முகங்கள்: கலையும் தியானமும் ஒன்றே!

By என்.கெளரி

‘நான் என்ன வரைகிறேன் என்பதைப் பார்க்கிறேன்’ (‘I see what I draw’) என்ற தலைப்பில் தட்சிணசித்ராவின் ‘வரிஜா கேலரி’யில் ஓவியக் காட்சி வைத்திருக்கிறார் வி. அனாமிகா. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கலைப் பாதையில் பயணித்துவருகிறார். இவரது படைப்புகளில் தனித்துவத்துமான தேடல் வெளிப்படுகிறது. இந்த ஓவியக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் படைப்புகளும் அனாமிகாவின் கலைத் தேடலைப் பறைசாற்றுகின்றன.

ஓவியக் காட்சிக்குள் நுழைந்தவுடன் ‘உடற்கூறு’ (Anatomy) வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டோமா என்ற பிரமை ஏற்படுகிறது. காரணம், பெரும்பாலான படைப்புக ள் மனித உடலைப் பிரதானமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தப் படைப்புகளின் அருகே சென்று பார்த்தால் அவை ஆழமான உணர்வு கடத்தலின் வெளிப்பாடாக இருக்கின்றன. ஒவ்வொரு படைப்புக்கும் அவர் கொடுத்திருக்கும் தலைப்புகளே போதுமானதைச் சொல்லிவிடுகின்றன.

பார்க்க மட்டுமல்ல

“ஓவியக் காட்சியைப் பார்க்க வரும் பார்வையாளர்களில் சிலர் ‘இந்த ஓவியங்களில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை, விளக்க முடியுமா?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். ஒரு கலைப் படைப்பை அப்படி விளக்குவதன் மூலம் புரியவைக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு படைப்பை எந்த வித முன்அனுமானங்களும் இல்லாமல் திறந்த மனதுடன் அணுகும் போக்கை நாம் அனைவருமே வளர்த்துக்கொள்ள வேண்டும். கலைப் படைப்புகள் புரிந்துகொள்வதற்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை. அவை உணர்ந்துகொள்வதற்காக உருவாக்கப் படுகின்றன” என்கிறார் அனாமிகா.

இந்த ஓவியக் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் படைப்புகளைத் தான் உறுதியான கருத்துகளோடு உருவாக்கவில்லை என்று சொல்லும் இவர், “இன்று சமூகத்தில் நடக்கிற பெரும்பாலான விஷயங்களைச் சரி, தவறு என்று வரையறுக்க முடியாது. அவையெல்லாமே ஏதோவொரு காரணத்துக்காக நடைபெறுகின்றன. அந்த வகையில், ஒரு படைப்பாளியாக சமூகத்தைப் பற்றிய என்னுடைய பார்வையாக இந்தப் படைப்புகளைச் சொல்லலாம். இன்றைய சூழலில் பெண்ணுடல் என்பது ஒரு நுகர்வுப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. அதைக் குத்திக்காட்டும் விதமாகத்தான் பெண்ணுடலைப் பின்னணியாக வைத்து நிறையப் படைப்புகளை உருவாக்கியிருக்கிறேன். ஆனால், இந்தப் படைப்புகளில் நான் முன்வைத்திருக்கும் அரசியல் கேள்வியை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் புரிந்துகொள்ளலாம்” என்கிறார்.

புதுப் புது விதிகள்

இந்தக் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் அனாமிகாவின் பெயரிடப்படாத ஓவியம் ஒன்று தேசிய விருதுபெற்றிருக்கிறது. அந்த ஓவியம் துப்பாக்கி, குழந்தை பொம்மை, தும்பி, ஆக்டோபஸ் ஆகியவற்றை இணைத்து வரையப்பட்டிருக்கிறது. இவர் 2010-ம் ஆண்டு, சார்லஸ் வாலஸ் விருது பெற்று லண்டனில் கனிமப்பூச்சிடல் (Enamelling) பற்றிப் படித்திருக்கிறார்.

“கலையுடன் நீண்ட நேரம் இருப்பதற்கான சாத்தியத்தை வழங்கும் படைப்புகளை உருவாக்குவது மட்டுமே என் நோக்கம். துறவிகள் எப்படி நேரங்காலமில்லாமல் தியானமும் ஜெபமும் செய்கிறார்களோ அப்படித்தான் என் கலைப்படைப்புகளை உருவாக்குகிறேன். ‘மோர் தேன் ஒன்ஸ்’ (More Than Once) என்ற தலைப்பில் நான் உருவாக்கிய இந்தப் படைப்புகளையே

இதற்கு உதாரணமாகச் சொல்லாம். ஒரு சமகால மனநிலையில் இருந்து ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டு அந்தப் படைப்புகளை உருவாக்கினேன்” என்கிறார் அனாமிகா. இந்த ‘மோர் தேன் ஒன்ஸ்’ படைப்புகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உருவாக்கப்பட்ட ‘பேப்பர் கட்’ படைப்புகளாக இருக்கின்றன.

“ஒவ்வொரு படைப்பை உருவாக்கும்போதும் ஏற்கெனவே நான் உருவாக்கி வைத்திருந்த விதிகளை உடைப்பதில் கவனம் செலுத்துவேன். குறிப்பிட்ட காலத்துக்கு வளைவுகளே இல்லாமல் நேர்க்கோடுகளில் வரைவது, குறிப்பிட்ட வண்ணங்கள், வடிவங்களைப் பயன்படுத்துவது என எனக்கான விதிகளை நானே வகுத்துக்கொள்வேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை நானே உடைக்கவும் செய்வேன்” என்று தன் கலைப் பாணியை விளக்குகிறார் அனாமிகா.

தற்போது இவர் தன்னுடைய கணவர் ஓவியர் ராமச்சந்திரனுடன் இணைந்து பத்தாயிரம் பொருட்களைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை, பல்வேறு விதமான 4,500 பொருட்களை இருவரும் சேகரித்திருக்கின்றனர்.

“என்னுடைய மனதை அமைதிப்படுத்தும் ஒரு அம்சமாகக் கலையைப் பற்றிக்கொண்டிருக்கிறேன். அதனுடன் தீவிரமாகவும், ஆழமான உணர்வுகளுடனும் பயணப்படுவதையே விரும்புகிறேன். அந்த முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் இந்த ஓவியக் காட்சி” என்று சொல்கிறார் அனாமிகா. இவரது ஓவியக் காட்சி நவம்பர் 30-ம் தேதிவரை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்