நாடு சுதந்திரமடைந்த சில ஆண்டுகளில் காட்டுயிர்ப் பாதுகாப்புக்காக எத்தனையோ திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் இன்றுவரை வெற்றிகரமானதாகக் கருதப்படுவது, ‘புராஜெக்ட் டைகர்’ எனும் புலிப் பாதுகாப்புத் திட்டம்.
இந்திரா காந்தியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு இந்திரா காந்தி மட்டுமே அடையாளமாக இருக்கிறார் என்று பலர் நினைக்கிறார்கள். இந்தத் திட்டத்தைத் தொடங்கியது வேண்டுமானால் இந்திரா காந்தியாக இருக்கலாம். ஆனால், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதில் இன்னொரு பெண்ணுக்கும் முக்கியப் பங்குண்டு. அவர், ஆன் ரைட்.
உலக இயற்கை நிதியத்தின் (WWF) இந்தியக் கிளையின் நிறுவனர்; இந்தியக் காட்டுயிர் வாரியத்தில் சுமார் 19 ஆண்டுகள் உறுப்பினராகப் பதவி வகித்தவர்; மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிசா, பிகார், அருணாசலப் பிரதேசம், மேகாலயா, அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய 7 மாநிலக் காட்டுயிர் வாரியங்களின் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தவர் எனப் பல பெருமைகள் கொண்டவர் ஆன் ரைட். வெளிநாட்டவராக இருந்தபோதும் இந்தியராகவே வாழ்ந்தார்.
காடுகள் தந்த இன்பம்
1929-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார் ஆன் லெயார்ட். அவருடைய தந்தை அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்தில் (மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஒருங்கிணைந்த பகுதி) ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்தார். காடுகள் நிறைந்த அந்தப் பகுதியில் ஆனின் இளமைக் காலம் கழிந்தது.
‘ரூப் காளி’ என்ற யானையின் மீது சவாரி செய்யப் பழகிய ஆன், காட்டுக்குள் யானை சவாரி செய்துகொண்டே பறவை நோக்குதலிலும் ஈடுபட்டுவந்தார். அவருக்கு ஈப்பிடிப்பான் பறவை மிகவும் பிடித்தமானதாக இருந்தது. தனது 12 வயதில் சுவிட்சர்லாந்துக்குக் கல்வி கற்கச் சென்றவர், 17 வயதில் இந்தியாவுக்குத் திரும்பினார். அவருக்கு 21 வயது ஆனபோது, பாப் ரைட் என்பவரை மணந்தார். அன்று முதல் ஆன் ரைட் ஆனார்.
அந்தத் தம்பதியினர் பிகார் காடுகளுக்குச் சென்று, அங்கே குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் வேட்டையாடும் ‘சமூக வேட்டைக்காரர்களாக’ (சோஷியல் ஹன்ட்டர்) இருந்தனர். தனக்குப் புலியை வேட்டையாட வேண்டும் என்ற எண்ணமிருந்தும், தன்னால் ஒரு புலியைக்கூட வேட்டையாட முடியவில்லை என்று ‘சாங்க்சுவரி ஆசியா’ சுற்றுச்சூழல் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கியால்தான் சுட முடியவில்லையே தவிர, கேமராவால் நிறைய புலிகளைச் ‘சுட்டிருக்கிறார்’.
வறட்சி தந்த மனமாற்றம்
இந்நிலையில் 1968-ம் ஆண்டு பிகாரில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, காடுகளில் நிறைய உயிரினங்கள் நீரின்றி உயிரிழந்தன. அந்த நிலையிலும்கூட, ஆங்காங்கே இருந்த சில நீர்நிலைகளில் மறைவான பகுதி ஒன்றை ஏற்படுத்தி, அங்கு நீரருந்த வரும் உயிரினங்களைச் சிலர் கள்ள வேட்டையாடினர். அந்தக் கொடுமையைப் பார்த்த பிறகு, வேட்டையாடுவதைக் கைவிட்டார் ஆன் ரைட்.
அப்போது இந்தத் தம்பதியும், இயற்கையியலாளர் எட்வர்ட் ப்ரிட்சார்ட் ஜீ என்பவரும் இணைந்து அந்தக் காட்டில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த உயிரினங்கள் சிலவற்றை மீட்டனர். காட்டுக்குள்ளிருந்த நீர்ப்படுகைகள் சிலவற்றில் துளையிட்டு, சிறிய அளவிலான நீர்நிலைகளை உருவாக்கினர். அதோடு அந்தக் காட்டுக்கு அருகிலிருந்த 17 கிராமங்களுக்கும் இவர்கள் தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்தனர்.
புலிகள் பாதுகாப்பு தொடக்கம்
1969 நவம்பர் 27 அன்று உலக இயற்கை நிதியத்தின் இந்தியக் கிளையை, டெல்லியில் இந்திரா காந்தி தொடங்கிவைத்தார். கல்கத்தாவிலிருந்த ஆன் ரைட்டின் வீட்டிலிருந்துதான் அந்தக் கிளைக்கான பணிகள் நடைபெற்றுவந்தன.
இதற்கிடையில் கல்கத்தா நியூ மார்க்கெட் பகுதியில் பல கடைகளில் புலித்தோல் விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் ஆன் ரைட்டுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரும் அவருடைய நண்பரும் சுற்றுலாபயணிகள்போல் வேடமணிந்து அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்துக்குப் புறம்பாகப் புலிகளை வேட்டையாடுவது மட்டுமல்லாமல், முறையான அனுமதி இல்லாமல் ஏராளமான புலித்தோல் ஏற்றுமதி செய்யப்படுவதையும் அறிந்தார் ஆன் ரைட்.
இதுகுறித்து 1970-ம் ஆண்டு ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் ஆன் ரைட் கட்டுரை ஒன்றை எழுதினார். அது 1971-ம் ஆண்டு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இந்தக் காரணங்களால், இந்தியப் புலிகள் மீது சர்வதேச வெளிச்சம் பாய்ந்தது. எனவே, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி புலிகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிலொன்றாக, 1972-ம் ஆண்டு ‘ஆபரேஷன் டைகர்’ எனும் திட்டத்துக்காக ஒரு குழுவை இந்திரா காந்தி ஏற்படுத்தினார். அதில் ஆன் ரைட்டை உறுப்பினராக, தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் சேர்த்தார் இந்திரா.
10penindru_annewright4.jpg1973 ஏப்ரல் 1 அன்று ‘புராஜெக்ட் டைகர்’ திட்டம் உதயமானது. முக்கிய உறுப்பினராக ஆன் ரைட் இருந்த அந்தக் குழு, இந்தியாவின் முதல் ஒன்பது புலிக் காப்பகங்களை அறிவித்தது. அந்தப் பட்டியலில் பிகாரின் பாலாமவ், அசாமின் மானஸ் காட்டுப் பகுதிகள் இடம்பெற ஆன் ரைட்டே காரணமாக இருந்தார். அதன் பிறகு நடைபெற்றதெல்லாம் வரலாறு. 1980-ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை, இந்தியக் காட்டுயிர் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்க வைத்ததில் ஆன் ரைட்டுக்கு முக்கியப் பங்குண்டு.
புலிகள் தவிர சைபீரியக் கொக்கு, வெண்சிறகு காட்டு வாத்து (வொயிட் விங்க்ட் வுட் டக்) போன்ற பறவைகளைப் பாதுகாக்கவும் ஆன் ரைட் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை. காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பாகத் தன் பணிகளுக்காக 1983-ம் ஆண்டு ‘மெம்பர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ (எம்.பி.இ.) விருது வழங்கப்பட்டது.
இந்தியக் காண்டாமிருகங்களைக் காப்பதற்காக அசாமில் ‘ரைனோ ஃபவுண்டேஷன்’ அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் இருந்துவருகிறார் ஆன் ரைட். தற்போது தாயின் வழியில் அவருடைய மகள் பெலிண்டா ரைட்டும் காட்டுயிர்ப் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago