கமலா, கல்பனா, கனிஷ்கா: சிவப்பாக இருப்பதுதான் அழகா?

By பாரதி ஆனந்த்

பயத்த மாவை பாட்டிலில் நிரப்பியபடி, “இதைத்தான் சின்ன வயசுல இருந்து பயன்படுத்துறேன்” என்று சொன்னார் கமலா பாட்டி.

“ஓ! இதுதான் உங்க சிவப்பு நிறத்துக்குக் காரணமா?” என்று ஆவலுடன் கேட்டாள் கனிஷ்கா.

“இந்தப் பொடியை மருத்துவக் குணத்துக் காகத்தான் பயன்படுத்துறேன். பெண்கள் என்றால் வெள்ளைத் தோலுடன்தான் இருக்கணும் என்று நினைப்பதே மோசமான பார்வை. இந்தப் பார்வையைத்தான் விளாசியிருக்கிறார் தனிஷ்டா சாட்டர்ஜி” என்று நிறுத்தினார் கமலா பாட்டி.

“தனிஷ்டாவா, யாரது?” என்றாள் கனிஷ்கா.

“இயக்குநர் லீனா யாதவின் ‘பார்ச்ட்’ படத்தின் நாயகிகளில் ஒருவர். இவர் கலர்ஸ் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ‘ரோஸ்ட்’ (Roast) எனப்படும் ஒருவகை நகைச்சுவை அமெரிக்காவில் மிகப் பிரபலம். நட்சத்திரங்களை உட்காரவைத்து, வாய்க்கு வந்தபடி ‘வறுக்கும்’ நிகழ்ச்சி இது. அந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரிந்துகொண்டுதான் பங்கேற்றிருக்கிறார் தனிஷ்டா. ஆனால், அங்கு தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விகள் நிற பேதம் கொண்டவையாக இருந்ததால் நிகழ்ச்சியைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு, அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.

‘இந்த நிகழ்ச்சி வெறும் கேலிப் பேச்சாக இல்லை. அதையும் கடந்து நிறத்தைச் சுட்டிக்காட்டி, பெண்களைப் பலவீனப்படுத்துவதாக இருக்கிறது. கறுப்புத் தோல் கொண்ட பெண்ணுக்கு எளிதில் வேலை கிடைக்காது, திருமணம் நடக்காது, ஏன், தன்னம்பிக்கைகூட வராது. எனவே வெள்ளைத் தோலுக்கான களிம்புகளைப் பூசிக்கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்யும் நிறப் பாகுபாடு மிகுந்த சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நிற பேதம், சாதி பேதத்தின் கிளையாக இருக்கிறது. கறுப்புத் தோல் தாழ்ந்த சாதிக்கும் வெள்ளைத் தோல் உயர் சாதிக்கும் இங்கே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நிற பேதம் ஒரு அடக்குமுறையாகவே வேரூன்றியிருக்கும் இந்தச் சமூகத்தில் இத்தகைய கேள்விகளை, கேலிகளை அனுமதிக்க முடியாது. உங்களது கேலிப் பேச்சே சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பெண்ணின் நிறம் பற்றிய முன்முடிவின் வெளிப்பாடுதான்’ என்று சாத்திவிட்டார் தனிஷ்டா!”

“சபாஷ் தனிஷ்டா! இப்படி எல்லோரும் பேச ஆரம்பித்தால்தான் மாற்றம் உருவாகும்” என்றாள் கனிஷ்கா.

“அதேபோலதான் பேஸ்புக்கில் மும்பை காமத்திபுராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகிறேன் என்பதை விளக்கும் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். ‘அழகு ஏன் நிறம் சார்ந்ததாகப் பார்க்கப்படுகிறது? என் வசிப்பிடத்தை வைத்து என்னை ஏன் நிர்ணயிக்கிறீர்கள்? ஒரு மனுஷியை ஏன் அப்படியே ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகம் தயங்குகிறது? நான் காமத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதியில்தான் வளர்ந்தேன். அங்கே நான் வன்புணர்வு செய்யப்படவில்லை. ஆனால், இந்தச் சமூகம் நிற பேதம், இன பேதத்தால் என்னை வன்கொடுமை செய்வது ஏன்?’ என்று கேட்டிருக்கிறார்” என்றார் கல்பனா.

“இருவரும் ஒரே கருத்தைத் தான் சொல்றாங்க ஆன்ட்டி. பெண் மிகச்சாதாரணமாக அடக்குமுறைக்கு ஆளாகிறாள். அதுவும் தலித் பெண் என்றால் இரட்டை அடக்குமுறையாகிவிடுகிறது. குஜராத்தில் இறந்துபோன மாட்டின் சடலத்தை அப்புறப்படுத்த மறுத்த தலித் கர்ப்பிணிப் பெண் தாக்கப்பட்ட சம்பவம் கொடுமையானது” என்றாள் கனிஷ்கா.

“ஆபரேஷன் ரோமியோ பத்தி கேள்விப்பட்டீங்களா? ஈவ் டீசிங் செய்யும் பேர்வழிகளுக்கு எதிராகவே டெல்லி குர்கான் போலீஸார் ‘ஆபரேஷன் ரோமியோ’வை அமல்படுத்தியிருக்கிறார்கள். நகரில் ஈவ் டீசிங் புகார்கள் அதிகரிக்கவே, இந்தக் கண்காணிப்பு உத்தியைக் காவல் துறை கையாள்கிறது” என்றாள் கனிஷ்கா.

“நல்ல விஷயம்தான். ஆனால், கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க வந்தவர்களைக்கூட காவலர்கள் பிடித்துச் சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள். தீர விசாரித்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார் கமலா பாட்டி.

“பாட்டி நானும் என் தோழிகளும் அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் ஒரு நடைப்பயணத்தில் பங்கேற்கிறோம். ‘பெண்களைப் பாதுகாப்போம், பெண் உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற கோரிக்கையை முன்வைக்கும் விழிப்புணர்வு நடைபயணம் அது. மாலை நான்கு மணிக்கு மெரினாவில் உழைப்பாளர் சிலையிலிருந்து காந்தி சிலைவரை நடைபெறுகிறது. நீங்க ரெண்டு பேரும் வாங்களேன். பெண்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் இந்த நடைப்பயணத்தில் ஆண்களும் பங்கேற்பதுதான் இதன் சிறப்பே” என்றாள் கனிஷ்கா.

கமலா பாட்டியும் கல்பனா ஆன்ட்டியும் சம்மதம் தெரிவிக்க, மகிழ்ச்சியோடு கிளம்பினாள் கனிஷ்கா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்