மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கைக்கு அர்த்தம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 500 நாய்களுக்குத் தாயாக இருப்பதே தன் வாழ்க்கையின் மிக முக்கியமான லட்சியமாகக் கருதுகிறார் சுலஷ்மி தாஸ்குப்தா. தினமும் புதுடெல்லி வீதிகளில் நாய்களுக்கு உணவளிப்பதும் தடுப்பூசி போடுவதுமாகப் பரபரப்பாக இயங்கிவருகிறார்.
அதிகாலை எழுந்து, 250 கிலோ அரிசியுடன் காய்கறிகளும் இறைச்சியும் சேர்த்து சமைக்க ஆரம்பிக்கிறார். நான்கு மணி நேரத்தில் உணவு தயாரானதும், பெரிய டப்பாக்களில் அடைத்துக்கொண்டு, கிளம்பிவிடுகிறார். ஒவ்வொரு பகுதியிலும் நாய்கள், சுலஷ்மியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. காரைக் கண்டதும் ஓடிவந்து, சுலஷ்மியை அன்பால் சூழ்ந்துகொள்கின்றன. ஒவ்வொரு நாயையும் பெயர் சொல்லி அழைத்து, ஆறுதலாகத் தடவிக் கொடுத்து, உணவுகளை வைக்கிறார். நாய்கள் சாப்பிட்டு முடித்தவுடன், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு இழைக்காத தட்டுகளையும் கோப்பைகளையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அடுத்த இடத்துக்குச் செல்கிறார். மதியம் 1.30 வரை நாய்களுக்கு உணவு கொடுத்துவிட்டு, வீடு திரும்புகிறார்.
ஆர்வம் வந்த தருணம்
சின்ன வயதிலிருந்தே பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டவரா, என்றால் இல்லை என்கிறார் சுலஷ்மி. 15 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய கணவர் மூன்று நாய்களை வீட்டுக்குக் கொண்டுவந்தார். அப்படித்தான் நாய்கள் மீது ஆர்வம் வந்தது. அந்த நாய்களுக்குச் சாப்பாடு கொடுக்கும்போது, பசியுடன் அலைந்த தெரு நாய்கள் கவனத்துக்கு வந்தன. அன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாகச் சமைப்பதை அதிகமாக்கிக்கொண்டார். இன்று 500 நாய்களுக்குத் தினமும் உணவு வழங்கிவருகிறார்! நாய்களுக்கான மருத்துவ உதவி மையத்தையும் அமைத்து, தினமும் 20 நாய்களுக்குத் தடுப்பூசிகளைப் போட்டுவருகிறார். காயப்பட்ட நாய்களுக்குச் சிகிச்சை அளிக்கிறார். புதிதாகப் பிறக்கும் நாய்க்குட்டிகளைத் தத்து கொடுக்கிறார். கிட்டத்தட்ட ஒருநாளின் பெரும் பகுதியை நாய்களுக்காகவே செலவிடுகிறார். பெரும்பாலான வேலைகளை இவர் ஒருவரே கவனித்துக்கொள்கிறார். வேலைக்கு வருபவர்கள் விடுமுறை எடுத்தால், நாய்கள் பசியுடன் திண்டாடும் என்பதாலும் சம்பளம் அதிகம் கொடுக்க இயலாது என்பதாலும் இவரே செய்துவிடுகிறார். ஒருசில தன்னார்வலர்கள் அவ்வப்போது உதவி செய்கிறார்கள்.
தனி நபராக 500 நாய்களைப் பராமரிப்பது அதிகச் செலவு பிடிக்கும் விஷயம். 80 சதவீத சொத்துகளையும் பாரம்பரிய நகைகளையும் இழந்திருக்கிறார் சுலஷ்மி.
அங்கீகாரம்?
தன்னலம் கருதாமல் உழைப்பையும் பொருளையும் கொடுத்து, நாய்களைக் காப்பாற்றிவரும் சுலஷ்மியை எல்லோரும் கொண்டாடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு. தெரு நாய்கள் கடிக்கின்றன, ரேபிஸ் நோய் பரவும் போன்ற காரணங்களால் சுலஷ்மி செய்யும் சேவை மீது, மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இவரது கணவர் தவிர, மகன், உற்றார், உறவினர்கள் அனைவரும் சுலஷ்மியை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.
“நான் மிகவும் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து, போராட்டக்காரியாகவே வளர்ந்தேன். எனக்குச் சரி என்று பட்டதை மட்டுமே இன்றுவரை செய்துவருகிறேன். 20 வயதில் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்து, பினகி தாஸ்குப்தாவைத் திருமணம் செய்துகொண்டேன். நான் நானாக வாழ்வதற்கு அத்தனை சுதந்திரமும் என் வீட்டில் கிடைப்பதற்குக் காரணம் தாஸ்குப்தாதான். எங்கள் மகன் புரிந்துகொள்ளாமல் சென்றபோது கூட, அவர் என்னை மாற்றிக்கொள்ளச் சொல்லவில்லை. அதனால்தான் என்னால் உறுதியுடன் இயங்க முடிகிறது. எல்லா மனிதர்களையும் ஒன்றாகவே பார்க்கிறேன். யாரையும் என்னால் எந்தக் காரணம் கொண்டும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆரம்பத்தில் சேரிகளுக்குச் சென்று, எளிமையான மனிதர்களுக்கு உதவிவந்தேன். அதற்குப் பிறகு நாய்களுக்காகச் செய்துவருகிறேன். வீட்டு நாய், தெரு நாய் என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. அத்தனை நாய்களையும் என் குழந்தைகளாகவே கருதுகிறேன். தற்போது நிதி நிலைமையைச் சமாளிக்க முடியாததால், நன்கொடைகளைப் பெற ஆரம்பித்திருக்கிறேன். என்னால் எங்கும் செல்ல முடியாது. ஓய்வெடுக்க முடியாது. ஒரே மாதிரியான வாழ்க்கைதான். ஆனாலும் இது எனக்குப் பிடித்திருக்கிறது” என்கிறார் சுலஷ்மி.
அம்மாவுடன் முரண்பட்டுச் சென்ற மகன் விக்ரம் தாஸ்குப்தா, சமீபத்தில் திரும்பியிருக்கிறார். சுலஷ்மியை வைத்து ‘டாக்மா’ என்ற பெயரில் ஓர் ஆவணப் படம் எடுத்திருக்கிறார். இந்தி, வங்காளம், ஆங்கில மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டிருக்கிறது. “ஓர் இயக்குனராக என் அம்மாவின் பங்களிப்பை உலகத்துக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். ஒரு மகனாக அம்மாவைப் புரிந்துகொள்ளவும் விரும்பினேன். அதற்காகவே இந்த ஆவணப் படம்” என்கிறார் விக்ரம் தாஸ்குப்தா.
மகனைப் போலவே மற்றவர்களும் சுலஷ்மியைப் புரிந்துகொள்ளும் காலம் வரும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago