கேளாய் பெண்ணே: அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

By செய்திப்பிரிவு

பொதுச் சமூகத்தின் அறிவியலுக்கு முரணான அறிவுரைகளால் ஒரு பெண் தனது உடல்நலத்தில் பல சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சிக்கல்களையெல்லாம் கடந்து உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரம் பற்றிப் பெண்கள் இன்னும் வெளிப்படையாகப் பேசாத சமூகத்தில், அதற்கான தேவையைப் பற்றிப் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். பொதுவாக உடல் ஆரோக்கியம் குறித்த கவனம் பெண்களுக்கு இருந்தாலும், பிறப்புறுப்பு சுகாதாரம் பற்றிய தவறான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் இருப்பது நல்லது.

பெண்ணின் பிறப்புறுப்பு தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் தன்மையுடையது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிறப்புறுப்பில் போதுமான அளவு நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால், அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போரிட உதவுகின்றன. இதனால், பிறப்புறுப்பை சோப்பு போட்டுச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெறும் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்தாலே போதும்.

கே. ஜனாபாய்

ஈரமான உள்ளாடகளை அணியாமல் இருப்பது, காற்றோற்றட்டம் இல்லாத இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது, மாதவிடாய் காலத்தின்போது 4 -5 மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றுவது, வாசனை மிக்க திரவியங்களைக் கொண்டு அந்தரங்கப் பகுதியைச் சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவற்றைப் பின்பற்றினால் பிறப்புறுப்பு சுகாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். பெண்களை அதிகம் பாதிக்கும் சினைப்பை, கருப்பை, கருப்பை வாய்ப் புற்றுநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து வயதுப் பெண்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியச் சுகாதார நடவடிக்கை இது. பிறப்புறுப்புப் பகுதியில் வலி இருந்தால், சந்தேகப்படும்படியான துர்நாற்றம் வீசினால், அரிப்பு ஏற்பட்டால், ரத்தக் கசிவு அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைஅணுக வேண்டும்.

- கே. ஜனாபாய், மகப்பேறு மருத்துவர், கடலூர்

உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம் பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,
சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE