வானவில் பெண்கள்: ராஜபாட்டையில் புது இளவரசி!

By ஜெய்

நா

டகக் கலைஞர் முருக பூபதியின் ‘குகை மரவாசிகள்’ நாடகம், சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி தேசிய நாடகப் பள்ளி விழாவில் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் தோன்றிய ஒரே ஒரு பெண் கலைஞர் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தினார். மூதாய் கதாபாத்திரத்தில் தனி ராஜாங்கம் நடத்தினார். உலகெங்கிலும் உள்ள நாடக ஆளுமைகள் பங்கேற்ற அந்த விழாவில், தன் நடிப்பாற்றல் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார் அவர்.

நாடக இயலைக் கற்றுத் தேர்ந்த ஆளுமைகள் மத்தியில் துணிச்சலாக நடித்த அந்தப் பெண் பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தியவர் என்பது ஆச்சரியம் தரலாம். டெல்லி, கொல்கத்தா, சென்னை, கோவா, திருச்சூர், பெங்களூரு என இந்தியாவின் மிகப் பெரிய நாடக விழாக்களுக்கு தற்போது பறந்துகொண்டிருக்கும் அவர், ஆஷா.

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் என்னும் கடற்கரைக் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா, 13 வயதில் தனிப்பட்ட காரணங்களால் படிப்பைப் பாதியில் கைவிட்டு, வீட்டுக்குள்ளே தன்னை பூட்டிக்கொண்டவர். தன்னால் எதுவுமே செய்ய முடியாது என நினைத்து மனக்கதவுகளையும்கூட அடைத்துக்கொண்டார். இந்தத் தனிமைச் சிறையிலிருந்து அவரை மீட்க அவருடைய தாய் நினைத்தார். அந்த நேரத்தில் கத்தோலிக்கத் திருச்சபை தொடங்கிய ‘முரசு’ கலைக்குழுவில் அவரைச் சேர்த்துவிட்டார்.

வாழ்வை மாற்றிய முரசு

முரசுக் கலைக் குழு அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்துச் சூழலில் வளர்ந்த அவருக்குத் தனது ஊரிலிருந்து நாகர்கோவிலுக்குச் சென்று கலைக் குழுவினருடன் இணைந்து செயல்படுவது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் கலைக் குழுவில் செயல்பட்டுவந்தனர். இது அவருக்குப் புதுமையாக இருந்தது. ஆனாலும் மனதில் ஒருவிதத் தயக்கம்.

“முரசு குழுவுக்குப் போன முதல்நாள். இனி இந்தப் பக்கமே திரும்பிவரக் கூடாதுன்னுதான் நினைச்சேன்” என்கிறார் ஆஷா. ஆனால் அதை மீறி, அந்தக் கலைக் குழுவில் அவர் 13 ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். தாழ்வுமனப்பான்மையுடன் இருந்தவருக்கு ‘முரசு’ நம்பிக்கை கொடுத்துள்ளது. அங்கு கும்மி, கரகம், ஒயிலாட்டம் உட்பட கிட்டத்தட்ட 25 நாட்டார் கலைகளை அவர் கற்றுத் தேர்ந்தார்.

நவீனத்தின் பாதையில்

முரசுக் கலைக் குழு அனுபவத்துக்குப் பிறகு யதேச்சையாக நவீன நாடகம் அவருக்கு அறிமுகமானது. முருக பூபதியின் நாடகமான ‘சூர்ப்பணகை’யைப் பாண்டிச்சேரியில் பார்த்தது, அவரது வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை.

“அந்த நாடகத்தில் ஒரு அக்கா ஆக்ரோஷமா நடித்தார். அது எனக்கு ஒருவிதமான பரவசத்தைக் கொடுத்தது. நாமும் இதுபோல நடிக்க வேண்டும் என்ற வேட்கை அப்போது ஏற்பட்டது” எனச் சொல்கிறார் ஆஷா. அதன் பிறகு அந்த நடிகையைத் தேடிப் போய்ப் பாராட்டினார். அவர், லிவிங் ஸ்மைல் வித்யா. அதன் பிறகு முருக பூபதியின் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவில் இணைந்தார்.

முருக பூபதியின் ‘மணல் மகுடி’ நாடகக் குழுவின் பயிற்சி அவருக்குப் புதிய பார்வையைத் தந்தது. எழுத்தாளர் கோணங்கி உள்ளிட்ட கோவில்பட்டி எழுத்தாளர்களின் அறிமுகமும் மேலும் நம்பிக்கையை வளர்த்தது. ஆனால், முருக பூபதியின் நாடகங்கள் அவருக்குச் சவாலாக இருந்தன. அதற்கு முன் அவர் நடித்திருந்த நாடகங்கள் யதார்த்த பாணியில் அமைந்தவை. ‘மணல் மகுடி’ குழுவின் நாடகங்கள் குறியீட்டுத்தன்மை நிறைந்தவை.

“அதாவது வியட்நாம் போரில் குழந்தைகள் இறந்த செய்தியை நேரடியாகச் சொல்ல மாட்டார். அது ஒரு வசனத்தில் வந்துபோகும். ஆனால், இதையெல்லாம் முன்பே நாடகப் பிரதியாகக் கொடுத்துவிடுவார். அது பற்றி எங்களுடன் உரையாடுவார். இவையெல்லாம் என்னை ஓர் ஆளுமையாக வளர்த்துக்கொள்ள உதவின” என்கிறார் ஆஷா.

விரியும் உலகம்

முருக பூபதியின் நாடகக் குழுவில் ‘குகை மரவாசிகள்’, ‘மாயக்கோமாளிகளின் ஜாலக் கண்ணாடி’ ஆகிய இரு நாடகங்களில் அவர் நடித்துள்ளார். இந்த வாய்ப்பு அவருக்குப் புதிய வாசல்களைத் திறந்துவைத்துள்ளது. பிரளயன், மங்கை போன்ற முன்னணி நாடக ஆளுமைகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பாகவும் இருந்திருக்கிறது.

நாடகத்தில் நடிப்பது மட்டுமல்லாது இப்போது கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியும் கொடுத்துவருகிறார். பிரெஞ்சு நாடக இயக்கமான தியாத்ர் து சொலைல் (theatre du soleil) பயிற்சி முகாமுக்காகச் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தேர்வு நடத்தியுள்ளது. நாடக இயலில் முனைவர் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்தத் தேர்வில், தேர்வு செய்யப்பட்ட சிலரில் ஆஷாவும் ஒருவர்.

இப்போது சினிமா வாய்ப்புகளும் கதவைத் தட்டத் தொடங்கிவிட்டன. ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மாவின் ‘மகளிர் மட்டும்’ படத்தில் தலைகாட்டியிருக்கிறார். “ஆனால் சினிமா எனது லட்சியமல்ல. ஒரு நடிகராக சினிமாவைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் நடித்துப் பார்த்தேன்” எனச் சொல்லும் அவர், “நாடக ஆளுமையாக அறியப்பட வேண்டுமென்பதே என்பதே என் லட்சியம்” என்கிறார். தற்போது ‘மேடை’, ‘கட்டியங்காரி’ போன்ற பல நாடகக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் ஆஷா, தன் லட்சியத்துக்கான ராஜபாட்டையில் நடைபோடுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்