பருவத்தே பணம் செய்: ஸ்கூல் ஃபீஸ் கட்ட திண்டாட்டமா?

By சி.முருகேஷ்பாபு

உண்டியல் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும், நம்பிக்கையை உண்டாக்கும் என்பதெல்லாம் சரிதான். ஆனால், சும்மா சேமித்து வைக்கும் காசு செல்லரித்துப்போன ஓடு மாதிரிதான்.

உண்டியலில் உங்கள் குழந்தை எந்த நாணயத்தைப் போடுகிறதோ, அது அப்படியே உண்டியலில் இருக்கும். மதிப்பைச் சொல்லவில்லை. அந்தப் பணமே அப்படியே இருக்கும். ஆனால், பணத்தின் நோக்கம் அப்படி அடைந்து கிடப்பதில்லை. பெருகுவதுதான் பணம் கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம்.

அதைச் செயல்படுத்த வாய்ப்பில்லாத காரணத்தால்தான் உண்டியலில் காசு போடுவது ஒரு காலகட்டத்துக்குப் பிறகு நல்ல பழக்கம் இல்லை என்கிறேன்.

உண்டியலின் அடுத்த கட்டம்

உண்டியல் தாண்டிச் சேமிப்பு வளர வேண்டும். அதிக அளவில் இல்லையென்றாலும் நம் சேமிப்பு சிறிதளவாவது வளர வேண்டும். அதற்கான வாய்ப்பு பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுமா என்ற கேள்விக்கு விடைதான் சஞ்சயிகா. படிக்கும் குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமான முறையில் உருவாக்கப்பட்ட சேமிப்பு வாய்ப்பாக சஞ்சயிகா இருக்கிறது. செப்டம்பர் 15, சஞ்சயிகா தினம் கொண்டாடப்பட்டது. அந்த அளவுக்குக் குழந்தைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, மத்திய அரசின் சிறுசேமிப்புக்கான இயக்குநரகம் இந்த தினத்தைக் கொண்டாடுகிறது.

பள்ளிக்கு அருகில் உள்ள வங்கியிலோ, தபால் அலுவலகத்திலோ குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி, கிடைக்கும் சிறு தொகையைப் போட்டுவைக்கும் திட்டத்தையே சஞ்சயிகா என்கிறார்கள். பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு செயல்படும் திட்டம் இது. பள்ளி முதல்வர், பிள்ளைகள் பெயரில் கூட்டாக இயங்கும் கணக்கு. மாணவர்களாக இருக்கும் வரையில் இந்த கணக்கைத் தொடரலாம்.

உண்டியலின் அடுத்த கட்டம் இது. என் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கு இருக்கிறது என்பது பிள்ளைக்கு நிச்சயமாகப் பெருமிதம் தரும் விஷயம். அதோடு வங்கி நடவடிக்கைகள், தபால் நிலையத்தின் செயல்பாடுகளைப் பற்றிப் பிள்ளைகள் அறிந்துகொள்ளவும் தொடர்ந்து சேமிப்பில் ஈடுபடவும் இந்த சஞ்சயிகா பெரும் உதவியாக இருக்கும். இது பிள்ளைகளே தங்களுக்காகச் சேமித்துக்கொள்ளும் முறை.

திட்டமிடுவது அவசியம்

பிள்ளைகளுக்காகப் பெரியவர்கள் சேமிக்க வேண்டிய வழிமுறைகளை அடுத்து பார்க்கலாம். என் நண்பர் கொஞ்சம் செலவாளி. அவருடைய இரண்டு பிள்ளைகளின் படிப்புக்கான ஆண்டுக் கட்டணம் சுமார் ஒரு லட்சம் ரூபாய். அவர் எவ்வளவு சுதாரிப்பாக இருக்க வேண்டும்? ஆனால், நண்பரோ மார்ச் மாதத்தில் கட்டணத்துக்கான தொகையைப் பள்ளி நிர்வாகம் கேட்கும்போதுதான் விழிப்பார். புலம்பித் தீர்ப்பார்.

அவருக்கு இரண்டு ஆலோசனைகள் சொன்னேன். முதல் ஆலோசனை, பிள்ளைகளைக் குறைவான கட்டணம் வசூலிக்கும் பள்ளியிலோ அல்லது அரசுப் பள்ளியிலோ சேர்க்கலாமே என்பதுதான். அது குடும்பத்தின் மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்; சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார். இன்றைக்குப் பெற்றோராக இருக்கும் பலரின் நிலை இதுதான். வைர அட்டிகை, பட்டுச் சேலை, பைக் வாங்குவது போல பிள்ளைகள் படிக்கும் பள்ளியும் மரியாதை சம்பந்தப்பட்ட விஷயமாகிவிட்டது. தாங்கள் பட்டினி கிடந்தாலும் பள்ளி விஷயத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை.

அதனால், நண்பருக்கு இரண்டாவது ஆலோசனையைச் சொன்னேன். குழந்தைகளின் கல்விக் கட்டணம் சுமாராக ஒரு லட்ச ரூபாய். அவரால் கட்டணம் செலுத்த வேண்டிய மார்ச் மாதத்தில் ஐம்பதாயிரம் ரூபாயைச் சுலபமாகத் திரட்டிவிட முடியும். மீதமுள்ள ஐம்பதாயிரம்தான் அவருக்குப் பிரச்சினையாக இருக்கும். அதற்குதான் அவருக்கு ரெகரிங் டெபாசிட் என்ற ஆலோசனையைக் கொடுத்தேன்.

மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிக்கும் திட்டம்தான் ரெகரிங் டெபாசிட் (தொடர் வைப்பு நிதி). சாதாரண சேமிப்புத் திட்டம் மாதிரிதான் இதுவும். ஒவ்வொரு மாதமும் நாம் தேர்ந்தெடுத்திருக்கும் தேதியில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வர வேண்டும். ரெகரிங் டெபாசிட் என்பது குறைந்தபட்சம் ஆறுமாதம் முதல் பத்து வருடம் வரைகூடக் கால அவகாசம் கொண்டதாக இருக்கும். நம் வசதிக்கு ஏற்றபடி கால அளவை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

பிள்ளைகளின் படிப்பு போன்ற செலவுகளுக்குச் சிறுகச் சிறுக சேமிக்க மிகச் சிறப்பான வழியாக ரெகரிங் டெபாசிட்டைச் சொல்லலாம். இதுபோன்ற சேமிப்பு முறையில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், இதில் பெரிய ரிட்டர்னை எதிர்பார்க்க முடியாது என்பதுதான்.

இந்தச் சேமிப்பு, உண்டியலைப் போல ஒரேயடியாக லாபம் தராமல் போகாது. ஆனால், மிகப் பெரிய லாபம் தரும் அளவுக்கும் போகாது. முதலுக்கே பங்கம் வராமல் போட்ட பணம், தேவைப்படும் நேரத்தில் திரும்பக் கிடைக்கும். அதுதானே முக்கியம். இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இந்தச் சேமிப்பில் கிடைக்கிற வட்டி லாபம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே போனால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

நாம் சேமிக்கிற பணத்துக்கு எதற்காக வரி செலுத்த வேண்டும்? யோசித்துக்கொண்டே இருங்கள். விடை கண்டுபிடித்துவிடலாம்!

(தொடர்ந்து சேமிக்கலாம்)

கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர், தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்