எசப்பாட்டு 1: ஆண்கள் பாதுகாப்புக்குச் சங்கம்?

By ச.தமிழ்ச்செல்வன்

ன் நண்பரின் மகன் ஆறாவது படித்தபோது அவனுக்குப் பிடித்த பாடல் எது என்று கேட்டால் தயங்காமல் பளிச்சென்று பாடுவது, “வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு” பாடலைத்தான். இப்போது கொஞ்சம் வளர்ந்த பிறகு அவனுக்குப் பிடித்த பாடல்களாக இருப்பவை:

பொம்பளைங்க காதலத்தான்

நம்பிவிடாதே நம்பிவிடாதே

நம்பியதால் நொந்துமனம்

வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா

அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா

அவனுக்குப் பிடித்த நடிகர் எப்போதுமே சிவகார்த்திகேயன்தான். காரணம் கேட்டால், “அவர்தான் பொம்பளைங்க பண்ற கொடுமைய எல்லாம் பாட்டாகப் பாடுகிறார்” என்கிறான். “இந்த வயதில் பொம்பளைங்க மேலே அப்படி என்னடா தம்பி வெறுப்பு?”ன்னு கேட்டால் அவன் உடனே சோகமாகி இரண்டு காரணங்களைச் சொல்வான்.

“நான் பையனா இருக்கறதாலே அடுத்த தெருவிலே இருக்கும் கடைக்குப் போய் சோப்பு, கடுகு, காப்பித்தூள்னு வீட்டுச் சாமான்கள் வாங்க எப்பவும் என்னைத்தான் அனுப்பறாங்க. அதுவும் அடுப்பிலே சட்டியை வச்சிட்டு, சட்டி காயறதுக்குள்ளே வாங்கியாறணும் ஓடுடா ஓடுடான்னு விரட்டுவாங்க. ஒருநாள், ரெண்டுநாள்னா பரவால்லே. தினமும் இதே டார்ச்சர்னா என்ன பண்றது?” இதைச் சொல்லும்போது அவன் முகம் சிவந்து, கண்கள் கலங்கியிருக்கும். சொல்லிவிட்டு அந்தத் துயரம் தாங்காமல் தலையணையில் குப்புறச் சாய்வான். சமாதானம் செய்து, “அப்புறம்?” என்று கேட்டால் அவன் பள்ளிக்கூடத்தில் நடக்கும் கொடுமைகளைச் சொல்வான்.

“ஒருவாட்டி கேர்ள்ஸ் என்ன பண்ணாங்கன்னா ஒரு பொண்ணோட ஜியாமெட்ரி பாக்ஸை அவளுக்குத் தெரியாம எடுத்து என்னோட டெஸ்க் மேலே வச்சிட்டாங்க. அப்போ மிஸ் வந்துட்டாங்க. அப்புறம்தான் அந்தப் பொண்ணுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ் காணோம்ங்கிறது தெரிஞ்சு, உடனே மிஸ் கிட்டே சொல்லிட்டா. “அவ ஜியாமெட்ரி பாக்ஸை யார் எடுத்தா?”ன்னு கிளாஸ்லே மிஸ் கேக்குறாங்க. அப்போ ஒரு பொண்ணு என் டெஸ்க்கை மிஸ்கிட்டே காட்டுறா. உடனே மிஸ் என்னை எழுந்திருக்கச் சொல்லி அவுட்னு கத்தறாங்க. ஒரு பீரியட் முழுசும் என்னை வெளியிலே நிக்க வச்சாங்க. நான் சொல்லவந்த எதையும் அவங்க கேக்கத் தயாராக இல்லை. பொண்ணுங்க எது சொன்னாலும் உண்மைன்னு எல்லா மிஸ்ஸும் சாரும் உடனே நம்பறாங்க. பாய்ஸ் சொல்றதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட மாட்டாங்க. எனக்கு கேர்ள்ஸ்தான் எனிமீஸ்”.

அறியாப் பருவத்தில் பசங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்று நாம் இதைப் புன்னகைத்துக் கடந்துவிட முடியுமா? அந்தக் குழந்தையின் கண்ணீருக்குச் சமாதானமான பதிலை நாம் சொல்ல வேண்டாமா? இவர்கள் மனதில் இள வயதில் உருவாகும் பெண் பற்றிய சித்திரங்கள் பின்னர் என்னவாகவெல்லாம் வடிவெடுக்கின்றன? நாளை இந்தச் சிறுவன் என்ன மாதிரியான ஆளாக வருவான்?

பாவப்பட்ட ஆண் பிறப்பு?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேட நாம் மூளையைக் கசக்கவும் வேண்டாம், ரூம் போட்டு யோசிக்கவும் வேண்டாம். இந்தப் பையன் போன்ற நேற்றைய பையன்கள் வளர்ந்து பெரியவர்களாகி, “ஆண்கள் உரிமைப் பாதுகாப்பு சங்கம்” என்ற பெயரில் அமைப்பாகத் திரண்டு நம் கண் முன்னால் நின்றுகொண்டிருக்கிறார்கள். உலகமும் வாழ்க்கை யதார்த்தமும் ஒன்றைச் சொன்னால் அவர்கள் எகணைக்கு மொகணையாக வேறொன்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

“சார் பெண் விடுதலை பெண் விடுதலைன்னு பேசிப்பேசி நம்ம இந்தியாவின் ஆதாரசுருதியாக இருக்கற குடும்பத்தையும் குடும்ப அமைதியையும் நாசம் பண்ணினதுதான் மிச்சம்” என்பது அவர்களின் இன்றைய வசனம். புது டெல்லியில் மட்டும் 8,000 ஆண்கள் அந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் இத்தகைய ஆண்கள் பாதுகாப்புக்கான அமைப்புகள் பல்வேறு பெயர்களில் இயங்குகின்றன.

தமிழகத்திலும் சென்னை திருவல்லிக்கேணியில் ‘ஐஸ் ஹவுஸில் ஆண்கள் பாதுகாப்பு அசோசியேஷன்’ அலுவலகம் இயங்குகிறது. அந்தச் சங்கத்தின் இணையதளத்தின் முகப்பில் ஆண்கள் இந்த நாட்டில் அனுபவிக்கும் துயரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

“ஆணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எடுத்ததெற்கெல்லாம் வீட்டார் கடைக்கு ஓடு ஓடு என்று துரத்தித் துன்புறுத்துவதில் தொடங்குகிறது ஆணின் துயரம். அவன் வளர்ந்து பெரியவனானால் எப்படியாவது படித்து, எப்படியாவது வேலை வாங்கி, எப்படியாவது சம்பாதித்து, வீட்டிலுள்ள அம்மா, அக்கா, தங்கை, பாட்டி என்று பெண்களையெல்லாம் பராமரித்து, அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, நல்ல பையன் என்று பேர் வாங்கணும். பல ஆண்களின் வாழ்க்கை அவர்களின் அக்கா, தங்கைகளுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதிலேயே சாம்பலாகிவிடுகிறது. அதற்குப் பிறகு ஒரு கல்யாணத்தைப் பண்ணித் தொலைத்தால் பொண்டாட்டியையும் பெத்த பொண்ணுகளையும் வாழவைக்க உழைக்கணும். இந்தியச் சமூகத்தில் எல்லாமே ஆணின் கடமை என்றாகிநிற்கிறது. இப்படிப் பிறப்பு முதல் இறப்புவரை பெண்களுக்காகவே உழைத்து, ஓடாய்த் தேயும் ஆண்களுக்குக் கிடைக்கும் சந்தோஷம்தான் என்ன? ஆணாதிக்கம், தந்தைவழிச் சமூகம், பெண் மீது வன்முறை செலுத்துபவன் போன்ற அவப்பெயர்களோடு செய்த தியாகங்களைப் பற்றி மௌனம் காக்கும் கொடுமை”.

- இப்படிச் சொல்கிறது அந்த சென்னைச் சங்கத்தின் முகப்புப் பக்கம். அவர்கள் உருகி உருகி ஆண்களின் தியாக வாழ்வை எழுதினாலும் நடைமுறை உண்மைகள் நம் கண்களில் அவர்களுக்காகக் கண்ணீரை வரவழைக்காமல் உதட்டில் சிரிப்பைத்தான் தருவிக்கின்றன.

ஆண்கள் மீதான வன்முறை?

ஆண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக அகில இந்திய அளவில் இயங்கும் அமைப்புகளில் பெரியது Save Indian Family Foundation அமைப்பு. ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் ஒரு பெண் மீது பாலியல் வல்லுறவு நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு வரதட்சணை சாவு நிகழ்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் பத்து மில்லியன் பெண் சிசுக்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றெல்லாம் புள்ளிவிவரங்கள் சொன்னாலும் இந்த இந்தியக் குடும்பங்கள் பாதுகாப்பு அமைப்பினர் என்ன சொல்கின்றனர் தெரியுமா? இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் பெண்களின் எண்ணிக்கையைப் போல ஆண்களின் தற்கொலை இரண்டு மடங்கு. பெண்களின் கொடூரமான வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அவர்களின் குடும்பச் சித்ரவதைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்கள் இவர்கள். இவர்களின் மரணம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா என்று முகாரியில் எதிர்ப்பாட்டு பாடுகிறார்கள்.

ஆண்கள் அமைப்புகள் மட்டுமல்ல, அகில இந்திய மாமியார்கள் பாதுகாப்புச் சங்கம் (All India Mother-in-law Protection Forum), அகில இந்திய நாத்தனார்கள் பாதுகாப்புச் சங்கம் போன்ற அமைப்புகளும் இன்று சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. கொடுமைக்கார மாமியார்களையும் நாத்தனார்களையும் நம் சினிமாக்களும் தொலைக்காட்சித் தொடர்களும் காட்டிக்கொண்டிருக்கும் இதே நாட்களில் மாமியார்கள், நாத்தனார்களின் ‘நியாயமான’ உரிமைகள் மற்றும் கௌரவத்துக்காகக் குரல் எழுப்பும் அமைப்புகளும் பரவிவருகின்றன.

‘பெண் இன்று’ எனப் பேசும் நாம், ‘ஆண் இன்று’ என்பதையும் ‘மாமியார்கள் இன்று’ என்பதையும் ‘நாத்தனார்கள் இன்று’ என்பதையும் சேர்த்துப் பேசினால்தானே விவாதம் முழுமை பெறும்? அதிகாரத்தின் பின்பலத்தோடு இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ‘பண்பாட்டு நடவடிக்கைகள்’ அதிகரித்துள்ள இந்த நாட்களில் இதுபோன்ற சங்கங்கள் மேலும் வலுப்பெறவும் செய்யலாம் என்பதால் நாம் இந்தக் குரல்களை நகைத்துவிட்டு மட்டும் கடக்கக் கூடாது. இவர்கள் என்னதான் சொல்றாங்க என்று கேட்டுப் பதிலடி கொடுப்போம்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர் |தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்