என் பாதையில்: நாம் கொடுக்கும் பணம் காய்கறிக்கு அல்ல

By செய்திப்பிரிவு

ஒரு நாள் அதிகாலை. அம்மாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல் அப்பாவுடன் காய்கறி வாங்கி வர மார்க்கெட்டுக்குக் கிளம்பினேன். 70 வயதுப் பாட்டியம்மா தலைச் சுமையாகக் கொண்டுவந்த காய்க்கூடையை, “தம்பி ஒரு கை கொடுங்க” என்று அப்பாவைக் கூப்பிட்டு இறக்கச் சொன்னார். “சேசுவே இன்னைக்கு நல்ல நாளா காட்டு ராசா” எனச் சொல்லியபடியே சாக்கை விரித்துக் காய்கறிகளை அழகாக அடுக்கினார்.

மார்க்கெட்டை ஏலம் எடுத்தவர், “குத்தகைக் காசைக் கொடு கிழவி” என அதட்ட, “ஐயா மகாராசா, இப்பத்தான்யா வந்து கடை போடுறேன். கொஞ்சம் பொறுத்து வாய்யா தந்திடுறேன்” என்றார். அதைக் காதில் வாங்காமல் அவர் கத்த, “பஸ்ஸுக்குக்கூடக் காசு இல்லாம காலையில மூணு மணிக்கு எழுந்து காய் பறிச்சு நாலு கிலோ மீட்டர் நடந்தே வந்திருக்கேன்யா. காசை வச்சுக்கிட்டு சொல்லலையா. நீ என் பேரன் மாதிரி. கொஞ்சம் பொறுத்து வாய்யா” எனக் கெஞ்சினார் பாட்டி. அதற்குள் அந்தப் பாட்டியின் கண்கள் ஊற்றெடுத்து ஓடத் தொடங்கிவிட்டன. கண்களைத் துடைத்துக்கொண்டு, சிலுவையைப் பிடித்தபடி எதோ முணுமுணுத்துவிட்டுத் தராசு, படிக்கல்லை எடுத்து வைத்துக் காய்கறிகளை இரண்டு கையால் சுற்றிக் கும்பிட்டு, விரல்களை தரையில் ஊன்றி ஒரு சொடக்குப் போட்டார்.

ஒவ்வொரு வாடிக்கையாளராக வருவதும் எதையும் வாங்காமல் போவதுமாக இருந்தார்கள். சிலர் குறைசொல்லியபடியே வாங்கிச் சென்றனர். நேரம் ஆக ஆக அம்மா கத்துவார் என்பதால் பாட்டியிடமே காய்களை வாங்கினோம். வெண்டைக்காயை வாங்கும்போது அம்மாவின் அறிவுரை நினைவுக்கு வர நுனியை ஒடித்து ஒடித்து கால் கிலோ தேற்றினார் அப்பா. “ஐயா கால் கிலோ வாங்க இவ்வளவு காயை ஒடிச்சிட்டீங்களே, இனி இத யாரு வாங்குவா” என அந்தப் பாட்டி கேட்டது எங்களுக்குச் சுரீர் என்று இருந்தது. விலையே கேட்காமல் வாங்கிக்கொண்டு வெட்கத்தோடு நானும் அப்பாவும் நகர்ந்து விட்டோம் .

மற்ற காய்களை வாங்கிவிட்டுத் திரும்புகையில் அந்தப் பாட்டி, சில்லறை வாங்காமல் போய்விட்டதால் எங்களைக் கூப்பிட்டுத் தந்தார். “நான் செஞ்சது தப்புத்தாம்மா. வெண்டைக்காயை இப்படி ஒடிச்சிருக்கப்பிடாது. அதுக்கும் சேர்த்து அந்தக் காசை வச்சுக்கங்க” என்று அப்பா சொன்னார். “ஐயா, வித்த சரக்குக்கு வாங்கின காசே செரிக்க மாட்டேனுது. அதிகக் காசு எங்களுக்கு வேண்டாம்” எனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

அதன் பிறகு சொன்ன வார்த்தைகள் நெஞ்சை உலுக்கின. “விதி முடிஞ்சவனுக்கே விவசாயம்னு எழுதி இருக்கும்போல. விளைஞ்சா விலையில்லை. விலையிருந்தா விளையல. அரசம் பேரு பத்து அர்ச்சுனன் பேரு பத்துன்னு மழைக்கு சொன்ன காலம்லா போயிருச்சே. இரைப்பைதான் எப்பவும் விழிச்சு இருக்கு. கலப்பையெல்லாம் தூங்கிருச்சு. கட்டில்லே இப்பவோ அப்பவோன்னு இருக்கிற வீட்டுக்காரருக்குப் பாலு வாங்கவாவது மிஞ்சாதான்னு இந்த வியாபாரத்தைக் கட்டிப் புடிச்சிருக்கிறேன்“. மீண்டும் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் பாட்டி.

பத்து, இருபது ரூபாய் கொடுத்து வாங்கும் காய்கறிகளை ஒடித்துப் பார்த்து, பேரம் பேசி, விலையைக் குறைத்து வாங்கும் நாம், பொருளையே பார்க்காமல், ஆயிரக்கணக்கில் கொடுத்து ஆன்லைனில் தேவையில்லாதவற்றை வாங்கிக் குவித்து நுகர்வுக் கலாச்சாரத்துக்கு அடிமையாகிக் கிடக்கிறோமே, நியாயமா?

- கண்மணி பாரதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்