பருவத்தே பணம் செய்: சீட்டு லாபமா, நஷ்டமா?

By முருகேஷ் பாபு

சீட்டு நடத்தும் கம்பெனி, பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு சீட்டு நடத்துவார்கள். நம் பணத்துக்கும் முறையான பாதுகாப்பு இருக்கும். பொதுவாக நாம் சீட்டு சேருவதில் ஆர்வம் காட்டுவதற்கு அடிப்படைக் காரணம் அதில் கிடைக்கும் அபரிமிதமான லாபம்தான்.

சீட்டு என்பதன் அடிப்படையே ஒரு குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தி, அதை மொத்தமாகப் பெறுவதுதான். இதில் லாபம் என்பது எங்கே வருகிறது என்றால், நாம் செலுத்தும் தொகை கூடிக் குறைவதுதான்.

பத்து மாதச் சீட்டு. மாதம் 2,500 ரூபாய். மொத்தம் 25,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நாம் பெறும் தொகை 25,000 ரூபாய்தான். ஆனால், மாதாமாதம் 2,500 செலுத்த வேண்டியதில்லை. என்ன கழிவு போகிறதோ அதற்கு ஏற்ப நாம் செலுத்த வேண்டிய தொகையும் மாறுபடும். அது என்ன கழிவு?

சீட்டில் நான் சொல்ல மறந்த இன்னொரு விஷயம், பத்து மாதச் சீட்டு என்பது பத்துப் பேர் பங்கெடுக்கக்கூடியது. ஆக, ஒவ்வொரு மாதமும் ஆளுக்கு 2,500 ரூபாய் போட்டு அவர்களில் யாரோ ஒருவர் அந்த 25,000 ரூபாயை எடுத்துக்கொள்வார். சரி, யாருக்கு அந்தப் பணம் போகவேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது?

சீட்டுகள் பல வகை

இதில்தான் சீட்டு பலவகையாகப் பிரிக்கப்படுகிறது. அதில் அடிப்படையானவை தட்டுச் சீட்டு, ஏலச் சீட்டு. தட்டுச் சீட்டு என்றால் பத்துப் பேரின் பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி, குலுக்கிப் போடுவார்கள். அதில் ஒரு சீட்டை எடுத்து, அதில் யார் பெயர் வருகிறதோ அவருக்கு மொத்தப் பணத்தையும் கொடுத்து விடுவார்கள். அடுத்த மாதம் சீட்டு எடுத்தவர் தவிர, மற்ற ஒன்பது பேர் பெயரும் எழுதிப் போடப்படும்.

எல்லா உறுப்பினர்களும் மாதம் 2,500 ரூபாய் கொடுத்துவிட வேண்டும். இது சில்லறையாகச் சேர்த்து மொத்தமாகப் பெறும் வழி. அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் சீட்டு இது. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் முதல் மாதமே கிடைக்கும். இல்லையென்றால் பத்தாவது மாதம்வரை படுத்தியெடுக்கும்.

ஆனால், பல நேரங்களில் சீட்டு என்பதே தேவைக்குப் பணம் பெறும் வழியாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நமக்குத் தேவை இருக்கும் நேரத்தில் அதிர்ஷ்டம் கைகொடுக்காது போனால் சீட்டு சேர்வதிலேயே அர்த்தமில்லை. ஆக, நமக்குத் தேவைப்படும் நேரத்தில் பணத்தை எடுக்க முடிய வேண்டும். பணம் கொஞ்சம் முன்னே பின்னே கிடைத்தாலும் பரவாயில்லை என்ற சூழலைப் பூர்த்தி செய்வதுதான் ஏலச் சீட்டு.

ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பேருக்குச் சீட்டுப் பணம் தேவைப்படலாம். அப்போது 25,000 ரூபாய் சீட்டை, நான் மூவாயிரம் ரூபாய் குறைத்து 22,000 ரூபாய்க்கு எடுத்துக்கொள்கிறேன் என்று ஒருவர் சொல்ல, நான் 4,000 ரூபாய் குறைத்துக்கொள்கிறேன் என்று இன்னொருவர் சொல்ல, இப்படிப் போகும் சீட்டு.

ஒரு தரம் ரெண்டு தரம்

ஏலத்தில் கேட்கப்பட்டு, அந்த மாதத்துக்கான சீட்டு முடிவு செய்யப்படும். ஒருவேளை 20,000 ரூபாய் என்று முடிவு செய்யப்படுகிறது என்றால் அந்த மாதம் பத்து உறுப்பினர்களும் ஆளுக்கு 2,000 ரூபாய் செலுத்தினால் போதும். சில நிறுவனங்கள் சீட்டு எடுத்தவர்களுக்கும் அடுத்த மாதம் கழிவு கிடைக்கும் என்று அனுமதிப்பார்கள். சிலரோ சீட்டு எடுத்துவிட்டால் மாதாமாதம் முழுத் தொகையும் கட்ட வேண்டும் என்பார்கள்.

இந்தச் சீட்டின் தன்மையை வைத்துப் பார்த்தால், இதில் கிடைக்கும் லாபத்தை நாம் அளவிட முடியும். ஒரு மாதம் 2,000, இன்னொரு மாதம் 2,300, மற்றொரு மாதம் 1,900 என்று விதவிதமாகத் தொகைகளைச் செலுத்திக்கொண்டே வரும் ஒருவர், பத்து மாதங்களின் முடிவில் தன் சீட்டுத் தொகையான 25,000 ரூபாயை முழுமையாகப் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நிச்சயமாக 25,000 ரூபாய்க்கும் குறைவாகவே செலுத்தியிருப்பார். சும்மா ஒரு கணக்குக்கு 22,500 ரூபாய் செலுத்தியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் பெறும் தொகை 25,000 ரூபாயாக இருக்கும். அந்த 2,500 ரூபாய் அவருக்கான லாபம். இது மேலோட்டமான கணக்குதான். லாபம் இன்னும் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வட்டிக் கணக்கு

அப்படியானால் முதல் மாதம் 23,000 ரூபாயை ஏலத்தில் எடுப்பவருக்கு என்ன லாபம்? அவர் மீதமுள்ள மாதங்களில் 2,500 வீதம் 22,500 செலுத்துவார். முதல் மாதம் 2,300 செலுத்தியிருப்பார். மொத்தம் 24,800 ரூபாய் செலுத்துவார். அவர் சீட்டு மூலமாகப் பெற்ற பணத்தைவிட அவர் செலுத்தும் பணம் 1,800 ரூபாய் அதிகம்தான். ஆனால், அவர் அந்தப் பணத்தைப் பயன்படுத்திய செலவுக்காகச் சீட்டுக்குப் பதில் கடன் வாங்கியிருந்தால் நிச்சயமாக 1,800 ரூபாயைவிட அதிக வட்டி செலுத்த வேண்டி வந்திருக்கும். அந்த வகையில் பார்த்தால் அவருக்கும் லாபம்தான்.

அப்படியானால் சீட்டு என்பது எல்லோருக்குமே லாபம்தானா? அப்படி இல்லை. நாம் சீட்டுப் பணத்தை எப்போது எடுக்கிறோம் என்பதையும் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்து அது லாபமா, நஷ்டமா என்பது முடிவாகும். சீட்டின் முடிவில் மொத்தமாகப் பெற்றோம் என்றால் நிச்சயமாக லாபம்தான். அதேபோல நம் அத்தியாவசியமான தேவைக்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்தினோம் என்றாலும் அது லாபம்தான். ஆனால், கிடைக்கிறதே என்று சீட்டுப் பணத்தை எடுத்து வேட்டு விட்டோம் என்றால் பெரிய நஷ்டத்தில் போய் முடிந்துவிடும்.

அதனால் சீட்டு சேருங்கள். அது அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக்கூடிய சீட்டு நிறுவனமா என்று பார்த்துச் சேருங்கள். அந்த மாதிரியான நிறுவனங்களுக்குச் செல்லும்போது சீட்டுப் பணத்தைப் பெறுவதற்குப் பல சட்டதிட்டங்களை வைத்திருப்பார்கள். டாகுமெண்ட் எழுதிக் கொடுக்க வேண்டியிருக்கும். சம்பளச் சான்றிதழ் கொடுக்க வேண்டியிருக்கும். சம்பளம் வாங்கும் இருவர் ஜாமீன் போட வேண்டியிருக்கும். இந்தக் கெடுபிடிகளுக்குப் பயந்து சாதாரண இடத்தில் சீட்டுச் சேர்ந்தால், நாம் சேமிக்கும் பணம் நமக்குக் கிடைக்காமல் போகும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது.

ஏன் இப்படிப் பயம் காட்டுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? சொல்கிறேன்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்