இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஒடிசாவுக்கு மேலே உள்ளது சத்தீஸ்கர் மாநிலம். சத்தீஸ்கர் என்றால் உள்ளூர் மொழியில் ‘முப்பத்தியாறு கோட்டைகள்’ என்று பொருள். கோட்டைகளைக் கொண்ட ஊர் மிகவும் பாதுகாப்பானது என்று நினைத்தால் அது தவறு. இன்று நாட்டின் மிகவும் ஆபத்தான பகுதிகளாகக் கருதப்படும் பஸ்தார், தந்தேவாடா போன்ற பகுதிகள் அங்குதான் இருக்கின்றன. மக்களைப் பிளவுபடுத்தி, மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக மண்ணின் மக்கள் சண்டையிடுவதுதான் இங்கு பிரச்சினை. மாவோயிஸ்ட்கள் அடக்கப்பட வேண்டியதை காரணமாகக் கூறி அரசு இந்தச் சண்டைகளை ஆதரிக்கிறது.
செல்லத் தயங்கும் பகுதி
சாகசம் விரும்பும் பத்திரிகையாளர்களுக்குச் சத்தீஸ்கர் மாநிலம், சிறந்த களம். ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு கொலை, குண்டுவெடிப்புச் சம்பவம், மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீஸுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு, ஆதிவாசிகளை போலீஸார் கைது செய்வது, போலீஸுக்கான ‘இன்ஃபார்மர்’ என்று சொல்லி ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்டுகள் கொல்வது எனக் குற்றச் செயல்கள் அதிகம் நிறைந்திருக்கும் பகுதி இது.
அந்த மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகை யாளர்கள் பலரே இந்தப் பகுதிகளுக்குச் செல்லத் தயங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தன் பேனாவின் மூலமாக இந்த நாட்டுக்கு, இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட முடியாதா என்று ஏங்கும் தீரம்மிக்க பத்திரிகையாளர்களில் சிலர், விரும்பிக் கேட்டு வாங்கும் ‘அசைன்மென்ட்’ ஆக இருக்கிறது மாவோயிஸ்ட் பிரச்சினை.
துணிச்சலான எழுத்து
அப்படிப்பட்ட தீரம் மிக்க பத்திரிகையாளர்தான் மாலினி சுப்பிரமணியம். ‘ஸ்க்ரோல்.இன்’ எனும் இணைய இதழில், சுதந்திரப் பத்திரிகையாளராக இவர் பணியாற்றிவருகிறார். ஹைதராபாத்காரரான இவர், பணி நிமித்தமாக சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் தங்கியிருந்தார். 2015-ம் ஆண்டு முதல் தற்போதுவரை மாவோயிஸ்ட் பிரச்சினை குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார்.
அந்த எழுத்துகளுக்காக அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் வீட்டின் மீது கல்லெறியப்பட்டது; கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; அவரைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டல்கள் வந்தன. இவற்றைத் தொடர்ந்து போலீஸிடம் மாலினி புகார் அளிக்க, பாதுகாப்புக் கருதி பஸ்தாரிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
அவையெல்லாவற்றையும் தாண்டி, தற்போது ஹைதராபாத்தில் இருந்துகொண்டே துணிச்சலுடன் மாவோயிஸ்ட் பிரச்சினைகளை வெளியுலகுக்குக் கொண்டு வந்ததற்காக ‘பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கான குழு’ எனும் சர்வதேச அமைப்பு, இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பத்திரிகை சுதந்திரத்துக்கான விருதை மாலினிக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் பெண் பத்திரிகையாளர் இவர்.
பெண்களால் கிடைத்த உத்வேகம்
விருதைப் பெற்றுக்கொண்ட மேடையில் மாலினி கூறிய வார்த்தைகள் இவை: “பஸ்தார் பகுதியில் மனித உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் ஆதிவாசிகள்தான் என் பலத்துக்கான ஆதாரம். ஆம், ஆதிவாசிப் பெண்களிடமிருந்தே எனக்கான துணிச்சல் பெறுகிறேன்.
இந்த விருதை நான் பெற்றுக்கொள்ளும் இந்த நேரத்தில், பஸ்தாரில் நடக்கும் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்ததற்காகச் சிறையில் துன்பப்படும் உள்ளூர் பத்திரிகையாளர் சந்தோஷ் யாதவ், அங்குள்ள பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுவதற்கு சத்தீஸ்கர் அரசை நிர்பந்தித்துப் போராடிவரும் கமல் சுக்லா ஆகியோருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள்தான் உண்மையான நாயகர்கள்!”
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago