பருவத்தே பணம் செய்: தங்க நகை முதலீடு லாபமா?

By முருகேஷ் பாபு

இனிமேல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதும் பலரும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடியது நகைக் கடைகளுக்குதான். அன்று விடிய விடிய நகைக்கடைகள் திறந்திருந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

நம்மைப் பொறுத்தவரை தங்கம் பாதுகாப்பான விஷயம். செல்லாமல் போகும் பணத்தைக்கூடத் தங்கமாக மாற்றிவிட்டால், பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் இருக்கிறது. வங்கியில் பணத்தைப் போட்டால் கணக்கு சொல்ல வேண்டும். அதனால் இருக்கிற பணத்தைக் கொடுத்து, தங்கமாக வாங்கிக் குவித்துவிட்டார்கள். அந்த அளவுக்குத் தங்கம் பாதுகாப்பான முதலீடுதானா?

ஆபரணம்தான் அந்தஸ்தா?

நாம் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளைக் கவனமாகப் பாருங்கள். தங்கம் பாதுகாப்பான முதலீடுதானா? முதலீடு என்ற கோணத்தில் நாம் தங்கத்தைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால்தான் தெளிவான முடிவை எடுக்க முடியும். ஆனால், நாம் தங்கத்தை முதலீடாகப் பார்ப்பதில்லை. நம்மைப் பொறுத்தவரை அது அந்தஸ்து. என் மகளுக்கு ஐம்பது பவுன் நகை போட்டுக் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறேன் என்று சொல்வதிலோ, எங்கள் கல்யாண நாளுக்குப் பிள்ளைகள் பத்து பவுனில் இரட்டைவடச் சங்கிலி வாங்கிக் கொடுத்தார்கள் என்று சொல்வதிலோதான் நம் அந்தஸ்து இருக்கிறது.

தங்கம் என்பதே நம்மைப் பொறுத்த அளவில் ஆபரணங்கள்தான். நம் கலாச்சார அடிப்படையில் பேசும்போது, ஒரு குடும்பத்தின் மதிப்பு, குடும்பத் தலைவி அணிந்திருக்கும் நகைகளைப் பொறுத்துதான் அமையும். அதனாலேயே தங்கத்தின் மீதான ஈர்ப்பு எப்போதும் குறைவதே இல்லை.

சரி, நாம் முதலீடாக வாங்கும் தங்கம் கழுத்தில் இருந்தால் என்ன? கையில் இருந்தால் என்ன? தேவைப்படும் நேரம் விற்க முடியும் எனும்போது நல்ல முதலீடு என்றுதானே நினைக்கிறீர்கள். தங்கத்தில் மக்கள் அடித்துப் பிடித்துப் பணத்தைக் கொட்டுவதற்கு இதுவும் முக்கியமான காரணம். முதலீடாக இருந்தாலும் மற்ற முதலீடுகளைப் போல அல்லாமல் தங்கத்தை எளிதில் பணமாக்கிவிடலாம்.

ஏ.டி.எம். மையங்கள் செயல்படாத இரண்டு, மூன்று நாட்களில் வங்கி சேமிப்புகூட உடனடி பண வாய்ப்பைத் தரும் முதலீடாக இல்லை. ஆனால், அவசரத் தேவை என்று வந்தால் கழுத்தில், காதில் கிடக்கும் தங்கத்தை அடமானம் வைத்து, எளிதாகப் பணமாக்கிவிடலாம். அத்தகைய தங்கத்தை நல்ல முதலீடு இல்லை என்று ஏன் சொன்னேன்?

பழைய நகைக்கு மதிப்பு உண்டா?

நீங்கள் பத்தாயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு சங்கிலி வாங்கியிருக்கிறீர்கள். எளிதான கணக்குக்காக கிராம் இரண்டாயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் சங்கிலியின் அளவு ஐந்து கிராம். அந்தச் சங்கிலியை வாங்கும்போது நீங்கள் செய்கூலியாகவும் சேதாரமாகவும் ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக வைத்துக்கொள்வோம் (டிசைன் மிகுந்த நகையாக இருந்தால் சேதாரம் அதிகமாக இருக்கும்). இந்த ஆயிரம் ரூபாய் நகையின் மதிப்பில் இடம் பெறாது. ஆனால், நாம் கொடுத்த பணத்தின் அடிப்படையில் பார்த்தால் ஐந்து கிராம் தங்கம் வாங்க 11 ஆயிரம் ரூபாய் செலவழித்திருக்கிறோம்.

ஓராண்டு கழிந்த நிலையில் இன்று அந்த நகையை விற்க முடிவு செய்திருக்கிறீர்கள். இன்று தங்கத்தின் மதிப்பு 2200 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நம் கையில் இருக்கும் ஐந்து கிராம் நகையின் மதிப்பு 11000 ரூபாய். நாம் செய்கூலி, சேதாரத்துக்காகச் செலவழித்த தொகையோடு சேர்த்தாலும் நஷ்டமில்லை என்ற எண்ணம் நமக்கு இருக்கும்.

நாம் நகையை விற்கச் செல்லும்போது நம்மை வேறோர் இடத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கே, ‘பழைய நகைகள் மதிப்பிடும் இடம்’ என்று போர்டு இருக்கும். நகைக் கடைகளைப் பொறுத்தவரை நேற்று வாங்கிய நகைகூட இன்று பழைய தங்கம்தான். ஆக, நம் பழைய தங்கத்துக்கு அங்கே மதிப்பு போடுவார்கள். “பழைய தங்கத்தில் அழுக்கு இருக்கும். அதுக்குக் கொஞ்சம் எடை குறைப்போம்” என்பார்கள். அரை கிராம் குறைந்தால்கூட நம் மதிப்பில் குறையும்.

எடைபோட்ட பிறகு அடுத்த குண்டு காத்திருக்கும். பழைய தங்கத்தின் மதிப்பு கிராமுக்கு 2000 ரூபாய்தான் என்பார்கள். நம் நகையின் இப்போதைய எடை அழுக்கு நீங்கலாக நாலரை கிராம். கிராமுக்கு 2000 என்றால் 9000 ரூபாய் வருகிறது. செய்கூலி, சேதாரம் சேர்த்து 11000 ரூபாய்க்கு வாங்கிய நகை, ஓராண்டுக்குப் பிறகு 9000 ரூபாயாக ஆகிறது என்றால் அது லாபமா? கணக்கில் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனால், பழைய தங்கம், செய்கூலி, சேதாரம், அழுக்குக்கு எடை குறைப்பு எல்லாமே இருக்கத்தான் செய்கிறது.

அதனால்தான் சொல்கிறேன், தங்க நகை முதலீடு லாபம் தராது. ஆனால், தங்கம் நல்ல முதலீடுதான். எப்படி? அடுத்த வாரம் சொல்கிறேன்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்