கமலா பாட்டி, கல்பனா ஆன்ட்டி, கனிஷ்கா மூவரும் நகரைச் சுற்றி வந்த பிறகு, ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தனர்.
“இந்தப் புயல் இவ்வளவு மரங்களைச் சாய்ச்சிடுச்சே… இந்த மரங்களை எல்லாம் மீண்டும் உருவாக்க இன்னும் எத்தனை காலமாகும்?” என்று கவலைப்பட்டார் கமலா பாட்டி.
“இருக்கும் மரங்களும் வீசிய காற்றில் தீய்ந்து போன மரங்களாக நிற்கின்றன. மனுசங்க நிலைமையும் ரொம்ப மோசமாதான் இருக்கு. எத்தனை நாள் மின்சாரமும் தண்ணியும் இல்லாம சமாளிக்க முடியும்? சரி, மெஸ்ல வாங்கிச் சாப்பிடலாம்னா கையில் காசு இல்லை. எத்தனை வேளை கார்டு வாங்கற பெரிய உணவகங்களில் குடும்பத்தோடு சாப்பிட முடியும்? எல்லாப் பிரச்சினைகளும் ஒரே நேரத்துல வந்தா நாம என்னதான் பண்ணுறது?” என்ற கல்பனா ஆன்ட்டி, மூன்று காபிகளுக்கு ஆர்டர் கொடுத்தார்.
“பெண் உறுப்புச் சிதைப்பு ஆப்பிரிக்க நாடுகளில்தான் இருக்குன்னு நினைச்சிட்டிருக்கோம். ஆனா நம்ம நாட்டிலும் இருக்கு என்ற தகவல் என்னை அதிர்ச்சியடைய வச்சிருச்சு பாட்டி…” என்ற கனிஷ்காவை இடைமறித்தார் கல்பனா ஆன்ட்டி.
“பெண் உறுப்புச் சிதைப்பு மதச் சம்பிரதாயம். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா என்று எங்கெல்லாம் இருக்காங்களோ, அங்கெல்லாம் இது நடத்தப்படுகிறது. உலக சுகாதார அறிக்கையின்படி 30 நாடுகளைச் சேர்ந்த 20 கோடிப் பெண்களுக்கு இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கு...”
“நம் நாட்டிலுள்ள தாவூதி போரா முஸ்லிம் பெண்கள் 30 பேர், இந்த விஷயத்தை வெளியிட்டு, மனு ஒன்றை ஐ.நாவுக்கு அனுப்பியிருக்காங்க. பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் மிகப் பெரிய கொடுமை இது. இதைத் தடை செய்தால்தான் நாம் உண்மையிலேயே நாகரிகம் அடைந்ததாக அர்த்தம்” என்றாள் கனிஷ்கா.
காபி வந்தது.
“யூனிசெஃப் சிறுவர் நிதியம் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவு பெறும் நிகழ்ச்சி நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது. இதில் யூனிசெப்பின் புதிய சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டிருக்கார். குழந்தைகள் வன்முறைகளால் பாதுகாப்பின்றி இருக்கும் சூழல் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்காக எல்லோரும் குரல் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க பிரியங்கா.”
“வாழ்த்துகள் பிரியங்கா! குழந்தைகள் மீதான வன்முறை சிரியாவின் அலெப்போ நகரில்தான் அதிகமா நிகழ்த்தப்படுது. அந்தக் கொடுமைகளைச் செய்திகளில் பார்க்கும்போது மனம் பதறுது. குழந்தைகள் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்தவும் போரைக் கைவிடவும் நூற்றுக்கணக்கான சிரியா பெண்கள், கைகளில் குழந்தை பொம்மைகளுடன் போராட்டம் நடத்தியிருக்காங்க. போரை நடத்துவது அதிகாரப் பசிகொண்ட ஆண்கள், பாதிக்கப்படுவது அப்பாவிக் குழந்தைகளும் பெண்களும்தான்…”
“நீங்க சொல்றது ரொம்பச் சரி ஆன்ட்டி. சிரியாவில் ராணுவமும் ஐஎஸ் படைகளும் பெண்கள் மீது நிகழ்த்தும் தாக்குதல்களுக்குப் பயந்து, தற்கொலை செய்துகொள்வதாக ஒரு பெண்ணின் கடிதம் வெளிவந்திருக்கு. அத்தனைப் பேரும் சாகறதுக்குள்ளே சிரியாவில் போரை நிறுத்தணும்” என்றாள் கனிஷ்கா.
“சோமாலியாவில் பிரசவ கால மரணங்கள் அதிகம் நிகழ்கிறது. அதைத் தடுப்பதற்காக சோமாலிய பெண் மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். போரால் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் மொகதீஷு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லை. அங்கே பணிபுரியும் பெண் மருத்துவர்களுக்கு 9 மாதங்களாகச் சம்பளமும் வழங்கப்படவில்லை. ஆனாலும் பெண் மருத்துவர்கள் உயிர்களைக் காக்கப் போராடிவருகிறார்கள்.”
“எவ்வளவு அற்புதமான பெண்கள்! போருக்கு எதிராகவும் பெண்கள்தான் போராடறாங்க, மரணங்களைத் தடுக்கவும் பெண்கள்தான் போராடறாங்க. என்னிக்குமே பெண்கள் ஆக்கத்துக்கு மட்டுமே துணை நிற்பாங்க. சரி, இன்னொரு காபி சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள் கனிஷ்கா.
மீண்டும் காபி வந்தது.
“ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் சஃபியா ஃபெரோசி. அகதிகள் முகாமில் வளர்ந்த இவர், இப்போ அந்த நாட்டின் விமானப்படை விமானி. சாதிக்கும் எண்ணம் இருந்தால் வானமே எல்லைன்னு சொல்வாங்க. அதை உண்மையாக்கியிருக்கார் இந்தப் பெண். ஆப்கானிஸ்தானின் ரெண்டாவது பெண் விமானி இவர். இவங்களைப் பார்த்து இன்னும் 5 பெண்கள் விமானப்படையில் பயிற்சி விமானிகளாகச் சேர்ந்திருக்காங்க” என்றார் கமலா பாட்டி.
“கிரேட்! ஆப்கானிஸ்தானில் நல்ல முன்னேற்றம். ஆனா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகர விமான நிலையத்தில் நடந்த விஷயத்தைக் கேளுங்க. டெனிஸ் ஆல்பர்ட் என்ற பெண், விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், கீமோ சிகிச்சைக்காக மார்பகத்தில் உலோகக் கம்பியைப் பொருத்தியிருக்கார். இதை வேறு ஏதோ என்று சந்தேகப்பட்ட பாதுகாவலர்கள், அவரது எதிர்ப்பை மீறி மார்பைக் கசக்கி வேதனைப்படுத்தியிருக்காங்க. பாதுகாப்பு முக்கியம்தான். அதுக்காக ஒரு வரைமுறை இல்லையா?” என்ற கல்பனா ஆன்ட்டியின் குரலில் கோபம் தெரிந்தது.
“கல்பனா சூடு குறையறதுக்குள்ள காபியைக் குடி. இந்த வருஷம் கொலம்பிய அதிபர் ஹுவான் மானுவேல் சான்டோஸுக்குதான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைச்சிருக்கு. 52 ஆண்டுகள் ஃபராக் கிளர்ச்சியாளர்களோடு நடந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு இந்த நோபல் பரிசை அர்ப்பணிச்சிருக்கார் இவர். இறுதி அமைதி உடன்படிக்கையை உருவாக்க இந்த நோபல் பரிசு உதவியிருப்பதாகச் சொன்னவர், வன்முறைகளற்ற மாற்று வழிகள் இருக்கும்போது, ஆயுத பலத்தால் வெற்றி காண்பது மனித உணர்வின் தோல்வியைக் காட்டுகிறது என்றார்.”
“போர் மனித உணர்வின் தோல்வின்னு எவ்வளவு அழகாகச் சொல்லிருக்கார்! இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுப் பெற்ற பாப் டிலனின் போருக்கு எதிரான பாடல் வரிகளையும் சான்டோஸ் குறிப்பிட்டார் பாட்டி”
“பெண்கள் மட்டுமில்லை, அமைதியை ஆதரிக்கும் ஆண்களும் இருக்காங்க. இவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலகில் நிச்சயம் மாற்றம் நிகழும்” என்ற கல்பனா ஆன்ட்டியின் குரலில் நம்பிக்கை தெரிந்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago