டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சானிட்டரி நாப்கின்களில் சேர்க்கப்பட்டிருக்கும் வேதிப்பொருட்கள் குறித்து அண்மையில் நடத்திய ஆய்வு நாப்கின்களின் பயன்பாடு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்படியொரு ஆய்வு நடத்தப்படுவதற்கு முன்பே ரசாயனப்பொருட்களின் தீங்கு குறித்த விழிப்புணர்வோடும் அக்கறையோடும் தன் தொழிலைத் தொடங்கியவர் அபிராமி துஷ்யந்த். சென்னையின் பிரபல திரைக்குடும்பத்தின் மருமகளான இவர், எந்த இடத்திலும் தன் குடும்பத்தின் பெயரைப் பயன்படுத்துவதில்லை. ‘ஹானஸ்ட்பேட்’ என்கிற பெயரில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் அபிராமி, பொருளின் தரமும் நேர்மையுமே தன் தொழிலுக்கான மூலதனம் என்கிறார்.
அபிராமியின் தந்தை சொந்தமாகத் தொழில் செய்துவந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு அண்ணன்கள் அதைக் கவனிக்க, ஃபேஷன் டிசைனிங் முடித்திருந்த அபிராமி சொந்தமாக ‘பொட்டீக்’ நடத்திவந்தார். திருமணத்துக்குப் பிறகு குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளவே நேரம் சரியாக இருந்ததால் ஃபேஷன் தொழிலுக்கு ஓய்வு கொடுத்தார். குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்ததும் அவருக்குள் இருந்த சுயதொழில் ஆர்வம் மீண்டும் தலைதூக்கியது. மாமனாரும் அவருடைய தம்பியும், “உன் அடையாளத்தை விட்டுவிடாதே பாப்பா” என்று சொல்ல சானிட்டரி நாப்கின்களை விநியோகம் செய்யும் தொழிலைச் செய்தார். பெண்கள் மாதந்தோறும் பயன்படுத்தும் பொருளை விநியோகம் செய்கிறோம், அது தரமானதாக இருக்க வேண்டும் என்று அபிராமி நினைத்தார். உடனே செயலிலும் இறங்கினார். தான் விநியோகித்துவந்த பிரபல சானிட்டரி நாப்கின்களை 2019இல் ஆய்வுக்கு உட்படுத்தினார். அவற்றில் இருந்த ரசாயனப் பொருட்கள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
ரசாயனங்களுக்குத் தடை
“நானும் அந்த நாப்கின்களைத்தான் பயன்படுத்திவந்தேன். இவ்வளவு ரசாயனம் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்குமே. இதற்கு மாற்று என்ன என்று யோசித்து அதற்கான தேடலில் இறங்கினேன். நாப்கின்களில் நமக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் பயன்பாடு. அதைக் கூடுமானவரை குறைக்க நினைத்தேன். இரண்டாவது, உறிஞ்சும் தன்மைக்காகச் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள். அவற்றுக்குப் பதிலாக கற்றாழை, கரி இவற்றைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது. மூன்றாவது, நறுமணத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள். உண்மையில் மாதவிடாய் ரத்தம் நாப்கின்களில் இருக்கும் வேதிப்பொருட்களுடன் சேர்ந்து வினைபுரியும்போதுதான் துர்நாற்றம் வீசுகிறது. அதனால்தான் நறுமணமூட்டிகள் தேவைப்படுகின்றன. இயற்கைப் பொருட்களை வைத்து நாப்கின்களைத் தயாரித்தால் அதற்கான தேவை இருக்காது என்பது புரிந்தது. பல்வேறுகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு ஓரளவுக்கு இயற்கைக்கு உகந்த நாப்கின்களைத் தயாரித்தோம். இந்த நாப்கின்களை எந்த ஆய்வுக்கு வேண்டுமானாலும் உட்படுத்தலாம். அதில் அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி ஒரு சதவீதம்கூட ரசாயனப்பொருள் இருக்காது. அதனால்தான் எங்கள் தயாரிப்புக்கு ‘ஹானஸ்ட்பேட்’ என்று பெயர்வைத்தோம். இதை எட்டு மணி நேரம் வரைக்கும் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன் சிறப்பு” என்கிறார் அபிராமி.
தொழில்முனைவோர் திட்டம்
தன் தயாரிப்பைப் பலதரப்புப் பெண்களிடமும் கொடுத்து அவர்களிடம் கருத்து கேட்டு அதன் பிறகே சந்தைப்படுத்தினார். பிரபல நிறுவனத் தயாரிப்பைப் பயன்படுத்திய மக்களுக்குப் புதிதாகச் சந்தைக்கு வரும் எதன்மீதும் சந்தேகம் இருக்கும்தானே. அதை அபிராமியும் எதிர்கொண்டார். ஆனால், அதைச் சமாளிப்பதற்காகப் பெண்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டத்தைத் தொடங்கினார். “பெரிய அளவில் விளம்பரம் செய்வதைவிட நமக்குத் தெரிந்த, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நல்லதாக நாலு வார்த்தை சொல்வதே மிகப்பெரிய விளம்பரம்தானே. அதற்காக ‘புராஜெக்ட் சக்தி’ திட்டத்தைத் தொடங்கினோம். இதில் இணையும் பெண்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்பட்டுப் பிறகு அவர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட வருமானத்தைப் பெறும் அளவுக்கு நாப்கின்களை சப்ளைசெய்வோம். இப்போதைக்கு சென்னையில் தொடங்கியிருக்கும் எங்கள் பணி விரைவில் கிராமப்புறங்களையும் சென்றடையும். எங்கள் இணையப் பக்கத்தில் (https://thehonestpad.com/) மட்டுமல்லாமல் சில நிறுவனங்களின் இணைய விற்பனைப் பிரிவிலும் எங்கள் நாப்கினை வாங்கலாம்” என்கிறார் அபிராமி.
குப்பையில் நாம் வீசும் நாப்கின்கள் பல நூறு ஆண்டுகள் மக்காமல் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துவது மிகப்பெரிய சூழல் அச்சுறுத்தல் என்பதையும் அபிராமி உணர்ந்திருக்கிறார். “நாப்கின் பயன்பாட்டில் மிக முக்கியமானது அதை டிஸ்போஸ் செய்வது. அதற்காகப் பெருநிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து நாப்கின் எரியூட்டிகளை அமைக்கும் பணியையும் செய்துவருகிறோம். எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்திய பலரும் நேர்மறையான கருத்துகளைச் சொல்வது நான் இந்தத் தொழிலைத் தொடங்கியதற்கான நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது” எனப் புன்னகைக்கிறார் அபிராமி துஷ்யந்த்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago