எங்க ஊரு வாசம்: போயிட்டு வாரோம் சீயான்!

By பாரததேவி

கோயிலுக்குப் போகும்போது பெண்கள் நெற்றி நடுவே இட்டுக்கொள்வார்கள். வெற்றிலையும் பாக்கும் புகையிலையும் ஒரு மடி நிறைந்து அதுவே ஒரு சிறு சுமையாக இருக்கும். காட்டுப் பாதை வழியாகவே போவதால் வெற்றிலை வாங்கும் வாய்ப்பு எப்படி வாய்க்கிறதோ? வீட்டிலிருந்தே கொண்டுபோய்விட்டால் கவலையில்லை. இப்படி கோயில், குளம் என்று வெளியேறினால் வெத்தலை மடிப்பில் சுண்ணாம்பு இருக்காது. பொடி டப்பிகளோடு சுண்ணாம்பும் ஒரு டப்பியாக மடிச்சுருளில் பதுங்கியிருக்கும்.

இப்படிக் கோயில்களுக்குப் போகிறவர்களுக்கு வயிறு குளிர குடிக்க ஏதாவது கொடுத்தால் கோயிலுக்குப் போகாமலேயே நமக்கும் அந்தப் புண்ணியம் வந்து சேரும் என்ற நம்பிக்கை அந்தக் கால மனிதர்களுக்கு உண்டு.

மோரும் கருப்பட்டியும்

அதனால் ஒவ்வொருவரும் வெண்கலச் செம்பில் வெண்ணெய் எடுக்காத மோரை இட்டு, மத்தால் லேசாகச் சிலுப்பிக் கொடுப்பார்கள். கருப்பட்டியும் புளியும் இட்டுக் கரைத்த பானகம், சுக்கோடு தட்டிப் போட்ட மிளகு, கொத்தமல்லி, கருப்பட்டி போட்ட காப்பி இப்படி எல்லாவற்றையும் கொண்டுவந்து ஆளாளுக்குக் கொடுப்பார்கள். கோயிலுக்குப் போகிறவர்கள் எதையும் மறுக்கக் கூடாது. வாங்கி வாங்கி வயிறு முட்டக் குடிப்பார்கள்.

பிறகு ஊரோடு சேர்ந்து மாரியம்மன் கோயிலுக்குப் போய் கும்பிட்டு, பெரியவர்களின் காலில் விழுந்து அவர்கள் கையால் நெற்றியில் மஞ்சக்காப்பு வாங்கிக்கொள்ள வேண்டும். ‘தூர தேசத்துக்கு’ப் போகிறவர்கள் அல்லவா? போகிற வழியில் எந்த இடைஞ்சலும் வராமல் இருக்க வேண்டுமே! பிறகு மாரியம்மனுக்கு ஒரு ‘வெடலை’ போட்டுவிட்டு ஊர் எல்லைக்கு வருவார்கள்.

போயிட்டு வாரோம் சீயான் (தாத்தா), எம்மி (பாட்டி), சின்னய்யா, அயித்த, அம்மான் என்று எல்லோரிடமும் விடைபெறும்போது வயதானவர்கள், ‘என்னாத்தா நல்லா போயிட்டு வாங்க. உங்களை அட்டம் சுழியாது, உங்கள் மேனியில அசக் காத்து வீசாது (எந்த இடைஞ்சலும் இருக்காது). நம்ம ஊரு அம்மன் துணையிருப்பா’ என்று சொல்வார்கள். பிறகு எல்லோரும் கிழக்கு முகம் பார்த்துத் திரும்பி நிற்க, அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைப்பார்கள். அப்போது எல்லோருடைய விழிகளும் கலங்கி, கண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும்.

கோயிலுக்குப் போகிறவர்கள் நல்லபடியாக எந்த ஆபத்தும் இல்லாமல் வீடு வந்து சேர வேண்டுமே என்று நெஞ்சின் நடுவில் சிறு பயமும் பதற்றமும் மையம் கொண்டிருக்க, ஒரு வழியாக அவர்களை ஊர் எல்லைவரை வந்து வழியனுப்பிவைப்பார்கள்.

ஊரெல்லாம் சொந்தம்

இப்படி கோயிலுக்குப் போகிற யாருக்கும் வீட்டுக் கவலை என்பது இருக்கவே இருக்காது. எல்லோரும் உறவினர்களாக, சொந்த பந்தங்களாக இருப்பதால் யாரும் யார் வீட்டிலும் சாப்பிடலாம். எவருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. பெரியவர்கள்கூடத் தங்கள் வீட்டுப் பானைகளில் கருப்பத்துக் கஞ்சி (தீய்ந்து போனது) இருந்தால் ‘பாழா போறது பசு வவுத்துல’ என்று அதைக் கொண்டுவந்து இவர்களின் கழனிப் பானையில் போட்டுவிட்டு, ‘தாயி ஒரு போனி கஞ்சி கரைச்சி ஊத்து, குடிச்சிட்டுப் போறேன்’ என்பார்கள்.

வீட்டுக்காரர்களும், ‘அதுக்கென்னத்தா மூணு படி சோளம் இடிச்சி காய்ச்சி வச்சிருக்கேன். இப்பவும் குடி, மதியானத்துக்கும் கொண்டு போ’ என்று கரைத்து, சொம்பு நிறைய ஊத்திக் கொடுப்பார்கள். அபூர்வமாக வெஞ்சனம் கிடைத்தாலும் கிடைக்கும். இல்லாவிட்டால் உப்பு சேர்த்த பச்சை மிளகாயும், உரித்த வெங்காயமும்தான் வெஞ்சனம். எல்லோரும் சொந்தமும் பந்தமுமாக இருப்பதால் யாராவது ஒருவர், இருவர் கோயிலுக்குப் போகிறவர்களின் ஆடு, மாடுகளைப் பார்த்துக்கொள்வார்கள்.

அதனால் கோயிலுக்குப் போகிறவர்கள் நிம்மதியாகப் புறப்பட, மூணாம் சாமத்துக் கோழி அப்போதுதான் சிறகுகளை அடித்துக்கொண்டு கூவும். உடனே பெரியவர்கள், ‘கோழி கூவிருச்சி. நல்ல சமனம்!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

இதற்குள் கோயிலுக்குப் போகிறவர்கள் காட்டுப்பாதைக்கு வந்துவிடுவார்கள். அவர்களின் காலடியில் பௌர்ணமியை ஒட்டி நிலா பால் குடத்தைச் சாய்த்ததுபோல வெளிச்சத்தைக் கொடுக்கும். இளங்காற்று சிலுசிலுத்து இவர்களைத் தழுவிக்கொள்ளும். வழிகளில் மரங்களிலிருந்து உதிர்ந்த பூக்களின் மணமும் இவர்களின் பேச்சுச் சத்தத்தால் உறக்கம் கலந்து கீச்சிடும் பறவைகளின் சத்தமும் இவர்களின் நடையை வேகப்படுத்தும்.

அந்த நேரத்துக்கே விவசாயிகள் கமலையைக் கட்டியிறைக்க, சலசலவென்று வாய்க்காலில் நீர் ஓடும் சத்தமும், ஆட்டுக்கிடைகளில் இடமாற்றம் செய்யும் ஆடுகளின் சத்தமும் இவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க, தங்கமணி இப்படிச் சொல்வாள்.

“எண்ணே, இந்நேரத்துக்கு ஒரு பாட்டு படிச்சா என்னமாத்தேன் இருக்கும்? யாராவது ஒரு பாட்டு படிங்க”.

உடன் வரும் முத்தையா, “ஆத்தாடி, உன் அம்மானும் அயித்தையும் கொடுத்த மோருலயும் பானக்காரத்திலயும் வயிறு பொம்மிக் கிடக்கு. என்னால பாட முடியாது” என்று சொல்வான்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்