அ
ன்பு வழியைத் தங்கள் உறவாகக்கொண்ட தம்பதி, சமுதாயத்தில் அறம் பேணி வாழ்வது குறித்து, ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ என்ற குறளில் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று குடும்பம் என்கிற அமைப்பு, சமுதாய அறம் பேணுதலைப் பற்றிக் கவலைப்படுகிறதா? சமுதாயத் தளத்தில் இன்று எவையெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசுகிறோமோ அவை அனைத்தையும் பாதுகாக்கிற அமைப்பாகவே அது இருக்கிறது. அதனால்தான் சமீபத்தில் தனது 95-வது வயதைக் கொண்டாடிய முதுபெரும் இலக்கியவாதி கி.ராஜநாராயணன் , “சாதி ஒழிய வேண்டுமென்றால் ஒரே சாதித் திருமணத்தை நிறுத்துங்கள்” என்று பேசியிருக்கிறார். ஒரு கட்சிக்காரராகவோ சமுதாயப் போராளியாகவோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத ஒரு மக்கள் எழுத்தாளர் இப்படிப் பேசியிருப்பதைத் தமிழ்ச் சமுதாயம் கேட்காததுபோல் இருப்பது சரியல்ல. குறைந்தபட்சம் ஏதோ அடிப்படையான தவறு இருக்கிறது என்றாவது சிந்திக்க முன்வர வேண்டும். ஆம், இன்றைய வாழ்க்கை முறையில் அறம் என்பது தொலைந்து போன சொல்லாகிக்கொண்டிருக்கிறது.
தனிக் குடித்தனமா கூட்டுக் குடும்பமா?
இந்தத் திருமண வாழ்வின் அறம் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இப்போது பெண் கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதா தனிக் குடும்பத்திலா என்ற கேள்வி தலையெடுக்கிறது. எப்படியாவது தனிக் குடும்பத்தில்தான் வாழ வேண்டும் என்று பெண்ணும் பெண்ணைப் பெற்றவர்களும் விரும்புகின்றனர். அதை மனதில் நிறுத்தியே பல்வேறு சிக்கல்கள் செயற்கையாகவும் இயற்கையாகவும் உருவாகி வளர்கின்றன. இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் இருக்கும் பெற்றோர் சற்றுகூட குழப்பமில்லாமல் தங்கள் பெண், மாப்பிள்ளையுடன் தனிக்குடித்தனம் வாழ வேண்டுமென்றும் மருமகள் தங்கள் மகனுடன் கூட்டுக் குடும்பத்தில் வாழ வேண்டுமென்றும் விரும்புகின்றனர். வயது முதிர்ந்தோரைப் பாதுகாக்கும் அரசு நிறுவனங்களும் முறையான பொது மையங்களும் இல்லாத ஒரு சமுதாயத்தில் (முதியோர்கள், நகரப் பேருந்துகளில்கூட பாதுகாப்பாக ஏற முடியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அவர்கள் ஏறும்வரை பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை) இதன் விளைவுகள் பல பரிணாமங்களைப் பெறுகின்றன.
அறமற்ற பிரச்சினைகள்
எது நியாயம் என்று தீர்ப்பு சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்தின் சிக்கல்களும் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. வயது, பணம், சமுதாயச் செல்வாக்கு இப்படிப் பல காரணிகள் ஒன்றுக்கொன்று முரணாகச் செயல்படுகின்றன. குறிப்பாக மனிதர்களின் குணங்கள், அவர்கள் கடந்த கால வாழ்க்கை அவர்கள் மனதில் உருவாக்கியிருக்கும் சுவடுகள் இவற்றுக்குச் சம்பந்தமே இல்லாத இன்னொரு சுமைதாங்கியாக இருக்கப் பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவளோ சின்னப் பெண்ணாக இருக்கிறாள். அவளுக்கு இப்போது ஒரு புதிய உலகம் திறக்கப்பட்டிருக்கிறது. அதில் பயணிக்கவே அவள் விரும்புகிறாள். போன தலைமுறையின் சுமைதாங்கியாக வாழ அவள் விரும்பவில்லை. சரி. அவள் அப்படிதான் வாழ வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும்?
இதில் கணவன்களின் செயல்பாடு என்ன? பெண் பார்க்கும் படலத்தில் பெண் கேட்ட அனைத்துக்கும் வாக்குறுதிகளை அள்ளித் தருவார்கள். ஆனால், பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே பிரதமர் தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதுபோல் செய்ய நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். இல்லையெனில் அவர் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதைப் போல இவர்கள் அலுவலகங்களில் தஞ்சமடைந்துவிடுகிறார்கள். குடும்பங்களில் இன்று நிலவும் பிரச்சினைகளிலும் அறமில்லை. அவை தீர்க்கப்படும் முறைகளிலும் அறமில்லை.
குடும்ப அமைப்பின் முக்கிய நோக்கங்களாக இன்றுவரை சொல்லப்படும் முதியோர் பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு இரண்டுமே மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. தனிக் குடும்பத்துக்கான காரணங்கள் வலுவானவை. ஆனால், அது நம் சமூக அமைப்பாக மாற வேண்டுமென்றால் இன்னும் பல துணை அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டும். அவை இன்னும் தொக்கி நிற்கின்றன. அவற்றைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக நாம் பழைய கூட்டுக் குடும்பத்தின் புனிதம் பற்றிப் பேசத் தொடங்குகிறோம்.
வீட்டைப் பராமரிக்கும் பெருஞ்சுமை
தனிக் குடும்பத்தில் பெண், வேலைக்குப் போகாதபட்சத்தில் அலுவலகம் செல்வது ஆணின் வேலை என்றும் வீட்டைப் பராமரித்து அந்த ஆணின் தேவைகளையும் குழந்தையின் தேவையையும் கவனிப்பது மனைவியின் பொறுப்பு என்றும் ஆக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் கூட்டுக் குடும்பத்தில் வீட்டு வேலை செய்வதை விரும்பாத பெண்கள் பலரும் இந்த அமைப்பில் வீட்டுப் பராமரிப்பு மட்டுமே தனது பணியா என்று கேள்வி கேட்பதில்லை. ஒரு பெரிய பகுதியினர் இதனைத் தங்களுக்குச் சாதகமாகவே எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் தனிக் குடும்பத்தில் குழந்தைப் பராமரிப்புக்காக வேலைக்குப் போக வேண்டாம் என்ற முடிவெடுக்க வேண்டிய நிலையில் பெண்தான் இருக்கிறாள். மாமியார் அல்லது தாயாரின் அனுசரணை கிடைத்த பெண்களால் மட்டுமே வேலைக்குச் செல்ல முடிகிறது.
வேலைக்குச் செல்லும் பல பெண்கள் அதன் மூலம் தாங்கள் பெறும் சமூக அடையாளத்தை உணரத் தொடங்கிவிட்டார்கள். இப்படி உணர்ந்த பெண்கள் பல தடைகள் வந்தபோதும் தங்கள் பணி வாய்ப்பைத் துறக்க விரும்புவதில்லை. ஆனால், அரசுப் பணி போன்ற பாதுகாக்கப்பட்ட பணியிலுள்ளவர்களுக்கே இது முழுமையாகச் சாத்தியப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் மகப்பேறு காலம் மற்றும் குடும்பத்திற்கு அவர்கள் கவனம் அதிகம் தேவைப்படும் காலங்களில் அல்லது தங்களுக்கே ஆரோக்கியம் குன்றிய காலங்களில் தங்கள் பணிவாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்வதில் அவர்களுக்குக் குடும்பமும் தடையாக இருக்கிறது. பணி தரும் நிறுவனங்களும் தடைகளை ஏற்படுத்துகின்றன.
விடைபெற்றது வீட்டின் எளிமை
வேலைக்குப் போகும் பெண்களின் முக்கியப் பிரச்சினை வீட்டு வேலைகள். நிறைய இயந்திரங்கள் வந்துவிட்டதால் வீட்டு வேலைகள் எளிமையாக்கப்பட்டுவிட்டதாகப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், முன்பு ஒரு விறகடுப்பும் அத்துடன் இணைந்த கொடி அடுப்பும் மட்டும் இருந்த நமது வீடுகளில் இன்று அடுப்புகள் மட்டுமே ஐந்தாறு வகைகள் இருக்கின்றன. காஸ், மின் அடுப்பு, மைக்ரோவேவ் அவன், கிரில் அடுப்பு இப்படிப் பட்டியல் போகிறது. ஒரு வேளை சமையல் நடந்தது போய் அனைத்து வீடுகளிலும் நான்கு வேளை சமையல் நடக்கிறது. உணவு முறை மாறியிருக்கிறது அல்லது மாறிக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாகப் பெண்களைக் குறிவைத்துப் புதிய புதிய உணவுக் கோட்பாடுகள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. வீட்டின் எளிமையும் விடைபெற்றிருக்கிறது. தாங்கள் வாழத்தக்கதாக வீடு இருக்க வேண்டும் என்ற நிலை கொஞ்சம் மாறி எல்லோரும் காணத்தக்கதாக வீட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என்று கண்ணுக்கு தெரியாத ஒரு நிர்ப்பந்தம் பெண்கள் மீது சுமத்தப்படுகிறது. இந்த அனைத்து மாற்றங்களும் அதிகப்படுத்தியிருப்பது பெண்களின் வீட்டு வேலைகளைத்தான்.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago