முகங்கள்: பின்தொடர்தலைக் கொண்டாடுகிறதா கோலிவுட்?

By என்.கெளரி

தமிழ்த் திரைப்படங்கள் பெண்களைப் பின்தொடர்வதைக் (Stalking) கொண்டாடுகின்றன என்ற குற்றச்சாட்டை சமீபத்தில் பல தரப்பினரும் முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகக் காதலை நிராகரித்ததால் கொலைசெய்யப்பட்ட இளம்பெண்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது இந்தக் குற்றச்சாட்டை சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது. பலரும் வெறுமனே விவாதித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையைச் சமூக ஊடகங்களில் ஒரு பிரச்சாரமாக அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வி. ஐஸ்வர்யா. இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில நாடகத்தில் முனைவர் பட்டப் படிப்பைப் படித்துக்கொண்டிருக்கிறார்.


ஐஸ்வர்யா

நான்கு மாதங்களுக்குமுன், ‘சேஞ்ச்’ இணையதளத்தில் ‘தமிழ்த் திரையுலகம் பின்தொடர்வதைக் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்’ என்பதை வலியுறுத்தி ஒரு ஆன்லைன் விண்ணப்பத்தைத் தொடங்கினார் இவர். இந்த விண்ணப்பத்தில் இதுவரை 2,967 பேர் கையெழுத்திட்டிருக்கின்றனர். 5000 கையெழுத்துகள் பெறப்பட்ட பிறகு, இந்த விண்ணப்பம் தமிழ்த் திரையுலகத்தினருக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கிறது.

‘காலிங்அவுட் ஸ்டாக்கிங் இன் தமிழ் சினிமா’ (Calling Out Stalking in Tamil Cinema) என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் ஒரு காணொளியை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார். இந்தக் காணொளியில், ஒரு பெண்ணைப் பின்தொடர்வதை, காதல் என்ற பெயரில் எப்படித் தமிழ்த் திரைப்படங்கள் கொண்டாடுகின்றன என்பதைப் பற்றி அவரே பேசியிருக்கிறார். ஆவணப்பட இயக்குநர் வைஷ்ணவி எடுத்திருக்கும் இந்தக் காணொளியில் சில முக்கியமான கருத்துகளை முன்வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.

“திரைப்படங்களின் தாக்கத்தால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய கட்டம் இது. ஒருதலைக் காதல், துரத்தித் துரத்தி காதல் என்று தமிழ்த் திரைப்படங்களில் பெண்களைப் பின்தொடர்வது ஏதோ ஒரு ஹீரோயிச செயல்போலச் சித்தரிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை, அவள் விருப்பத்துக்கு மாறாகப் பின்தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்துவது என்பது இந்திய தண்டனைச் சட்டம் 354D பிரிவின்படி ஒரு குற்றச்செயல்.

ஆனால், திரையுலகத்தினர் இந்தக் குற்றச்செயலைக் கதாநாயகன்களின் சாகசச் செயலாகக் காலங்காலமாகத் திரையில் சித்தரித்துவருகிறார்கள். இது ஒரு குற்றம் என்று திரையுலகத்தினர் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான முதல் முயற்சிதான் ஆன்லைன் விண்ணப்பமும் இந்தக் காணொளியும்” என்கிறார் ஐஸ்வர்யா.

ஒரு பெண் முதலில் காதலை மறுத்தாலும் திரும்ப திரும்பப் பின்தொடர்ந்து சென்றால் காதலித்துவிடுவாள் என்ற போலி பிம்பத்தைத் தமிழ்த் திரையுலகம் உருவாக்கிவைத்திருக்கிறது. திரையில் வேண்டுமானால், கதாநாயகன் கதாநாயகியைப் பின்தொடர்ந்து செல்வது ரசிக்கக்கூடிய ஒரு செயலாகப் பலருக்குத் தெரியலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் இந்தப் பின்தொடர்தல் என்பது பெண்களை உளவியல் ரீதியாகப் பாதிக்கவும், அவர்களுடைய சுதந்திரமான செயல்பாடுகளை முடக்கவும் செய்கிறது.

“இந்தக் குற்றச்செயலை வெறும் பின்தொடர்தலாக மட்டும் நினைக்க முடியாது என்பதால்தான் ‘வன்தொடர்தல்’ என்ற வார்த்தையை எங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். இதைப் பற்றிய சரியான விழிப்புணர்வு திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் இல்லை என்பதை நடிகை குஷ்பு சமீபத்தில் பின்தொடர்தலை ஆதரித்துச் சொன்ன கருத்துகளில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். அதனால், முதற்கட்டமாக, பின்தொடர்தலைக் கொண்டாடும் தமிழ்ப்படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தணிக்கை குழுவிடம் வைக்கவிருக்கிறோம்” என்கிறார் இவர்.

திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் ‘பின்தொடர்தலை’ காதல் என்று இளைஞர்கள் நம்புகிறார்கள் என்பதை உறுதிசெய்வதற்கு ஆய்வுகளின் முடிவுகளையும் தேடியிருக்கிறார் ஐஸ்வர்யா. அப்படி அவர் தேடும்போது அமெரிக்காவில் திரைப்படங்களைப் பற்றி நடந்த ஓர் ஆய்வு முடிவு அவருக்குக் கிடைத்திருக்கிறது. “எனக்குக் கிடைத்த அந்த ஆய்வு முடிவுகள் இளைஞர்கள் திரையில் பார்க்கும் காதலை உண்மை என்று நம்புகிறார்கள் என்றே தெரிவிக்கிறது.

தற்போது, சென்னையில் குற்றவியல் துறை பேராசிரியர் ஒருவர் இந்தத் தலைப்பில் தமிழ்த் திரைப்படங்களை வைத்து ஓர் ஆய்வை மேற்கொண்டுவருகிறார். இரண்டு மாதங்களில் அந்த முடிவுகள் வெளியானவுடன் இன்னும் தெளிவாக இந்தப் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று உறுதியாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா.

பின்தொடர்தல் பற்றிய விழிப்புணர்வை ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்களுக்கும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஏனென்றால், திரைப்படங்களைப் பார்க்கும் சில இளம்பெண்களும், ஓர் ஆண் தன்னைப் பின்தொடர்ந்துவந்தால் அது காதல் என்று குழப்பிக்கொள்கிறார்கள். இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கல்லூரிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்யவும் இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

“பாலிவுட்டில் ‘பிங்க்’ மாதிரியான திரைப்படங்கள் வெளிவரும் இந்த நேரத்தில் தமிழகத்தில் ‘ரெமோ’ மாதிரியான படங்களை எடுத்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயமில்லை. திரைத்துறையினர் பெண்களைச் சரியாகச் சித்தரிப்பதின் சமூகப் பொறுப்பை உணரல்வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திரையுலகம் பெண்களைத் தவறாகச் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா.

காணொளியைப் பார்க்க: >https://www.youtube.com/watch?v=BrY0jTtI3dA

மேலும் விவரங்களுக்கு: >https://www.facebook.com/CallingOutStalking/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்