிட்டதை விட நீண்ட பாடல் அது! பதியாமல் விட்ட வரிகளை வைத்து இன்னொரு பாடல்கூட அமைக்கலாம். தமிழ்ப் பற்றாளர்களுக்கும் தமிழின் எதிரிகளுக்கும் ஒரே நேரத்தில் சேதி சொல்லும் பாடல் அது.
திரைப்பாடல்களைத் தாண்டி, இளைய தலைமுறையினரோடு சேர்ந்து சுயாதீனப் பாடல்கள் உருவாக்கத்தில் பங்கெடுப்பீர்களா?
நிச்சயமாக! அதற்கான பாதை திறந்திருக்கிறது. பலர் என்னை அணுகியிருக்கி றார்கள். நிதானமாகத் தேர்ந்தெடுத்து எழுதுவேன். இளைய தலைமுறையின ரோடும் என் பயணம் இருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago