ச ஃபோ… இயேசு பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தின் லெஸ்பாஸ் தீவில் வாழ்ந்த கவிஞர். உலக வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட கவிஞர்களுள் ஒருவராக சஃபோ இருந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே அவரது கவிதைகள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. ஆனாலும் அவரைச் சுற்றி எவ்வளவு கதைகள்! அவரைப் பற்றி எவ்வளவு வரலாற்று நூல்கள்! அவரது கவிதைகளுக்குத்தான் எத்தனை மொழிபெயர்ப்புகள்! சஃபோவின் வாழ்க்கையை முழுக்க முழுக்கத் தன் கற்பனையில் புனைந்து பெண்ணிய நாவலாசிரியை எரிக்கா ஜாங் எழுதிய ‘சஃபோ’ஸ் லீப்’ என்ற நாவலும் பிரபலம்.
உண்மையில், சஃபோவைப் பற்றிக் கிடைக்கும் ஆதாரபூர்வமான வரலாற்றுத் தகவல்கள் மிக மிகக் குறைவு. கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், மேல்தட்டு வர்க்கத்தினர், வாழும் காலத்திலேயே தனது கவிதைகளுக்காக மிகவும் பிரபலமாக இருந்தவர், தனது கவிதைகளைத் தானே இசையமைத்துப் பாடியவர் போன்ற தகவல்கள்தான் அவரைப் பற்றி ஓரளவு உறுதியாகக் கூறக் கூடியவை. சஃபோவின் காலத்துக்குப் பின்பு வாழ்ந்த தத்துவ ஆசிரியர் பிளேட்டோ சஃபோவை ‘பத்தாவது தேவதை’ என்றார் (கிரேக்க மரபில் கவிதை, இசை, அறிவியல் போன்றவற்றுக்கு உந்துதல் தரக்கூடிய தேவதைகள் என்று ஒன்பது பேர் குறிப்பிடப்படுகின்றனர்).
தற்காலத்தில் சஃபோவின் பிரபலத்துக்கு அவரது கவிதைகள் மட்டுமே காரணம் அல்ல, அவர் வாழ்க்கையும்கூட. மரபு, கட்டுப்பாடுகள் போன்றவற்றுக்கு உட்படாமல் சஃபோ வாழ்ந்தார் என்று கருதப்படுகிறது. அவர் சில பெண்களைக் காதலித்ததாகவும் அவரது கவிதைகளில் சூசகம் கிடைக்கிறது. ‘பெண் தன்பாலின உறவாளர்’ என்று பொருள்படும் ‘Lesbian’ என்ற சொல் சஃபோவின் தீவான ‘Lesbos’-லிருந்துதான் உருவானது என்பதே பெண்ணிய வரலாற்றிலும் ‘தன்பாலின உறவாளர்’ மத்தியிலும் சஃபோ அடைந்திருக்கும் முக்கியத்துவத்தை நமக்குப் புலப்படுத்தும். சஃபோவின் கவிதைகள் எல்லாமே பாடலாகப் பாடுவதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டவை. அவரே ஒரு தந்திக் கருவியையும் கண்டுபிடித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
சஃபோவின் காலத்துக்குப் பிறகு அவரது கவிதைகள் ஏழு தொகுதிகளாக பாபிரஸ் சுவடிகளில் தொகுக்கப்பட்டன என்று தெரிகிறது. கிறித்தவ சமயத்தின் வரவுக்குப் பிறகு திருச்சபையின் ஒடுக்குமுறைக்கு சஃபோவின் கவிதைகள் உள்ளாயின என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு சஃபோவின் படைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கை இழந்தன. பிற கவிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் போன்றோரின் படைப்புகளில் சிறுசிறு மேற்கோள்களாக சஃபோவின் கவிதைகள் மீட்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெஹ்னெசா என்ற கிரேக்கச் சிற்றூரில் சிதிலமடைந்துகொண்டிருந்த சுவடிக் குவியலிலிருந்து மீட்கப்பட்ட சுவடிகளிலிருந்து சஃபோவின் கவிதைகள் சில மீட்டெடுக்கப்பட்டன.
சரியாகச் சொல்வதென்றால், ஒரு முழுக்கவிதையும் துண்டு துண்டான பல்வேறு வரிகளும், ஒற்றைச் சொற்களும். இந்த நிலையில் 2004-ல் மேலும் 58 கவிதைத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டு சஃபோவுடையவை என்று உறுதிப்படுத்தப்பட்டன. இந்தப் புதுக் கண்டுபிடிப்புகளையும் சேர்த்து மொத்தமாகக் கிடைக்கக்கூடிய சஃபோவின் படைப்புகள் அனைத்தையும் கிரேக்க மொழியிலிருந்து டயானே ஜே. ரேயர், ஆந்த்ரே லார்தின்வா என்ற இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்து 2014-ல் ‘Sappho: A New Translation of the Complete Works’ என்ற தலைப்பில் வெளியிட்டனர். இந்தப் புத்தகத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.
சஃபோவின் கவிதையுலகம் நமக்குத் துண்டுதுண்டாகவே கிடைத்தாலும் அவற்றில் வெளிப்படும் உயிரோட்டமும் கவித்துவமும் காதலுக்கான ஏக்கமும் இன்றும் புதிதாகவே இருக்கின்றன. முழுமையற்ற மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
உன் அருகில் அமர்ந்து, நெருக்கமாக,
நீ பேசும் இன்மொழி செவியுற்று,
கிளர்ச்சியூட்டும் உன் புன்னகையைக் காண்பவர் யாரோ
அவர் கடவுள் போலக் கொடுத்துவைத்தவர்
என்றே தோன்றுகிறது எனக்கு.
சட்டென்ற பார்வை உன் மீது நான் வீசும்போதெல்லாம் நெஞ்சுக்குள் படபடக்கிறது என்னிதயம்-
நா இழுத்துக்கொள்ள, பேச்சிழந்து போகிறேன்.
தளிர்ச்சுடர் படரும் என் தோலின் கீழ்,
கண்கள் இருள, செவிகள் இரைய,
சில்லென்று ஊற்றெடுக்கின்றன வியர்வைத் துளிகள், நடுங்குதல் ஆட்கொள்ள, புல்லினும் பசிய நிறம் கொள்கிறேன்.
மரணத் தறுவாய்போல் உணர்கிறேன்.
எனினும் தாங்கிக்கொண்டாக வேண்டும், இவை யாவையும். ஏனெனில்…
*
சுடர்விடும் கோடை
மயக்குகிறது இப்புவியைத் தன் மகுடியால்.
இலைகளின் கீழ்
சில்வண்டுகள்
குட்டிச் சிறகுகளை ஒன்றாய்த் தேய்த்து
முடிவில்லாமல் பொழியும்
கீச்சொலி கானத்தை.
*
காதல் அவயவங்களின் நெகிழ்த்துநர்,
கசப்பினிமை, தவிர்க்க முடியாதது,
படர்ந்தேறும் அந்த வஸ்து ஆட்கொண்டது
மறுபடியும் என்னை.
(கவிதைகள் ஆங்கிலம் வழியாகத் தமிழில்: ஆசை)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago