பருவத்தே பணம் செய்: மியூச்சுவல் ஃபண்ட்

By சி.முருகேஷ்பாபு

மியூச்சுவல் ஃபண்ட் கொஞ்சம் ஆபத்து, அதேசமயம் பாதுகாப்பு என்று நம் தேவைக்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்பு.

சிலருக்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கான பண வாய்ப்பும் இருக்கும். ஆனால், எந்த நேரத்தில் எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்? எந்த நேரத்தில் முதலீடு செய்வது ஆபத்தான விஷயம் என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து தீர்மானிப்பதற்கான நேரம் இல்லாமல் இருக்கும். அப்படி நேரம் இல்லை என்ற காரணத்துக்காக முதலீட்டை நிறுத்தத் தேவையில்லை. உங்களுக்காக அலசி ஆராய்ந்து முதலீடு செய்ய இன்னொருவர் இருக்கிறார் என்று சொல்லும் முதலீட்டு வாய்ப்புதான் மியூச்சுவல் ஃபண்ட்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக முதலீடு செய்யாமல் எல்லோரும் ஒருவர் கையில் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, அவர் முதலீட்டு முடிவுக்கு ஏற்பச் செயல்படுவது. எந்தத் துறையில் முதலீடு செய்யலாம், என்ன லாபம் சம்பாதிக்க முடியும் என்றெல்லாம் அவரே தீர்மானிப்பார். அந்த நபரைத்தான் மியூச்சுவல் ஃபண்ட் என்று சொல்கிறோம். நபர் என்பது ஒரு புரிதலுக்காக, மற்றபடி மியூச்சுவல் ஃபண்ட் ஒரு முதலீட்டு வாய்ப்பு.

நாம் சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டும். எந்த வகையான பயணத்தைத் தேர்வு செய்கிறோம் என்பதில்தான் நம் தன்மை வெளிப்படும். நம்மிடம் கார் இருக்கிறது என்றால் மிகவும் எளிதான பயணமாக அது அமையும். நமக்கே கார் ஓட்டத் தெரிந்தால் இன்னும் எளிதான பயணம். வேகமாகத் திட்டமிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்துவிட முடியும். ஆனால், நாமே கார் ஓட்டுவதில் ஒரு சின்ன ஆபத்து இருக்கிறது.

சரி, ஓட்டுனரை வைத்துக்கொள்ளலாம், திட்டமிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்துவிட முடியும் என்பன போன்ற நன்மைகள் இருந்தாலும், அவர் வண்டியைச் சரியாக ஓட்ட வேண்டும். போக்குவரத்தில் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியதாக இருக்கும்.

இதெல்லாம் வேண்டாம், காரை வீட்டில் வைத்துவிட்டுப் பேருந்தில் போய்விடலாம் என்றால் ஆபத்து ரொம்பவே குறைவு. நன்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுனர் பேருந்தை ஓட்டுவார். நாம் நல்ல இருக்கையில் சாய்ந்துகொண்டே சுகமாகப் பயணிக்கலாம். ஆனால், நாம் திட்டமிட்ட நேரத்துக்குப் பயணிக்க முடியாது. பேருந்து என்ன நேரத்துக்கு இயக்கப்படுகிறதோ அந்த நேரத்துக்குதான் நாம் பயணிக்க முடியும். மிதமான வேகம், நிறைய நிறுத்தங்கள் போன்ற அசௌகரியங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

போய்ச் சேர வேண்டிய இடம் ஒன்றுதான் என்றாலும் பயணிக்கும் வகைகள் பலவிதமாக இருக்கின்றன. எல்லாவற்றிலுமே நல்ல விஷயங்களும் இருக்கின்றன. ஆபத்துகளும் இருக்கின்றன. அதுபோலத்தான் மியூச்சுவல் ஃபண்டும். இதில் பலவிதமான முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. இதிலும் பல நன்மைகளும் சில ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன.

முழுக்க முழுக்க பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்றால் நாமே தேர்ந்தெடுத்து, திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். நம் பயணத்துக்காக நாமே கார் ஓட்டுவது போல! அதை நம்மால் செய்ய முடியாதபோது நாம் தேர்ந்தெடுக்கும் மற்ற விஷயங்கள்தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.

நம் காருக்கு ஓட்டுனர் வைத்து வண்டியை ஓட்டிக்கொண்டு திருச்சிக்குச் செல்வது போல, அனுபவம் வாய்ந்த ஓட்டுனர் கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, பேருந்தில் ஏறிப் பயணம் செய்வதுபோல. நம் முதலீட்டுக்கு இன்னோர் ஆளை வைத்து சூழலுக்கு ஏற்ப முதலீடு செய்ய வைப்பது. இதிலேயே பல விதங்கள் இருக்கின்றன. நம் கார், பேருந்து பயணம்போல!

மியூச்சுவல் ஃபண்டில் முதல் வகை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள். நாம் சிறுகச் சிறுக சேமித்து முதலீடு செய்ய நினைக்கும்போது அந்த முதலீட்டிலிருந்து அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். அந்த வருமானம் பங்குச் சந்தை மூலமாகக் கிடைக்கும் என்ற விஷயமும் நமக்குத் தெரியும். ஆனால், பங்குச் சந்தையில் ஏற்றம் இருக்கிறதா? அடுத்து எப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்ற கணிப்புக்கு நேரம் இருக்காது. அப்படிப்பட்ட சூழலில் நல்ல பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்துவிட்டால் போதும். இந்த வகை திட்டத்தின் மூலம் திரட்டப்படும் மொத்தத் தொகையும் பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்யப்படும்.

அதேபோல, நல்ல திட்டங்களாக இருந்தால் போதும், லாபம் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்பவர்கள் டெஃப்ட் ஃபண்ட் எனப்படும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் திரட்டப்படும் மொத்தத் தொகையும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். இதில் லாபம் கொஞ்சம் குறைவாக இருக்கும் என்றாலும் முதலீட்டுக்கு மோசம் வராது.

மூன்றாவது ஒரு வகை இருக்கிறது. அது இரண்டும் கலந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். பங்குச் சந்தையில் உள்ள அதிக லாபமும் கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களில் உள்ள பாதுகாப்பும் கலந்த முதலீட்டுத் திட்டம் இது. இதில் திரட்டப்படும் தொகையில் எந்த அளவுக்குப் பங்குகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் எந்த அளவுக்குப் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை நடத்துபவர்களே தீர்மானிப்பார்கள்.

இவை அடிப்படையான திட்டங்கள். இதற்குள் இன்னும் பல வகைகள் இருக்கின்றன. அவை பற்றியும் இந்த வகை முதலீட்டில் உள்ள சாதக பாதகங்கள் பற்றியும் இனி பார்க்கலாம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்