முகங்கள்: குதிரைப்படை நாயகிகள்

By எல்.ரேணுகா தேவி

விநாயகர் சதுர்த்தி, புத்தாண்டு, காணும் பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மக்கள் அதிக அளவில் கூடும் கடற்கரை போன்ற இடங்களில் கூட்டத்தினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், அதிகப்படி கூட்டத்தைக் கலைக்கவும் காவல்துறை குதிரைகளையே பயன்படுத்துகிறார்கள்.

“அன்றைய தினம் குதிரைப்படையை நம்பித்தான் மொத்தக் காவல் துறையும் இருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் கடலுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்வது சவால் நிறைந்தது. நாங்கள் குதிரையைச் செலுத்தும் முறையும் வேகமும் மக்களைக் கடலுக்குள் இறங்காமல் தடுத்துவிடும்” என்கிறார் ஜாஸ்மின்.

கம்பீரமான குதிரைப்படை

பெண் பிள்ளையை வெளியூருக்கு யாராவது வேலைக்கு அனுப்புவார்களா, அதுவும் போலீஸ் வேலைக்கு என்பது போன்ற பிற்போக்குப் பேச்சையெல்லாம் புறந்தள்ளி, சென்னைக் காவல் குதிரைப் படையில் வேலைக்குச் சேர்ந்தார் ஜாஸ்மின். ஊரும் உறவினர்களும் எதிர்த்து நின்றாலும், “மகளே நீ ஊருக்கு வரும்போது ஜான்சிராணியைப் போலதான் வரணும்” என ஜாஸ்மினுக்கு உற்சாகம் அளித்தார் அவருடைய அம்மா. சென்னையில் செயல்பட்டுவரும் குதிரைப் படையில் ஜாஸ்மினும் சுகன்யாவும் பெண் காவலர்கள்.

03CHLRD_JASMINE_ ஜாஸ்மின்

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே குதிரைப்படை செயல்பட்டுவருகிறது. முரட்டுத் தனமான குதிரைகளைக்கூடத் தங்கள் பரிவான பயிற்சியால் அடக்கிவிடுகிறார்கள் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஜாஸ்மினும் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுகன்யாவும். இவர்கள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சென்னைக் காவல் குதிரைப் படையில் பணியாற்றிவருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் காலை நான்கு மணிக்கே தொடங்கிவிடுகிறது இவர்களின் பணி. சுமார் ஐந்து மணிக்கெல்லாம் குதிரைகள் மீது அமர்ந்து கம்பீர நடையுடன் கடற்கரை நோக்கி நடக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அங்கே குதிரைகளுக்கு நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன.

ஊக்கம் தந்த அம்மாக்கள்

தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ. ஆங்கிலம் படித்துள்ள ஜாஸ்மின், இடைநிலை ஆசிரியர் பயிற்சியும் முடித்துள்ளார். தன் அப்பாவைப் போல் காவல்துறையில் சேர விரும்பிய ஜாஸ்மினுக்குத் துணையாக இருந்தவர் அவருடைய அம்மாதான். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜாஸ்மினின் அம்மா, தன் மகளுக்கு எல்லா சுதந்திரத்தையும் கொடுத்தார். அதுதான் அப்பாவின் மறுப்புக்கு இடையிலும் ஜாஸ்மினைக் காவல்துறையில் சேர வைத்தது.

“எங்கள் கிராமத்தில் பெண்களை போலீஸ் வேலைக்கு அனுப்புவதைப் பலரும் இழிவாகப் பேசுவார்கள். ஆனால், பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்யத் தகுதியானவர்கள் என்று அம்மா சொல்வார். உறவினர்கள், கிராம மக்கள் எனப் பலர் அம்மாவின் மனதை மாற்ற முயற்சித்தபோதும், என் விருப்பத்துக்கு அவர் துணையாக நின்றார்.

காவல்துறையில் சேர்ந்த சில நாட்களிலேயே குதிரைப் படைப் பிரிவில் பெண்கள் வேண்டும் என அறிவிப்பு வந்தது. உடனே நான், சுகன்யா, இன்னும் இருபது பெண்கள் விருப்பம் தெரிவித்தோம். பலர் குதிரைகளைக் கையாள முடியாமல் வேறு பிரிவுகளுக்குச் சென்றுவிட்டனர். நானும் சுகன்யாவும் மட்டும்தான் இங்கு இருக்கிறோம்” என்கிறார் பெருமையாக.

த்ரில்லான அனுபவம்

காவல்துறைப் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர் சுகன்யா. ஆனால், தற்போது குதிரைகளுக்காகவே காவல்துறையில் பணியாற்ற ஆசையாக இருக்கிறது என்கிறார்.

“நான் குதிரைப்படைக்கு விருப்பதோடுதான் வந்தேன். அதற்குக் காரணம் என் அம்மாதான். குதிரையை முதன்முதலில் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சாகசத்தைச் செய்யப் போகிறோம் என்ற பூரிப்பு ஏற்பட்டது. முதல் இரண்டு மாதங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. குதிரைப் படைக்கு வரும் எல்லோரையும் முதலில் குதிரைகளுடன் பழகவிடுவார்கள்.

பின்னர் குதிரைப்படை வளாகத்தினுள் இருக்கும் பகுதியில் குதிரையின் மேல் அமர்ந்து சிறுசிறு பயிற்சிகளை மேற்கொள்வோம்” என்று சொல்லும் சுகன்யா, தன் குதிரைக்கு ராஜாத்தி எனப் பெயரிட்டுள்ளார்.

“ராஜாத்தி ரொம்ப சேட்டைக்காரி. கடற்கரையில் இருந்து பயிற்சி முடித்துத் திரும்பினால் எப்போதும் பின்னங்கால்களைத் தூக்கி காற்றில் ஒரு உதை விட்டுப் பிறகு மணலில் காலைப் பதித்து வெளியே வரும். அந்த நேரம் கொஞ்சம் பயமாக இருந்தாலும், அது த்ரில்லான அனுபவம்” என்கிறார் புன்னகையுடன்.

குறும்புக்காரக் குதிரைகள்

03CHLRD_SUGUNYA சுகன்யா right

“ஒருமுறை குதிரைகளுடன் இணக்கமாகப் பழகிவிட்டால் எந்தக் குதிரையை வேண்டுமானாலும் நம் சொல்லுக்குக் கீழ்ப்படிய வைக்க முடியும்” எனத் தன்னுடைய குதிரையைத் தடவிக் கொடுத்துக்கொண்டே சொல்கிறார் ஜாஸ்மின். “பார்க்கத்தான் குதிரைகள் முரடான விலங்குபோல் இருக்கும். நன்றாகப் பழகிவிட்டால் நம் தோளிலேயே சாய்ந்துகொள்வது, நாம் அதைக் கவனிக்காவிட்டால் செல்லமாகக் கடித்துக் கவனிக்க வைப்பது போன்ற சேட்டைகளில் குதிரைகள் ஈடுபடும்” என்கிறார்கள் இருவரும்.

ஒரு முறை பட்டாசு சத்தம் கேட்டதால் ஜாஸ்மினின் குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டது. இதனால் அவருக்கு வலது கை மணிக்கட்டு பகுதி உடைந்துவிட்டது. அதன் பாதிப்பு தற்போதுவரை இருக்கிறது என்கிறார் அவர். அதேபோல் புத்தாண்டு விழாவின்போது கூட்டநெரிசலைச் சமாளித்துக்கொண்டிருந்த சுகன்யாவை அவருக்கு முன்னால் இருந்த குதிரை தன்னுடைய பின்னங்காலால் உதைத்துள்ளது. அதனால் காலில் ஏற்பட்ட தழும்பு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் மறையவில்லை என்கிறார் சுகன்யா.

“சிலர் எங்கள் வேலையின் தன்மை தெரியாமல் குதிரை ஓட்டுகிறவர்கள்தானே என இழிவாகப் பேசுவார்கள். நாங்கள் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. துணிச்சலும் தன்னம்பிக்கையும் இருப்பவர்களால்தான் குதிரையை ஓட்ட முடியும். அந்தத் துணிச்சல் எங்களிடம் இருப்பதால்தான் தனித்துத் தெரிகிறோம்” என்கின்றனர் திடமான குரலில்.

குதிரைப் படையில் சேர...

குதிரைப் படையில் சேர்வதற்கெனத் தனித் தேர்வு இல்லை. காவல் துறையில் சேர நடத்தப்படும் தேர்வுவெழுதி தேர்ச்சி பெறுவதுதான் இதற்கு அடிப்படைத் தகுதி. பயிற்சி முடிந்ததும் பணி ஆணை வழங்கப்படும். அந்த நேரத்தில் குதிரைப் படையில் ஆட்கள் தேவைப்பட்டால் குதிரைப்படையில் பணியாற்ற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்