கமலா கல்பனா கனிஷ்கா: இந்தப் பையைச் சாப்பிடலாம்!

By பாரதி ஆனந்த்

கடற்கரையில் கமலா பாட்டி, கல்பனா ஆன்ட்டி, கனிஷ்கா மூவரும் மவுனமாக அமர்ந்திருந்தனர்.

“ஒவ்வொரு இறப்பும் மனித வாழ்க்கை நிரந்தரம் இல்லைன்னு சொல்லிட்டே இருக்கு” என்று தூரத்தில் தெரிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியைப் பார்த்தார் கமலா பாட்டி.

“நெல்சன் மண்டேலா அவங்களுக்குப் பிடிச்ச தலைவராம். அவர் மறைந்த நாளிலேயே இவங்களும் போயிட்டாங்க பாட்டி.”

“நெல்சன் மண்டேலா பேத்தி ஜோலெகா. சின்னக் குழந்தையில் பாலியல் வன்முறையிலிருந்து தப்பியிருக்கார். அந்தப் பாதிப்பிலிருந்து வெளிவர முடியாமல் குடி, போதை என்று பலவற்றுக்கும் அடிமையாகிவிட்டார். பிறகு 2 குழந்தைகளைப் பெற்று, அவர்களை நோய்க்கும் விபத்துக்கும் பறிகொடுத்துவிட்டார். துயரத்தின் எல்லைக்குச் சென்ற ஜோலெகா, இரண்டு முறை மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டார். தற்போது அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு, மார்பகப் புற்றுநோய், சாலைப் பாதுகாப்பு போன்ற விஷங்கள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்…” என்று கல்பனா ஆன்ட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்தாள் கனிஷ்கா.

“எவ்வளவு பெரிய தலைவரின் பேத்தி, இப்படி எல்லாம் கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார்... மண்டேலா இவரை நினைத்து எவ்வளவு மனம் வருந்தியிருப்பார்?”

“ஜோலெகாவும் அதற்காக இப்போது மிகவும் வருந்துகிறார். தாத்தா இருந்தபோது, நான் அவருக்குப் பெருமை தேடித் தரவில்லை. ஆனால், இன்று நான் இருக்கும் நிலையைப் பார்த்து தாத்தா நிச்சயம் நிம்மதிகொள்வார் என்கிறார்.”

“பாவம், இனியாவது ஜோலெகாவுக்கு அமைதியான வாழ்க்கை அமையட்டும். தினம் தினம் வன்முறைகளைச் செய்திகளிலும் நேரிலும் பார்த்துப் பழக்கப்படுபவர்களுக்கு இரக்க குணம் குறைஞ்சிட்டே வருது கல்பனா” என்று நிறுத்தினார் கமலா பாட்டி.

“எதை வச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க பாட்டி?”

“செஞ்சிலுவைச் சங்கம் 16 நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியிருக்கு. இதில் எதிரிப் போராளிகளிடமிருந்து தகவல்களை வாங்குவதற்கு, அவர்களைச் சித்திரவதை செய்யலாம்னு 52 சதவிகிதம் பேர் சொல்லியிருக்காங்க. 1999-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 66 சதவிகிதம் பேர் சித்திரவதை செய்வது தவறுன்னு சொல்லிருக்காங்க, இப்போ அது 48 சதவிகிதமா குறைஞ்சிருச்சு” என்ற கமலா பாட்டியின் குரலில் கவலை வெளிப்பட்டது.

“ரொம்பக் கவலைப்படாதீங்க பாட்டி. எதிரியாக நினைப்பதால் இப்படிச் சொல்லிருப்பாங்க” என்று சமாதானம் செய்த கனிஷ்கா, “பத்பநாப சுவாமி கோயிலுக்குள் லெகிங்ஸ் போட்டுக்கிட்டு வரக் கூடாதுன்னு கோயிலுக்குள் நிர்வாகம் சொல்லியிருக்கு. அந்தக் கோயில் ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் வரலாமாம். பெண்கள் லெகிங்ஸ் போடக் கூடாதாம். என்ன அநியாயம்?” என்று ஆவேசப்பட்டாள்.

“பெரும்பாலானவர்கள் லெகிங்ஸுக்கு எதிராகத்தான் இருக்காங்க. இதில் கோயில் நிர்வாகம் சொன்னதில் என்ன ஆச்சரியம்? ” என்று கல்பனா ஆன்ட்டி சொல்லிக்கொண்டிருந்தபோது ஒரு பந்து வந்து பக்கத்தில் விழுந்தது.

கனிஷ்கா பந்தை எடுத்து வீசியபோது, அழகாகப் பிடித்தான் ஒரு சிறுவன்.

“ஆசிய கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 6-வது முறையாக சாம்பியனாகியிருக்கு இந்திய மகளிர் அணி. இதுவரை 6 முறை நடந்த ஆசிய கோப்பைப் போட்டிகளில் இந்தியாவைத் தவிர வேறு எந்த அணியுமே சாம்பியன் பட்டம் வென்றதில்லை” என்று கனிஷ்கா சொன்னவுடன், மூவரும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொண்டனர்.

“ஆனா கிரிக்கெட் ஆர்வம் இருக்கற பெண்கள் இதோ, இந்தப் பையனைப் போலத் தெருவிலோ, பார்க்கிலோ வந்து ஆடக்கூடிய சூழல் இங்கே இல்லையே...” என்ற வருத்ததையும் கனிஷ்கா பகிர்ந்துகொண்டாள்.

“செரீனா வில்லியம்ஸ் எழுதிய கடிதத்தைப் படிசீங்களா? டென்னிஸ் நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று கனவு கண்டேனே தவிர, பெண் டென்னிஸ் நட்சத்திரம் என்ற அடையாளத்துக்காகக் கனவு காணவில்லை. என்னைப் போல் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என் எதிர்காலத்தை வேறு யாரும் தீர்மானிக்க நான் அனுமதிக்கவில்லை. நானேதான் தீர்மானித்தேன். பெண் டென்னிஸ் நட்சத்திரம் என்று அடையாளப்படுத்துபவர்கள், ரோஜர் ஃபெடரரை ஆண் டென்னிஸ் நட்சத்திரம் என்று அழைக்கிறார்களா? நமது பாலினம் பற்றிப் பேசக் கூடாது. நமது சாதனைகளே பேசு பொருளாக இருக்க வேண்டும் என்று ரொம்ப அழகா எழுதியிருந்தாங்க.”

“கிரேட்! 500 ரூபாய் செலவில் இந்தியாவில் ஒரு கல்யாணம் நடந்ததுதான் கடந்த வார ஆச்சரியம். ஆந்திராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதனா சலோனிக்கும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆஷிஷ் வசிஷ்ட்டுக்கும் டிசம்பர் 2-ம் தேதி கல்யாணம். இருவரும் சார்பதிவாளர் அலுவலகத்துல மாலை மாற்றி, கையெழுத்திட்டு, திருமணம் செய்திருக்காங்க. நெருக்கமான உறவினர்கள் மட்டுமே வந்திருந்தாங்க. வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த தம்பதி, 48 மணி நேரத்துல தங்கள் பணிகளுக்குத் திரும்பிட்டாங்க. இவர்களுடையது காதல் திருமணம்” என்ற பாட்டியின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

“650 கோடி செலவுலயும் இங்கே கல்யாணம் நடக்குது. 500 ரூபாயிலும் கல்யாணம் நடக்குது. நான்கூட இப்படித்தான் எளிமையா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். கல்யாணத்துக்கு வந்து சாட்சி கையெழுத்துப் போடப் போற உங்க ரெண்டு பேருக்கும் டீ, பிஸ்கெட் வாங்கிக் கொடுத்துடறேன்” என்று சிரித்தாள் கனிஷ்கா.

“பிளாஸ்டிக் பயன்பாடு பத்தி நாம ரொம்பக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தோமே… இப்போ அதுக்கு மாற்று நம்ம நாட்டிலேயே கண்டுபிடிச்சிட்டாங்க. பார்க்கிறதுக்கு பிளாஸ்டிக் மாதிரி இருந்தாலும், நூறு சதவிகிதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு, மட்கக்கூடிய விதத்தில் பையை உருவாக்கியிருக்கார் EnviGreen நிறுவனர் அஷ்வத் ஹெட்ஜ். 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, உருளை, சோளம், தாவர எண்ணெய், வாழைப்பழம் போன்ற 12 பொருட்களைச் சேர்த்து இந்தப் பையை உருவாக்கியிருக்கார். இதில் ரசாயனம் எதுவும் கலக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க, தண்ணீரில் நனைத்து விழுங்கியும் காட்டினார். இந்தப் பை 180 நாட்களில் மட்கிவிடுமாம். இன்னும் பல பரிசோதனைகளுக்குப் பிறகு விற்பனைக்கு வரும்” என்ற கல்பனா ஆன்ட்டி மண்ணைத் தட்டிக்கொண்டே எழுந்தார்.

“பிளாஸ்டிக் அரக்கன் கிட்ட தப்பிக்க இது நல்ல முயற்சி. அடுத்த வாரம் சந்திப்போம்” என்று கமலா பாட்டி சொன்னவுடன் மூவரும் அவரவர் ஸ்கூட்டிகளில் பறந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்