கே
ரளத் தலைநகர் திருவனந்தபுரம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தள்ளியிருக்கிறது ‘நந்தவனம்’. சாலையை ஒட்டியுள்ள இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே சென்றால் வளைந்து செல்கிறது மண்பாதை. பல வகையான தாவரங்களும் மரங்களுமாக வரவேற்கிறது மலையாளக் கவிஞர் சுகதகுமாரியின் வீடு.
விஷத்தை உறிஞ்சிக்கொண்டு
சுவாசிக்கக் காற்றுதரும் மரத்தை
நீலகண்டனாக நினைத்து வணங்குகிறேன்
என்று மரத்தைக் கடவுளுக்குச் சமமாகப் போற்றிய சுகதகுமாரி, மலையாள இலக்கிய உலகின் ‘பசுமை’ முகம். கவிஞராக மட்டுமல்லாமல் களப் போராளியாகவும் இருப்பது இவரின் தனித்துவம்.
சீரழிவுக்கு எதிராக
பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது ‘சைலன்ட் வேலி’ எனும் அமைதிப் பள்ளத்தாக்கு. இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத மழைக்காடுகளைக் கொண்ட பகுதி இது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழும் சோலை மந்தி (சிங்கவால் குரங்கு) உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் வாழிடம் இது. இங்கு குந்திப்புழா நதி ஓடுகிறது. இந்தச் செழிப்பான பகுதியில் 1970-ம் ஆண்டு, கேரள அரசின் மின்சார வாரியம், அனல்மின் நிலையத்தைக் கட்ட நினைத்தது. அப்படிக் கட்டினால் சுமார் 8.3 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காடு நீரில் மூழ்கும்.
இப்படியொரு சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்து அன்று சாமானிய மக்கள் முதற்கொண்டு கவிஞர்கள், ஓவியர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், பல்துறை நிபுணர்கள் எனப் பலரும் போராடினார்கள். அவர்களில் முதன்மையானவர் சுகதகுமாரி. அந்தப் போராட்ட காலத்தில் அவர் எழுதிய ‘மரத்தின்னு ஸ்துதி’ கவிதை மிகவும் பிரபலம். அவரின் போராட்ட அனுபவங்கள் குறித்து உரையாடியதிலிருந்து…
முதல் களப் போராட்டம்
“அப்படியொரு போராட்டம் நடந்தது இந்தியாவிலேயே அதுதான் முதன்முறை. இந்தப் பிரச்சினை குறித்துப் பேராசிரியர் எம்.கே.பிரசாத் என்பவர்தான் முதன்முதலில் ‘மாத்ருபூமி’யில் கட்டுரை எழுதினார். அதைப் படித்துதான் இந்தப் பிரச்சினையைப் பற்றித் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லும் சுகதகுமாரி, அதன் பிறகு பிரசாத் உள்ளிட்ட சிலரோடு, அமைதிப் பள்ளத்தாக்கு அனல்மின் நிலையத் திட்டத்துக்கு எதிரான சிறு குழுவில் இணைந்து போராட்டங்களில் பங்கேற்றார்.
அதற்கு முன்புவரை கவிதைகளில் மட்டுமே அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் பங்கேற்ற முதல் களப் போராட்டம் அமைதிப் பள்ளத்தாக்குக்காகத்தான். போராடுவதோடு அது குறித்து எழுதவும் செய்தார். அந்த எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சுகதகுமாரி ஒரு கவிஞராக இருந்துகொண்டு இந்த விஷயங்களைப் பற்றிப் பேசியதால் மக்களிடையே ஆர்வம் அதிகரித்தது. விரைவில், அவர்களும் அந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டார்கள்.
இயற்கைக்காகப் படைப்பாளிகள்
மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, அமைதிப் பள்ளத்தாக்குயைப் பாதுகாப்பதற்காகப் படைப்பாளிகள் குழுவை ஏற்படுத்த சுகதகுமாரி நினைத்தார். அதைத் தொடர்ந்து பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தொடர்புகொண்டார். ஓ.என்.வி. குரூப், அய்யப்ப பணிக்கர், ஓ.வி.விஜயன் எனப் பலரும் முன்வந்தார்கள். ‘பிரக்ரிதி சம்ரக்ஷன ஸமிதி’ என்ற அந்தக் குழுவுக்கு என்.வி.கிருஷ்ண வாரியார் தலைவராகவும், சுகதகுமாரி செயலராகவும் இருந்தனர்.
“இயற்கைக்காகப் போராடிய முதல் படைப்பாளிகள் குழு, உலகிலேயே அதுவாகத்தான் இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அந்தக் குழு அமைதிப் பள்ளத்தாக்குக்காக மட்டுமல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலைகள், நதிகள் ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுத்தது. அந்தக் குழுவிலிருந்த பலரும் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதினார்கள். அமைதிப் பள்ளத்தாக்கை முன்வைத்து ‘முஷைரா’க்கள் (மாலை நேரக் கவியரங்கம்) நடத்தினோம்.
ஓவியர்கள் சாலையோரங்களில் அமைதிப் பள்ளத்தாக்கு தொடர்பான ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற படைப்புகளை வைத்துக் கண்காட்சி நடத்தினார்கள். குஜராத்திலிருந்து மிருணாள் சாராபாய் நடனமாட வந்தார். சென்னையிலிருந்து வந்து இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் கச்சேரி நடத்தினார்.
அமைதிப் பள்ளத்தாக்குத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கும் சென்றோம். இந்திரா காந்திக்கும் கடிதங்கள் எழுதினோம். அப்போது அவர் பிரதமராக இருக்கவில்லை. எனினும், இந்த விஷயத்தில் அவர் மிகுந்த அக்கறை காட்டினார். எங்கள் குரலுக்குச் செவிசாய்த்தார். பறவையியலாளர் சாலிம் அலி போன்றவர்களும் அவருக்குக் கடிதங்கள் எழுதினர்” என்று அந்த நாள் அனுபவங்களை அசைபோடுகிறார் சுகதகுமாரி.
இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானவுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன், எம்.ஜி.கே. மேனன் கமிஷன் போன்ற குழுக்களை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினையை அலசினார். இப்படிப் பல ஆண்டுகள் தொடர்ந்த போராட்டத்துக்குப் பிறகு 1984-ம் ஆண்டு அந்தத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டது. பின்னாளில் இந்தியாவில் வனப் பாதுகாப்புச் சட்டம் உருவாவதற்கு அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம் காரணமாக இருந்தது. அடுத்த ஆண்டே அப்பகுதி தேசியப் பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. பிறகு 2007-ல் அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள் ‘நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்’ என்ற பெயரில் உலக மரபுச் சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டன.
ராட்சத சிசு
“இயற்கையைப் பாதுகாப்பதற்காகக் கடந்த 45 வருடங்களாக நான் போராடிவருகிறேன். ஆனால், இந்தப் போராட்டத்தில் தோல்வியடைந்து வருகிறேன். தோல்வியடையும் போராட்டத்துக்கும் புதிய வீரர்கள் தேவைதானே? நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம், இன்றிருக்கும் இளைஞர்களுக்குச் சுற்றுச்சூழலைக் காப்பதில் அக்கறை இல்லை.
பூமி, பால் வற்றிய மார்பைக்கொண்ட ஒரு ஏழைத் தாய். அந்த மார்பில் பால் வராது என்று தெரிந்தவுடன் ரத்தத்தை உறிஞ்சும் ‘ராட்சத சிசு’வாக மனிதர்கள் மாறிவருகிறார்கள். எனவே, இந்தப் பூமி காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது!” வருத்தத்துடன் விடைகொடுக்கிறார் சுகதகுமாரி. ஆனால், 83 வயதிலும் தன் போராட்டத்தை அவர் கைவிடவில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago