கமலா கல்பனா கனிஷ்கா: சமூகத்தின் மீது சாட்டையடி

By பாரதி ஆனந்த்



“சின்னக் கண்ணன் அழைக்கிறான்” என்று சுருதி விலகாமல் பாடிக்கொண்டிருந்தார்

கமலா பாட்டி.

“ஆஹா! என்ன அருமையான பாடல்” என்றபடியே எதிரில் வந்து அமர்ந்தார்கள் கல்பனா ஆன்ட்டியும் கனிஷ்காவும்.

“எவ்ளோ பெரிய இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா! இனி அவர் பாடலை நேரில் கேட்க முடியாது” என்று வருந்தினார் கமலா பாட்டி.

“திருவிளையாடல் படத்தில் பாலையாவுக்கு பாலமுரளி கிருஷ்ணாவும் சிவனாக நடித்த சிவாஜி கணேசனுக்கு டி.எம்.செளந்தரராஜனும் போட்டி போட்டுப் பாடியிருப்பாங்க. இறுதியில் பாலமுரளி கிருஷ்ணா தோற்பதுபோல அமைக்கப்பட்டிருக்கும். இதைப் பற்றி ஒரு பேட்டியில் கேட்டபோது, “இந்தப் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலைத் தோற்கடிக்க அந்த சிவபெருமானால்தான் முடியும்”னு சொன்னாராம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“எவ்வளவு தன்னம்பிக்கையான பதில்” என்று வியந்தார் கமலா பாட்டி.

சோர்வாக இருந்த கனிஷ்காவிடம் விசாரித்த கல்பனா ஆன்ட்டி, மூன்று நாள் வலி என்று தெரிந்ததும் வெந்தயத்தையும் தண்ணீரையும் கொடுத்தார்.

“மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின் பற்றி நம் மத்தியில் நிறைய புரிதல் தேவைப்படுது. வீட்டில் இருக்கும் பழைய துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறிவருவது நல்லதுதான். ஆனால், அதற்கு மாற்றாக நாம இப்போ பயன்படுத்தற சில சானிட்டரி நாப்கின்களில் அதிக அளவில் ரசாயனப் பொருட்கள் இருக்கு. அதனால் தோல் ஒவ்வாமையில் இருந்து புற்றுநோய்வரை ஏற்பட வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. அந்த நாட்களை எப்படித்தான் சவுகரியமா, சுகாதாரமா வச்சுக்கணும்னு இன்னும் நிறைய பேருக்குத் தெரியல” என்றாள் கனிஷ்கா.

“நீ சொல்றதும் சரிதான். பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள், மக்காத குப்பையாக மாறி, சுற்றுச்சூழலையும் பாதிப்பதாகச் சில ஆய்வறிக்கைகள் வெளியாகியிருக்கு. எங்க ஏரியாவுல சூழலுக்கு உகந்த சானிட்டரி நாப்கின் பற்றி ஒரு கூட்டம் நடத்துனாங்க. உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத, துவைத்துப் பயன்படுத்தும் துணியாலான நாப்கினை அறிமுகப்படுத்தினாங்க” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“அது சரி, மீண்டும் பழைய காலத்துக்கே போகச் சொல்வீங்க போல! திருவனந்தபுரம் மாவட்டத்துல அரசு உதவி பெறும்

150 பள்ளிக்கூடங்களில் சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை நிறுவப்போராங்க. பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களை எரித்துச் சாம்பலாக்கும் இன்சினரேட்டர் இயந்திரத்தையும் வைக்கப்போறாங்களாம். இது மாதிரி பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள எரிப்பது சுற்றுச்சூழல் பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்துமே” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“நாடு முழுவதும் 11.08 லட்சம் அரசுப் பள்ளிகளில் உள்ள 13.58 கோடி மாணவர்களுக்கு, பாலின அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட கழிப்பறைகள் இருக்குன்னு நாடாளுமன்றத்துல சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறை இருக்கணும், இருபாலினத்தவர் பள்ளிகளில் தனித்தனியே கழிப்பறைகள் இருக்கணும்”

“கழிப்பறை இருந்தால் மட்டும் போதாது. அதில் தண்ணீர் இருக்கணும், அடிக்கடி சுத்தப்படுத்தணும்.”

“கக்கூஸ் என்ற ஒரு குறும்படத்தின் டிரெய்லர் பார்த்தேன். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையையும் மலக்குழிக்குள் இறந்துபோன மனிதர்களின் வாழ்க்கைரயயும் சொல்கிறது இந்தப் படம். திவ்யபாரதி என்ற இளம் பெண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். நீங்களும் பாருங்க” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“நானும் பார்த்தேன் ஆன்ட்டி. சமூகத்தின் மீது சாட்டையால் அடிச்சிருக்காங்க திவ்யபாரதி. டிசம்பரில் வெளியாகும் இந்தப் படம் நம் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கும். கக்கூஸ் என்று பெயர் வைத்ததற்கும் சமூகம் ஒதுக்கும் விஷயத்தைத் துணிச்சலாகப் படமாக்கியதற்கும் திவ்யபாரதிக்கு நம் வாழ்த்துகள்” என்று கனிஷ்கா சொன்னாள்.

“வர்த்தக ரீதியிலான வாடகைத்தாய் முறையை ஒழிக்கும் புதிய சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் ஆயிடுச்சு. குழந்தையில்லாத தம்பதியர் கடுமையான சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வாடகைத்தாய் முறை மூலம் பயன் பெறலாம். வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையின் உரிமைகளுக்கான பாதுகாப்பை வழங்கும் வகையிலும் சட்டத்தை வடிவமைச்சிருக்காங்களாம்.”

“நாடாளுமன்றத்தில் இப்போ எப்படி நிறைவேறும்? ரூபாய் நோட்டுப் பிரச்சினையால அமளிதுமளியா இருக்கு. செல்லாதுன்னு சொன்ன பிரதமர், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க மாட்டாராம். ஒரு நாளில் சரியாகும், ஒரு வாரத்தில் சரியாகும், 3 மாதங்களில் சரியாகும்னு சொல்வதைப் பார்த்தால், வருடக் கணக்காகிடும் போல” என்று அலுத்துக்கொண்டார் கமலா பாட்டி.

“பாலின வன்முறைக்கு எதிராக ஐ.நா. சபையின் பாகிஸ்தான் பிரிவு எடுத்திருக்கும் விளம்பரம் என்னை ஈர்த்தது. பாகிஸ்தானின் பிரபல பாடகியும் மாடலுமான மிஷா சபி, மலையேறும் வீராங்கனை சமினா பேக், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வாகை சூடிய நசீம் ஹமீது உள்ளிட்ட பாகிஸ்தானின் சாதனைப் பெண்கள் இந்த விளம்பரத்தில் தோன்றுகின்றனர். பாகிஸ்தான் பெண்கள் அதிக அளவில் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ‘என்னை வார்த்தைகளால் அடித்தாலும் கைகளால் அடித்தாலும் கடந்து செல்வேன். என் சாதனைகளை உங்களால் அடித்து வீழ்த்த முடியுமா?’ என்ற கேள்வியோடு முடிகிறது இந்த விளம்பரம்.”

“பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் இது பொருந்தும். ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மேரிடைம் வீரர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது, நம்ம நாட்டு மாலுமி ராதிகா மேனனுக்குக் கிடைச்சிருக்கு. 2015-ம் ஆண்டு ஒடிசாவின் கோபால்பூர் மீனவர்கள் ஏழு பேர் கடலில் தத்தளித்தனர். ராதிகாவும் அவரது குழுவினரும் சேர்ந்து, 25 அடி உயர அலைகளுக்கு நடுவில் சென்று அவங்களைக் காப்பாத்தியிருக்காங்க. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண் ராதிகா மேனனை வாழ்த்துவோம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“சரி, ஏடிஎம் போறேன். எவ்வளவு நேரம் வரிசையில் நிற்கணுமோ?” என்றபடி ஸ்கூட்டியை எடுத்தார் கமலா பாட்டி.

“தண்ணீர் கொண்டு போங்க பாட்டி. எனக்கே மயக்கம் வந்துருச்சு” என்று கையசைத்தாள் கனிஷ்கா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்