பக்கத்து வீடு: ரூபி பள்ளி சென்ற கதை!

By எஸ். சுஜாதா

ல்லோருக்கும் எளிதாகக் கிடைப்பவைகூடச் சிலருக்குப் போராடினால்தான் கிடைக்கின்றன. அப்படிப் போராடியவர்களில் ஒருவரான ரூபி பிரிட்ஜஸ், வரலாற்றில் அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்.

அமெரிக்காவில் இனவெறி தலைதூக்கியிருந்த காலகட்டம் அது. அமெரிக்கர்களுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் இடையே கல்வி, வேலை, போக்குவரத்து என்று அனைத்திலும் பாகுபாடுகள் நிலவியதை எதிர்த்து நீண்ட காலம் குடிமையுரிமைப் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அதன் விளைவாக 1954-ம் ஆண்டு அமெரிக்கர்கள் மட்டும் படித்துவந்த பள்ளிகளில் இனி ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் படிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

3chsuj_ruby.jpg ரூபி சிறுமியாக right

தீர்ப்பு வந்த அதே ஆண்டில் செப்டம்பர் 8-ம் தேதி மிசிசிபியில் குத்தகை விவசாயம் செய்துகொண்டிருந்த பெற்றோருக்குப் பிறந்தார் ரூபி பிரிட்ஜஸ். குடும்பம் நியூ ஆர்லியன்ஸுக்கு இடம்பெயர்ந்தது. தொலைவில் இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான மழலையர் பள்ளியில் நான்கு வயது ரூபி படித்துவந்தார்.

வீட்டுக்கு வெகு அருகிலேயே இருந்த அமெரிக்கர்கள் படித்துவந்த வில்லியம் ஃபிரான்ட்ஸ் பள்ளியில் தன் மகளைச் சேர்க்க விரும்பினார் ரூபியின் அம்மா.

தீர்ப்பு வந்தாலும் பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அனுமதித்துவிடக் கூடாது என்பதில் பல்வேறு தரப்பினரும் உறுதியாக இருந்தனர். அதனால் கடினமான நுழைவுத் தேர்வை வைத்திருந்தனர். நுழைவுத் தேர்வு எழுதவரும் குழந்தைகள், தோல்வியடைந்து மீண்டும் பழைய பள்ளிக்கே சென்றுகொண்டிருந்தனர்.

ரூபியை நுழைவுத் தேர்வுக்கு அனுப்பினார் அவருடைய அம்மா. தேர்ச்சி பெற்ற ஆறு குழந்தைகளில் ரூபி மட்டுமே அந்தப் பள்ளியில் சேர விரும்பினார்.

இனவெறியின் வெளிப்பாடு

விஷயம் வெளியில் தெரிந்ததும் அமெரிக்கர்கள் கொதித்துப் போனார்கள். தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் எந்தக் காரணம் கொண்டும் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கக் குழந்தை படிப்பதை அனுமதிக்க முடியாது என்றார்கள். சட்டம் ரூபிக்கு ஆதரவாக இருந்ததால் அந்தப் பகுதியில் அமெரிக்கர்கள் படிக்கும் பள்ளிகளில் முதன்முறையாக, ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கக் குழந்தை சேர்க்கப்பட்டாள். ஆனாலும், தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான வழிகளும் தந்திரங்களும் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

3chsuj_ruby1.jpg ரூபி தற்போது

செப்டம்பர் மாதம் பள்ளி செல்ல வேண்டிய ரூபி, நவம்பர் 14 அன்று முதல் முறையாகத் தன் அம்மாவுடன் பள்ளிக்குச் சென்றுசேர்ந்தாள். இவருக்கு முன்னால் இரண்டு மார்ஷல்களும் பின்னால் இரண்டு மார்ஷல்களும் காவலுக்கு வந்தனர். நடுவில் எந்தவிதப் பயமும் இன்றி கம்பீரமாகத் தன் பையைப் பிடித்தபடி நடந்து சென்றாள் ரூபி.

ஆக்ரோஷத்துடன் திரண்டு நின்ற மக்கள், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்தனர்; கூச்சலிட்டனர். இனவெறி குறித்தெல்லாம் அறியாத ரூபி, அது ஒரு பண்டிகை என்று நினைத்தாள். நிலைமை மோசமானதால் உடனடியாக முதல்வர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

அமெரிக்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்கப்போவதாக மிரட்டினார்கள். சிலர் பள்ளியைத் துறந்து வெளியேறினார்கள். ரூபியின் அப்பாவுக்குக் கவலை அதிகரித்தது. மீண்டும் பழைய பள்ளிக்கே போய்விடலாம் என்றார். ஆனால், ரூபியின் அம்மா அதை மறுத்தார்.

“எத்தனையோ ஆண்டுகள் போராடிப் பெற்ற இந்த உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது. இன்று நாமும் நம் குழந்தைகளும் படக்கூடிய கஷ்டங்கள், எதிர்காலத்தில் ஏராளமான குழந்தைகளின் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

ஒதுக்கப்பட்ட ரூபி

இரண்டாவது நாளும் ஏராளமான எதிர்ப்புகளுக்கு இடையே பள்ளியில் நுழைந்தாள் ரூபி. ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கக் குழந்தைக்கு எங்களால் பாடம் எடுக்க முடியாது என்று ஆசிரியர்கள் சொன்னார்கள். பள்ளி நிர்வாகம் செய்வதறியாது திகைத்தது. பாஸ்டனிலிருந்து புதிதாக வந்திருந்த பார்பரா ஹென்றி மட்டும், பாடம் எடுப்பதற்கு முன்வந்தார். அதனால் ஹென்றி எடுக்கும் வகுப்புகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப விரும்பாத பெற்றோர், வேறு பள்ளிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

ஒரே ஒரு குழந்தைக்காக பார்பரா பாடம் எடுத்தார். ரூபியும் மகிழ்ச்சியாகப் படிக்க ஆரம்பித்தாள். ஆனாலும், ரூபிக்கு எதிரான நடவடிக்கைகள் குறையவில்லை. பள்ளி உணவுக்கூடத்தில் சாப்பிடக் கூடாது, கழிப்பறைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வந்தன. ஓர் அமெரிக்க மாணவனின் தாய், உணவில் விஷம் வைத்து ரூபிக்குக் கொடுக்கப் போவதாகச் சொன்னார். அதனால் பாதுகாப்பு வீரர்கள் வீட்டு உணவை மட்டுமே சாப்பிட அனுமதித்தனர்.

சக மாணவர்களிடம் பேசுவதற்கு எவ்வளவோ முயன்றாள் ரூபி. ஆனால், ஒருவரும் அவரிடம் பேசவில்லை. சில வாரங்களுக்குப் பிறகே தான் ஒதுக்கப்பட்டிருக்கிறோம் என்ற விஷயம் அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்துக்கு உள்ளானாள். மதிய உணவைப் புறக்கணித்தாள்.

ஒவ்வொரு நாளும் ரூபிக்குத் தைரியம் சொல்லி அனுப்பிவைப்பார் அவளுடைய அம்மா. பள்ளியில் ஆசிரியர் பார்பரா தைரியம் அளிப்பார். அவளுடன் சேர்ந்து சாப்பிடுவார். மருத்துவர் ராபர்ட் கோல்ஸ் அடிக்கடி ரூபியைச் சந்தித்து, மன நல ஆலோசனை அளிப்பார்.

வீட்டிலும் பிரச்சினைகள் அதிகரித்தன. மகளைப் பள்ளியில் சேர்த்த குற்றத்துக்காக ரூபியின் அப்பா வேலை இழந்தார். தாத்தா, பாட்டி குத்தகைக்கு எடுத்த நிலம் பறிக்கப்பட்டது. மளிகைக் கடைகளில் பொருட்கள் மறுக்கப்பட்டன. குடும்பமே ஒதுக்கிவைக்கப்பட்டது.

புதிய விடியல்

மாதங்கள் சென்றன. சில அமெரிக்கர்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ரூபியின் குடும்பத்துக்கு உதவ ஆரம்பித்தனர். அப்பாவுக்கு வேறு வேலை கிடைத்தது. சிலர் உணவு, உடை, புத்தகங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்தனர்.

பள்ளியில் ஓராண்டை நிறைவு செய்தாள் ரூபி. இரண்டாவது ஆண்டில் சூழல் மாறியது. பள்ளியை விட்டுச் சென்ற குழந்தைகள், மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர். மார்ஷல்களின் பாதுகாப்புத் தேவையில்லை என்ற நிலை வந்தது. குழந்தைகள் ரூபியுடன் படிக்க ஆரம்பித்தனர். ஆசிரியர்களும் இன வெறுப்பைக் கைவிட்டு, பாடம் எடுத்தனர்.

நல்ல மனம் கொண்ட ஒரு புத்திசாலிக் குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததைப் பெருமையாகக் கருதுவதாகச் சொன்னார் பார்பரா ஹென்றி. ரூபிக்கு மருத்துவம் அளித்த ராபர்ட் கோல்ஸ், 1995-ம் ஆண்டு ‘தி ஸ்டோரி ஆஃப் ரூபி பிரிட்ஜஸ்’ என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

“எவ்வளவு மோசமான சூழலிலும் ரூபி அழுது நாங்கள் பார்த்ததில்லை. எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையைபோல் அழகாக அவள் நடந்துவருவாள்” என்றார் மார்ஷல் சார்லஸ் பர்க்ஸ்.

1999-ம் ஆண்டு ரூபி பிரிட்ஜஸ் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பை ஆரம்பித்தார் ரூபி. இந்த அமைப்பு குழந்தைகளின் கல்விக்காக உதவுவதுடன், சகிப்புத்தன்மை, மரியாதை, மனித மாண்புகள் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. ‘இனவெறி என்பது வேகமாகப் பரவும் ஒரு தொற்றுநோய். அதை நம் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுப்பதே இந்த அமைப்பின் நோக்கம்’ என்ற லட்சியத்தோடு செயல்பட்டுவருகிறது.

2001-ம் ஆண்டு ‘பிரசிடென்ஷியல் சிட்டிசன்ஸ் மெடல்’ என்ற உயரிய விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ரூபிக்கு வழங்கினார். இண்டியானாபொலிஸில் உள்ள குழந்தைகள் அருங்காட்சியகத்தில் ரூபியின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக எழுத்தறிவு நாளும் ரூபியின் பிறந்தநாளும் செப்டம்பர் 8 என்பது தற்செயல் என்றாலும் பொருத்தமானது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்