பார்வை: கொல்லப்பட்டவர்கள் நாம்தான்!

By பா.ஜீவசுந்தரி

“ஒரு இந்தியக் குடிமகளாக பாஜக-வின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது; இந்து அமைப்பில் உள்ள சாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்; நம் அரசியலமைப்புச் சட்டம் எனக்கு மதச் சார்பின்மையைக் கற்றுக் கொடுத்தது; எனவே, மதவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பது என்னுடைய அடிப்படை உரிமை” என்று துணிச்சலுடன் பிரகடனம் செய்தார் கௌரி லங்கேஷ்.

இந்த நாட்டில் கருத்துரிமை நிலவுகிறது என்று இனியும் நாம் சொல்லிக்கொண்டு திரிவது வெறும் பம்மாத்தாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது; தேசபக்தியின்மீது காவிக்கறை படிந்து தேசமே களையிழந்து கிடக்கிறது. நாட்டை மாதா என்றும் அன்னை என்றும் விளிப்பவர்கள்தான் 55 வயது அன்னையைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். சுய சிந்தனையுடன் எழுதியும் பேசியும் வந்ததுடன் பல இளைஞர்களுக்கும் பாதுகாவலராக, அரவணைத்துச் செல்பவராக முற்போக்குக் கருத்துகளையும் சிந்தனைகளையும் விதைத்து, சுயசார்புடன் தன் வாழ்க்கையை நடத்திவந்த ஒரு எளிய பெண்மணியை ரத்த வெள்ளத்தில் வீழ்த்தியிருக்கிறார்கள்.

இதன்மூலம் நேற்றுவரை பரவலாக, வெகுமக்கள் நினைவுகளுக்குள் பதியாத ஒருவரை, மிக ஆழமாகப் பதிய வைத்திருக்கிறார்கள். கௌரி லங்கேஷ் யாரென்று தேடித் தெரிந்துகொள்ள வைத்திருக்கிறார்கள். இப்போது நாம் லங்கேஷின் வரலாற்றைப் படித்துக்கொண்டிருக்கிறோம். அவர் அங்கு பல ஆண்டுகளாக இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்.

தனக்கு எதிரான கொலை மிரட்டல்களைத் துணிச்சல்களுடன் எதிர்கொண்டு போராடி, அதற்காகத் துப்பாக்கிக் குண்டுகளையும் மரணத்தையும் பரிசாகப் பெற்றிருக்கிறார். நேற்றும் தபோல்கரை இழந்த பின்னர்தான் அவரது வரலாற்றைப் படித்தோம். அதன் பிறகு பன்சாரே, கல்புர்கி என்று இந்தப் பட்டியல் தொடரத் தொடர அவர்களது போராட்ட வரலாறுகளைப் படித்துக்கொண்டிருந்தோம். ஆனால் , ஒன்றை மறந்துவிட்டோம்.

இவர்கள் ஒவ்வொருவரும் நம்மில் ஒருவர்! நம்மோடு கலந்து கரைந்து நமக்காகப் போராடியவர்கள். நமது கருத்துரிமையைப் பாதுகாப்பதற்காக, நமது குரலுக்கு வலுச்சேர்ப்பதற்காக நம்மில் ஒருவராகப் போராடிக்கொண்டிருந்தவர்கள்.

இருசக்கர வாகனத்தில் மிக நெருக்கமாக வந்து நின்று, தங்கள் முகம் மறைத்து, ஏழு குண்டுகளைச் செலுத்திக் கொல்லும் அளவுக்கு என்ன குற்றத்தை கௌரி செய்துவிட்டார்? ஏழு ரவுண்டுகள் சுடப்பட்டதில் மூன்று குண்டுகள் கழுத்திலும் எஞ்சியவை வயிற்றிலும் பாய்ந்துள்ளன. ஆனால், கொன்றொழித்தவர்கள் ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்றே சுட்டப்படுகிறார்கள்.

அடிமைகொள்ளும் மதவாதம்

பெண்களை மெல்லியலார் என்றும் மலர்களுடன் ஒப்பிட்டும் காலம் காலமாக வடித்துவைத்த கற்பனைகளைப் பெண்கள் புறந்தள்ள ஆரம்பித்து பல காலம் ஆகிவிட்டது. தங்களால் அதிகாரத்தையும் மத பீடங்களையும் மதத்தின் பேரால் தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் ஆக்ரோஷமாக எதிர்த்துக் கேள்வி எழுப்ப முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள். மிகச் சமீபத்திய முத்தலாக் தீர்ப்பு அவர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அவ்வாறே, கௌரி லங்கேஷ் ஒரு பத்திரிகையாளராக, அதிலும் நேர்மையான பத்திரிகையாளராக மத அடிப்படை வாதத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்புகிறவராக – அது எந்த மதமாயினும் – அவற்றை ஒதுக்கிப் புறம்தள்ளுகிறவராக இருந்தவர்.

பொதுவாகப் பெண்கள் மீதுதான் மதச் சடங்குகள் திணிக்கப்படும். வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவற்றைக் கடத்துபவர்களாகவும் சமூகம் பெண்களைக் கட்டமைத்து வைத்திருக்கிறது. அதனாலேயே மதம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை வீடுகளில் செய்து முடிக்கும் கடமை அவர்கள் அறியாதவாறு அவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்துக் குரல் கொடுக்கும், அவற்றைச் செய்ய மறுக்கும் பெண்களைக் குடும்பத்தின் சக உறுப்பினர்களேகூட விநோதமான பிறவிகளாகப் பார்ப்பதும் நடத்துவதும் நடைமுறை.

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இன்னின்ன காரியங்களை அவள் செய்ய வேண்டும் என்பதை எழுதாத சட்டமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எந்தப் பெண் இவற்றையெல்லாம் எதிர்க்கத் துணிகிறாளோ புராணங்கள் போதிக்கும் கற்பனைகளை நம்ப மறுக்கிறாளோ, அவை குறித்து எதிர்க்கேள்வி கேட்பவளாக, விவாதிப்பவளாக இருக்கிறாளோ அப்போதே அவள் எதிரியாகிவிடுகிறாள். மதவாதம் எப்போதும் பெண்ணடிமைத்தனத்தை உயர்த்திப் பிடிப்பதைக் கொள்கையாகக் கொண்டது. தங்களுக்கு அடங்க மறுப்பவர்களை, கொன்றொழிக்கவும் தயங்காது. அதிலும் பெண் என்றால் சும்மா விட்டு விடுமா? கௌரிக்கு நிகழ்ந்திருப்பதும் அதுதான். மதமும் அதன் பீடங்களும் எவ்வளவு குரூரம் நிறைந்தவை என்பதை கௌரியின் மரணம் நமக்குப் புரியவைக்கிறது.

கொந்தளிக்க வைக்கும் எழுத்து

கௌரியின் தந்தை லங்கேஷும் சாதாரணமானவரல்ல கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகப் பரிமாணம் அவருக்கும் உண்டு. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தன் பெயரிலேயே ‘லங்கேஷ் பத்திரிகே’வைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர்.

தந்தையின் மறைவுக்குப் பின் ‘பெண்ணாக லட்சணமாக ஒதுங்கி இருந்துவிடாமல்’, தானே பத்திரிகையை முன்னின்று நடத்தியவர் கௌரி. தந்தையின் வழியிலேயே கௌரியும் வலுவான கருத்துகளைப் பத்திரிகையின் வாயிலாகப் பரப்பியவர். பத்திரிகையின் மூலம் சமூக நல்லிணக்க மன்றம் ஒன்றையும் தொடங்கி முனைப்பாகச் செயல்பட்டார். இது தவிர, பிரபல ஆங்கிலத் தினசரிகள் சிலவற்றிலும் கௌரி பணியாற்றியிருக்கிறார். பா.ஜ.க.வின் இந்துத்துவக் கொள்கைகள், அதன் வகுப்புவாதச் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்துக் கட்டுரைகளை எழுதிக் குவித்தவர். மற்ற பெண்களைப் போல வீடே உலகம் என இருந்துவிடாமல், உலகையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர்.

ஓங்கி ஒலித்த குரல்

குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோது அவரது ஆட்சியில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது, இஸ்ரத் ஜஹான் முதலான போலி என்கவுன்டர்கள் ஆகியவை குறித்துப் பத்திரிகையாளர் ராணா அய்யூப் எழுதிய ‘குஜராத் கோப்புகள்’ நூலைக் கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்துத்துவ அமைப்புகள் கொதிப்படைய இதுவும் முக்கியக் காரணம். இவற்றையெல்லாம் காரணம் காட்டி கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளைத் தொடுத்து, சம்பந்தப்பட்ட அமைப்புகள் அவரை மிரட்டின.

கடந்த 2016-ல் பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட சில பிரமுகர்களைக் குறித்து ஒரு கட்டுரையைத் தனது ‘லங்கேஷ் பத்திரிகே’ இதழில் பிரசுரித்தார் என்பதற்காக, கௌரி மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அதற்கெல்லாம் கவலைப்படுபவரா அவர். ஜாமீனில் வெளிவந்து வழக்கம்போல் தன் பணியைச் செய்தார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக…

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலாவின் தற்கொலை இவரைப் பெரிதும் பாதித்தது. வெமூலாவுக்காகப் பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அதேபோல டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கண்ணையா குமார், ரஷீத், உமர் காலித் ஆகியோருக்கு ஆதரவாக நின்றார். இவர்களைத் தன் தத்துப் புத்திரர்கள் என்றே அவர் குறிப்பிட்டார்.

குஜராத்தின் உனா பேரெழுச்சியை முன்னெடுத்து நிகழ்த்திக் காட்டிய ஜிக்னேஷ் மேக்வானிக்கும் தப்பாமல் ஆதரவை அளித்தவர். ஏன், தமிழ்நாட்டின் திருநங்கையர்களில் ஒருவரான ரேவதி எழுதிய தன் வரலாற்று நூலை ‘பதுக்கு பயலு’என்ற பெயரில் கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே வாழ்ந்து தீர்த்தவரைத்தான், சமூக வலைத்தளத்தளங்களில் ‘நாய்’ என்றும், ‘கொன்றது சரிதான்’ என்றும் அரசு மரியாதையுடன் சவ அடக்கம் செய்யப்பட்டது பற்றியும் கேள்வி எழுப்பிக் கொக்கரிக்கின்றன சங் பரிவாரங்கள்.

உண்மையில் சொல்லப்போனால், நாம்தான் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் சக மனிதர்கள் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறவர்கள் என்றால் பால், இனம், மதம், மொழி, நிறம் என எந்தவிதமான பாகுபாடும் காண்பிக்க மறுக்கும் நபர்களில் நாமும் ஒருவர் என்றால், நம்மில் ஒவ்வொருவரும் இதேபோல ரத்தப் பலியாகும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நாம்தான் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை இப்போதும் உணராமல் இருக்கிறோம்.

கௌரி லங்கேஷ் தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை. எனக்காகவும் உங்களுக்காகவும் என நமக்காகத்தான் தன் எழுதுகோலை அவர் கம்பீரமாக உயர்த்திப் பிடித்தார் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

கௌரி லங்கேஷின் மறைவு குறித்து அவருடைய தங்கை கவிதா லங்கேஷை தொடர்புகொண்டு பேசினோம்.

“என் அக்கா, அப்பா மாதிரி ரொம்ப துணிச்சல் மிக்கவர். இந்துத்துவ கருத்துகளுக்கு எதிராகவும் சாதி அமைப்பு முறைகளுக்கு எதிராகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டாங்க. என் அப்பா நடத்திவந்த ‘லங்கேஷ்’ பத்திரிக்கையை 2005-ம் ஆண்டு அப்பா மறைந்த பிறகு அக்காதான் நடத்திவந்தார்கள். சமீபத்தில் பாஜகை-வைச் சேர்ந்த எம்.பி. பிரகலாத் ஜோஷி, கௌரி மீது தொடுத்த அவதூறு வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இப்படிப் பல வழக்குகளைப் போட்டாலும் கௌரி மிகவும் தைரியமாகச் செயல்பட்டுவந்தார். தண்டனைகள் பற்றியும், மிரட்டல்கள் பற்றியும் பயம் கொள்ளவே இல்லை. எப்பவும் நீதியின் பக்கம் இருந்தார்.

sisterjpg

கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில வாரத்திற்கு முன்புகூட பைக்கில் இரண்டு நபர் தொடர்ந்துவந்ததை என் அம்மா பார்த்திருக்கிறார். எங்கள் இருவருக்கு இடையில் கொள்கை அளவில் சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்துவந்தோம். கடவுள் நம்பிக்கை கௌரிக்கு இல்லை என்றாலும் எங்கள் வீட்டில் நடக்கும் பூஜைகளில் கலந்துகொண்டு சுண்டல், கொழுக்கட்டையை விரும்பிச் சாப்பிடுவார். குழந்தைகளுடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்.

எங்கள் அப்பாவைப் போலவே கொள்கைப்பிடிப்புடன் இருந்தார் கௌரி. அதனாலேயே அப்பாவின் இடத்தில் அக்காவைப் பார்த்தோம். ஆனால், தற்போது அவரைக் கோழைத்தனமாகக் கொன்றுவிட்டார்கள். கௌரியின் உடலைத்தான் கொல்ல முடியுமே தவிர அவரின் சிந்தனையையோ, எழுத்தையோ கொல்ல முடியாது. எங்கள் குடும்பத்துக்குப் பெரிய வழிகாட்டியாக இருந்த கௌரியை இழந்துவிட்டோம். எதனாலும் ஈடுசெய்ய முடியாத இழப்பு இது.

இந்தப் படுகொலை குறித்து கர்நாடக அரசு உரிய விசாரணையை மேற்கொள்ளும் என நம்புகிறோம். கௌரி லங்கேஷைக் கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போதுதான் இன்னொரு கௌரி லங்கேஷை இழக்காமல் இருப்போம்”

- இரா.வினோத்

 

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: asixjeeko@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்