பெண் இன்று

வாசிப்பை நேசிப்போம்: நினைவில் தங்கிவிட்ட அனுபவம்

செய்திப்பிரிவு

நாகர்கோவிலில் இயற்கை எழில் சூழ்ந்த அழகான சிறிய கிராமத்தில் என் தாத்தா - ஆச்சியின் வீடு இருக்கிறது. விடிந்தும் விடியாத பனிவிழும் காலைப்பொழுதில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தேர்வுக்குப் படிப்பதுபோல் என் தாத்தாவுடன் அமர்ந்து புத்தகங்கள் படித்தது என் நினைவலைகளில் அழகான அனுபவமாகத் தங்கிவிட்டது.

ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து அதன் ஒவ்வொரு பக்கத்தையும் பூபோல் திருப்பித் தொட்டுப் பார்க்கும் உணர்வே தனி மகிழ்ச்சிதான். எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு நல்ல நண்பன் புத்தகம்.

இன்றுவரை என் தாத்தா என் பிறந்தநாளுக்குப் புத்தகத்தைத்தான் பரிசாக அளிப்பார். நூலகத்துக்குச் சென்று ஒரு புத்தகத்தை எப்படித் தேர்வு செய்வது என்று அவர்தான் கற்றுக்கொடுத்தார். மேலும், கோகுலம், கண்மணி காமிக்ஸ், சிறுவர் மலர் போன்ற மாத, வார இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதவும் ஊக்குவித்தார். அதுபோல் இன்றுவரை மாத இதழ்களோடு வரும் இணைப்புப் புத்தகங்களை என் ஆச்சி சேர்த்துவைத்து எனக்கு அனுப்புவார்.

சிறுவர் இதழ்களில் தொடங்கிய வாசிப்பு படிப்படியாக பாரதியார், விவேகானந்தர், கல்கி, நா.பார்த்தசாரதி, நாகூர் ரூமி, சுகி சிவம், தென்கச்சி கோ. சுவாமிநாதன், லக்‌ஷ்மி, ராபின் சர்மா, சுதா மூர்த்தி என்று வளர்ந்துகொண்டே இருக்கிறது. என் வாசிப்பை என் கணவரும் ஊக்கப்படுத்துவார்.
இந்த இயந்திரமயமான வாழ்க்கையில் தொலைபேசி, தொலைக்காட்சி என்று மனதள விலும் உடலளவிலும் சோர்வளிக்கும் விஷயங்களில் ஈடுபடுவதைக் குறைத்து விட்டுப் புத்தகங்களை வாசித்து அனுபவிக்கத் தொடங்குவோம். நம் குழந்தைகளுக்கும் சிறுவயதிலிருந்தே புத்தகங்களை வாசிக்கக் கற்றுக் கொடுப்போம். நம் எண்ணங்களை விரிவடையச் செய்து வாழ்க்கையை அழகான கோணத்தில் பார்க்க உதவும் புத்தகங்களை வாசித்துப் பயனடைவோம்!

- ஏ. சாந்தி பிரபு, தூத்துக்குடி.

SCROLL FOR NEXT