150 நாள்களில் 150 மாரத்தான்கள்!

By திலகா

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எர்ச்சனா மர்ரே பார்ட்லெட் 150 நாள்கள் ஓடி, 150 மாரத்தான் ஓட்டங்களை நிறைவுசெய்திருக்கிறார்! 32 வயதான எர்ச்சனா, தினமும் ஒரு மாரத்தான் தொலைவைக் (42. 2கி.மீ.) கடந்து சாதனை படைத்திருக்கிறார்! 150 நாள்களில் 150 மாரத்தான் ஓட்டங்களை நிறைவுசெய்த முதல் பெண் என்கிற சிறப்பையும் பெற்றிருக்கிறார்!

ஆஸ்திரேலியாவின் வட குயின்ஸ்லாந்தில் உள்ள கேப் யார்க் முனையிலிருந்து மெல்போர்னில் உள்ள மெயின்லேண்டின் எல்லை வரை ஓடி முடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா தனித்துவமானதொரு கண்டம். இங்கே மட்டும் வாழக்கூடிய சிறப்பு உயிரினங்கள் காணப்படுகின்றன. ஆனால், பல விலங்குகளும் தாவரங்களும் அழிந்துவரக்கூடிய ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் இப்போது இருக்கின்றன. அந்த உயிரினங்களைக் காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவும் நிதியைத் திரட்டுவதற்காகவும் இந்த ஓட்டங்களை மேற்கொண்டதாகச் சொல்கிறார் எர்ச்சனா.

“நான் தொழில்முறை ஓட்டங்களை மேற்கொண்டு வருபவள். அப்படியும் முதல் மூன்று வாரங்கள் ஓடும்போது சிரமங்களைச் சந்தித்தேன். மூன்று முறை காயம் ஏற்பட்டது. அதனால், ஓடுவதில் தடை வந்துவிடுமோ என்று பயந்தேன். நகரம், கிராமம், காடு, மலை என வெவ்வேறு தன்மைகொண்ட நிலப்பரப்பில் ஓட வேண்டியிருந்ததால், என் உடல் அதற்கு ஏற்ற மாதிரி பழகுவதற்குச் சில நாள்கள் தேவையாக இருந்தன. உடல் ஏற்றுக்கொண்ட பிறகு ஓடுவது எளிதாகிவிட்டது. ஆனால், இந்த 150 நாள்களிலும் என்னைப் பெரிதும் பாதித்தது வெயில்தான்” என்கிறார் எர்ச்சனா.

ஓட்டப்பந்தய வீரருக்கு ஒரு நாளைக்கு 5 முதல் 6 ஆயிரம் கலோரிகள் தேவைப்படும். அதே நேரத்தில் எடையும் அதிகரிக்கக் கூடாது. களைப்பில் ஒவ்வோர் இரவும் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். ஆனால், அதிகாலை எழும்போது ஓட்டத்தை நிறுத்திவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்குக் கால்கள் ஓய்வுக்காகக் கெஞ்சும். சிறிது நேரம் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு ஓட்டத்தைத் தொடர்வார் எர்ச்சனா.

“6 ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடப்பது எளிதான விஷயமல்ல. ஒருநாள் காட்டு வழியில் ஓடிக்கொண்டிருந்தபோது, காட்டெருமை துரத்த ஆரம்பித்தது. என் கால்கள் பயத்தில் நடுங்கின. நல்லவேளையாக என் குழுவினர் காரில் வந்துசேர்ந்தார்கள். காரில் ஏறி அந்த இடத்தைப் பத்திரமாகக் கடந்தேன். அதேபோல தினமும் பூச்சிக்கடியால் அவதியுற்றேன். வெயிலால் ஏற்பட்ட கொப்புளங்களுக்கு மருந்துகளைப் போட்டுக்கொண்டால்தான் மறுநாள் ஓடமுடியும். ஷூக்களுடன் தூங்குவேன். காலையில் எழுந்து பார்த்தால் கால்கள் வீங்கியிருக்கும். ஆனால், எதற்காகவும் என் ஓட்டத்தை ஒருநாளும் நிறுத்தவில்லை. நான் செல்லும் வழியெங்கும் மக்கள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். தங்களால் இயன்ற நிதியை வழங்கினார்கள். அதனால் எந்தத் தடையும் என் மனத்தையோ உடலையோ பாதிக்கவில்லை” என்கிறார் எர்ச்சனா.

150 நாள்களில் 150ஆவது மாரத்தானை நிறைவு செய்தபோது, ஏராளமான மக்கள், “அதிசயமான மனிதர் நீங்கள்! இது தனிநபர் சாதனை மட்டுமல்ல, பொதுநலன் சார்ந்த இந்தச் சாதனை மிகவும் பாராட்டத்தக்கது” என்று ஆரவாரம் செய்தபோது, அவ்வளவு கஷ்டங்களும் காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் எர்ச்சனா.

இந்த 150 மாரத்தான்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்று நினைத்தார் எர்ச்சனா. ஆனால், 82 லட்சம் ரூபாயைத் திரட்டியிருக்கிறார்! அதனால் ஓட்டத்துக்கான நோக்கமும் நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்!

“உயிரினம் ஒன்று அழிந்துவிட்டால், அதை மீண்டும் பூமியில் கொண்டுவருவது எளிதானதல்ல. திரைப்படங்களில்தாம் டையனோசர்களைக் கொண்டுவர முடியும். கோலாக்கள் அழிந்துவிட்டால், அவற்றை மீண்டும் கொண்டுவர முடியுமா? எல்லாருக்கும் பிற உயிரினங்கள் மீது அன்பும் அக்கறையும் வந்தால், பல உயிரினங்களைக் காப்பாற்றி விடலாம்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் எர்ச்சனா மர்ரே பார்ட்லெட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

53 mins ago

கல்வி

17 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

மேலும்