திருமண உறவில் வயது, படிப்பு தொடங்கி அனைத்திலும் ஆணின் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் எதிர்பார்ப்பது குறித்து ஜூலை 3 அன்று வெளியான ‘பெண் இன்று’ வில் எழுதியிருந்தோம். எதனால் இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டது, இதை மீறுவதால் என்ன நேரும் என்று கேட்டிருந்தோம். ஆணைவிடப் பெண் பெரிய வளாக இருந்தால் எதுவும் ஆகிவிடாது என்றுதான் பலரும் எழுதியிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:
ஒரு வருடத்துக்கு முன்பு என் உறவுக்காரப் பெண்ணுக்குத் திருமணப் பொருத்தம் பார்க்கப்பட்டது. அப்போது எழுந்த சில கசப்பான அனுபவங்கள் இந்தச் சமூகத்தின் மனநிலைக்குச் சான்று. பெண் தனக்கு நிகராகப் படித்திருந்தாலும் தன்னைவிடக் குறை வாகத்தான் சம்பாதிக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லப்பட்டது. அதிகமாகச் சம்பாதிக்கும் பெண், தன் கணவனை எதிர்த்துப் பேசுவாள் என்கிற பொதுப்புத்தியின் வெளிப்பாடுதான் இது. மற்ற பொருத்தங்களை விடப் புரிதலும், விட்டுக்கொடுத்தலும், ஆணும் பெண்ணும் சமம் என்கிற மனப்பான்மையும் வளர வேண்டும்.
- அ. பரணிப்பிரியா, கோவை.
ஆண்கள் மாறுவதற்குத் தயாராக இருந்தாலும் பெண்கள் மாற மறுக்கிறார்கள். எல்லா விதத்திலும் ஆண்களைவிடத் தாழ்வாக இருந்தால்தான் ஜோடிப் பொருத்தம் சரி என்று பலர் நம்புகிறார்கள். பெண்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைவாக இருப்ப தால் அவர்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்துவது பெரிய சவாலாகவே உள்ளது.
- அ. மங்கையர்க்கரசி.
இந்தச் சமூகம் பெண்களுக்குச் செய்திருக்கும் பல அநீதிகளில் ஜோடிப் பொருத்தம் என்பதும் ஒன்று. கணவனுக்கு மனைவி அனைத்து விதத்திலும் அடங்கித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பெண்களின் உரிமைகளை அடகுவைத்துத் திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இல்லறம் என்கிற வாழ்க்கைச் சக்கரத்தில் இரண்டு சக்கரமும் ஒன்றுதான்.
- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
இந்த உலகம் ஆணாதிக்கம் நிறைந்த ஆண்களாலும், அதே சிந்தனையை மூளைக்குள் புகுத்திக்கொண்ட பெண்களாலும் நிரம்பியிருக்கிறது. கல்வியறிவால் பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். எதையும் ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து, கேள்விகள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆண் வீட்டைப் பார்த்துக்கொண்டு சமைப்பதாலும் பெண்ணுக்கு ஆணைவிட வயது அதிகமாக இருப்பதாலும் எதுவும் நிலைகுலைந்துவிடாது.
- தேஜஸ், காளப்பட்டி, கோவை.
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தம் என்பது மனத்தளவில் இருக்க வேண்டும் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாமல் ஆண்டாண்டுக் காலமாகக் கண்மூடித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழைய மூட எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, வாழ்க்கையின் யாதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு ஆக்க வழியில் செல்ல அனைவருக்கும் ஊக்கமளிப்போம்.
- மணிமேகலை, ஓசூர்.
திருமணம் முடிக்கும்போது நான் பத்தாம் வகுப்பு இடைநிறுத்தம். என் மனைவி இளங்கலை பட்டப் படிப்பு. திருமண அழைப்பிதழில் என் மனைவியின் பெயருக்குப் பின்னால் டிகிரியை அச்சிட மறுத்துப் பெரியவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண்ணுக்கு மட்டும் அந்தஸ்து கொடுத்தால் மாப்பிள்ளையின் மதிப்பு குறைந்துவிடுமாம். இதில் எனக்குத் துளியளவும் உடன்பாடு இல்லாததால், மனைவியின் படிப்பைப் போட்டுத் தனியே அழைப்பிதழ் அச்சிட்டுக் கொடுத்தேன். திருமணத்துக்குப் பிறகு என் மனைவி அவருக்கு ஈடாக என்னையும் படிக்க வைத்தாரே தவிர, எங்களுக்குள் எந்தவொரு ஏற்றத் தாழ்வும் இருந்ததில்லை. திருமணம் என்பது இரு மனம் சார்ந்தது. இதில் பொருத்தம் என்கிற பேரில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பின் மண வாழ்வில் காதல் எப்படி நிலைக்கும்?
- ச.அரசமதி, தேனி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago