பால்கனியில் மழையை ரசித்துக்கொண்டே தேநீரைப் பருகிக்கொண்டிருந்தார்கள் கமலா பாட்டியும் கல்பனா ஆன்ட்டியும்.
“போன வருஷ மழையை நினைச்சி பயப்படுறதா, இல்லை தண்ணீர்ப் பஞ்சத்தை நினைச்சி கவலைப்படுறதா?” என்று வானத்தைப் பார்த்தபடி சொன்னார் கமலா பாட்டி.
“அந்த பயம் வாழ்நாளுக்கும் மறக்காது. ஆனா இந்த வருஷம் அளவோடு பெய்யட்டும். பூமி செழிக்கட்டும். தண்ணீர்ப் பிரச்சினை தீரட்டும்” என்று கல்பனா ஆன்ட்டி சொல்லிக்கொண்டிருந்தபோது, கனிஷ்கா வந்தாள்.
“முதல்ல சூடா மசாலா பொரி சாப்பிடு கனிஷ்கா” என்ற கல்பனா ஆன்ட்டி, அவள் கையில் இருந்த பரிசுப் பொருளைப் பார்த்தார்.
“என்கூட படிக்கிற தீபாவுக்குப் படிப்பு முடியறதுக்குள்ள கல்யாணம் வச்சிட்டாங்க. அவளுக்கு நிறையப் படிக்கணும்னு ஆசை. அவளுக்காகத்தான் இதை வாங்கினேன் ஆன்ட்டி”
“இப்படித்தான் தெலங்கானாவுல ரச்சனாங்கற பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்குத் தயாராயிட்டு இருந்தாங்க ரச்சனா. எதிர்பாராமல் திருமண நாளில் தேர்வு வந்துருச்சு. அதிர்ச்சியடைந்த ரச்சனா, தன் லட்சியமே ஆசிரியை ஆவதுதான்னு சொல்லிருக்காங்க. ரச்சனாவை மாப்பிள்ளை வீட்டார் புரிஞ்சுகிட்டு, முகூர்த்தத்தைத் தள்ளி வச்சு, தேர்வுக்கு அனுப்பிட்டாங்க. ‘எல்லாப் பெண்களுக்கும் கணவனும் புகுந்த வீடும் இப்படி ஆதரவா இருந்தா வாழ்க்கை முழுவதும் வெற்றிதான்’னு சொல்லியிருக்காங்க ரச்சனா” என்ற கமலா பாட்டி, டீயை ஊற்றி கனிஷ்காவிடம் கொடுத்தார்.
“சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால், ‘பெண்கள் கார் ஓட்டக் கூடாதுன்னு தடை விதிப்பது, அவங்க படிக்கக் கூடாதுன்னு சொல்றதுக்குச் சமம்’னு சொல்லியிருக்கார். பெண்களுக்கு அதிக கெடுபிடி இருக்கும் சவுதியில், அந்த நாட்டு இளவரசரே இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கார்னா விரைவில் மாற்றம் வரும்னு நம்புவோம்” என்றாள் கனிஷ்கா.
“ஜோ காக்ஸ் நினைவிருக்கா? பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாதுன்னு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தவரை, அடிப்படைவாதி தாமஸ் மயர் சுட்டுக் கொன்றார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இளம் அரசியல்வாதி ஜோ காக்ஸைக் கொன்றவருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை கிடைச்சிருக்கு” என்று கல்பனா ஆன்ட்டி சொல்லிக்கொண்டிருந்தபோதே, இடைமறித்தாள் கனிஷ்கா.
“ஜோ காக்ஸ் ரொம்ப அற்புதமான பெண். அவரைப் போன்றவர்கள் இன்னும் அதிகக் காலம் வாழ்ந்திருக்கலாம் ஆன்ட்டி”
“ஆமாம். தீர்ப்பு கேட்டு, ஜோ காக்ஸின் கணவர் பிரெண்டன் சொன்னதைக் கேளு. ‘குற்றம் செய்தவருக்குத் தண்டனை தரணும்னு நாங்க எதிர்பார்க்கலை. வெறுப்புணர்வு நிறைந்த அந்த மனிதரைப் பார்த்து நான் இரக்கப்படுகிறேன்’னு சொல்லியிருக்கார். எவ்ளோ பெரிய மனசு அவருக்கு!”
“சான்ஸே இல்ல ஆன்ட்டி. மனைவியை இழந்த ஒருவர் இப்படிச் சொல்லியிருக்கார்னா அது ஆச்சரியம்தான்!’’ என்ற கனிஷ்கா, டேபிளில் இருந்த பத்திரிகையைப் புரட்டினாள்.
“கனிஷ்கா, இன்னைக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள். உலகிலேயே எய்ட்ஸ் நோயாளிகள் குறைவாக இருக்கற நாடு எது தெரியுமா?”
“தெரியாது ஆன்ட்டி”
“கியூபாதான். அதுமட்டுமில்ல, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுறும்போது, குழந்தைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கியூபா மருந்து கண்டுபிடித்தது இந்த நூற்றாண்டின் முக்கிய சாதனை! பிரசவ கால மரணங்கள் மிக மிகக் குறைவாக இருக்கும் நாடும் கியூபாதான். அங்கே தொழில்நுட்பத் துறைகளில் 70 சதவிகிதம் பெண்கள் வேலை செய்யறாங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம். இதை எல்லாம் சாத்தியப்படுத்திய தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ உயிரோட இல்லைங்கறது வருத்தமா இருக்கு” என்று சொன்னார் கல்பனா ஆன்ட்டி.
“உலகத்திலேயே தரமான மருத்துவச் சேவை கியூபாவில்தான் இருக்கு. எபோலா, ஸிகா போன்றவற்றால் எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்பட்டாலும் கியூப மருத்துவர்கள் உதவிக்கு ஓடி வந்துடுவாங்க. ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு நம்ம ஊரில் இவ்வளவு அன்பு கிடைச்சிருக்குன்னா அது காஸ்ட்ரோவுக்குத்தான்!” என்று நெகிழ்ந்தார் கமலா பாட்டி.
“ஆமாம் பாட்டி. அதுசரி, நாம மூணு பேரும் அடுத்த வருஷம் கோவாவுக்குப் போலாமா? சர்வதேசத் திரைப்படங்களைப் பார்க்கலாம். இந்த வருஷம் டாட்டர் (Daughter) என்ற ஈரானிய படத்துக்கு தங்க மயில் விருது கிடைச்சுருக்கு. இந்தப் படம் கண்டிப்பான தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளி சிக்கலைச் சொல்லுதாம்”
“ஓ… அப்படியா! நானும் கல்பனாவும் கெளரி ஷிண்டேயின் ‘டியர் ஜிந்தகி’ பார்த்து அசந்து போயிருக்கோம்!”
“என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களா? The Bikerni என்பது பெண்கள் நடத்தும் மோட்டார் சைக்கிள் சங்கம். இந்த அமைப்பில் இருக்கும் பெண்கள் இரண்டு வாரம் நாடு தழுவிய பைக் டூர் கிளம்பறாங்க. எதுக்குத் தெரியுமா? பாலினச் சமத்துவம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு. நாமளும் சங்கத்துல சேர்றோம், பைக்ல கிளம்பறோம்” என்று சிரித்தாள் கனிஷ்கா.
“மழை விடற மாதிரி தெரியலை. ரெயின் கோட் போட்டுட்டுக் கிளம்பறேன். கனிஷ்கா வர்றீயா?” என்று எழுந்தார் கல்பனா ஆன்ட்டி.
“பாட்டி கையால டின்னர் சாப்பிட்ட பிறகுதான் கிளம்புவேன்” என்று கையசைத்து விடைகொடுத்தாள் கனிஷ்கா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago