எங்க ஊரு வாசம்: ஒரு ஆளுக்கு அரைப்படி சோறு!

By பாரததேவி

மாட்டுப் பொங்கலன்று இரவில் நடக்கும் மாறுவேடப் போட்டியின்போது காளிக்கு ஆண் வேடம் போட்டு, தலையில் தலைப்பாகையோடு சீனி வீட்டுக்குப் போனார்கள் மாயாவும் சோதியும். போய் எய்யா, எய்யா என்று இவர்கள் கூப்பிட, அவர் மாட்டுக் கொட்டத்தினுளிருந்து வெளியே வருவார். அப்போதெல்லாம் மின் விளக்குகள் கிடையாது. புழுதி பறக்கும் நீண்ட தெருவில் சிறிது தூரத்துக்குத் தூண் கற்கள் நடப்பட்டிருக்கும். அந்தத் தூண் கல்லின் உச்சியில் சிறு கண்ணாடி கொண்ட விளக்கு மாட்டப்பட்டிருக்கும். பொழுதுகளின் கருக்கல் கூடிய நேரத்தில் டவுனிலிருந்து ஒருவன் வருவான். இரண்டு தெருவில்தான் இந்த விளக்குகள் இருந்தன. இந்த விளக்குகளை அவன் பொருத்திவிட்டுப் போவான். பின்பு காலையில் வந்து அமத்திவிட்டுப் போவான். ஒவ்வொரு நாளைக்கு அதுவும் நிலாக்காலங்களில் வரவே மாட்டான். இந்த விளக்குகளின் வெளிச்சம் அந்தத் தூண் கல்லைச் சுற்றித்தான் தெரியும். மற்றபடி எங்கும் இருட்டுதான் பூத்துக் கிடக்கும் தெருக்களில்!

வீடுகளில் சீமைத் தண்ணி (மண்ணெண்ணெய்) கூடு என்ற விளக்குதான் பெரும்பாலும் இருக்கும். ஒரு சில வீடுகளில் சுவரொட்டி விளக்குகள் இருக்கும். சிறு கண்ணாடிக் கூட்டுக்குள் கொஞ்சமாகத் தீயின் நாக்கைச் சுழற்றியவாறு தம் பிடித்து எரியும். இது சிறு தகரா டப்பா போலிருக்கும். அதனுள் சீமைத் தண்ணியை ஊற்றி, வேட்டியில் கிழித்த சிறு நீளத் துணியைத் திரித்துத் திரியாகப் போட்டு சிறு தகரக் குழல் வழியாக வெளியே கொண்டுவந்து ஏற்றி அது அணைந்துவிடாமல் இருக்க அந்தக் கண்ணாடி குடுவையை வைப்பார்கள். அதோடு சுவரில் ஒரு ஆணி அடித்து இந்த விளக்கை மாட்டிவிடுவதால் இது சுவரொட்டி விளக்காகிவிடும்.

சீமைத் தண்ணிக் கூடு என்ற விளக்கு சிறிய புனல் போல் இருக்கும். கீழே தட்டையான தகரத்தை வைத்து மூடியிருப்பார்கள். அதில் சீமைத் தண்ணியை ஊற்றிப் புனலின் குழல் போல் இருக்கும் பகுதியின் வழியாக ஒரு திரி போட்டு கொஞ்சமாக வெளியே இழுத்துவிட்டுப் பொருத்திவிட்டால் போதும். இந்த விளக்கை வைப்பதற்காக மண்ணாலான வீடுகளில் கொஞ்சமாகப் பள்ளம் தோண்டி சிறு வடிவமைத்து மாடக்குழி கட்டியிருப்பார்கள். அதனுள் இந்த விளக்கை வைத்துவிட்டால் திமுதிமுவென்று சிவப்பு கூடி எரியும். வெளிச்சம் நன்றாகத் தெரிந்தாலும் அதன் நிழலில் பாத்திரங்களும் மனிதர்களும் பூத வடிவம் கொண்டு நிற்பது போல இருக்கும். சிறு காற்றுக்கு அலைமோதிக்கொண்டிருக்கும் விளக்கு, பெரிய காற்றுக்கு அணைந்துவிடுவதோடு இருட்டையும் துணைக்குக் கூட்டிக்கொள்ளும்.

மாறு வேடம் போட்டவர்கள், அங்கே இருந்த பெரிய திண்ணையை ஒட்டி நின்றதால் சீனிக்கு மாறு வேடம் போட்ட காளியைத் தெரியவில்லை. அவளுடன் நின்றவர்களைப் பார்த்து, ‘என்ன தாயீகளா, இந்நேரத்துக்கு வந்துருக்கீக?’ என்றார். இவர்களும், ‘எய்யா நீரு மாடு மேய்க்க ஒரு ஆளு வேணுமின்னு கேட்டுக்கிட்டு இருந்தீருல்ல. அதேன் ஒரு பயல கூட்டிக்கிட்டு வந்துருக்கோம்’ என்றார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்டதும் சீனிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘நல்ல வேளை தாயீகளா. இந்த மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நல்ல வேலை செஞ்சீக. மாடு மேய்க்க ஆளு இல்லாம நான் பரிதவிச்சிக் கெடக்கேன்’ என்றவர், தலப்பாக்கட்டோடு இருக்கும் காளியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘நல்ல மட்டத்துப் பயலத்தேன் கூட்டிட்டு வந்திருக்கீக’ என்று அவர்களைப் பாராட்டினார்.

பிறகு, ‘அவன் பேரென்ன?’ என்று கேட்க, சற்று திகைத்தவர்கள், ‘காளியப்பன்’ என்று பாதி பொய்யும், பாதி மெய்யுமாகச் சொன்னார்கள். உடனே அவர் காளியிடம், ‘என்னப்பா, நம்ம வீட்டுல பத்து மாடு இருக்கு. அம்புட்டு மாட்டையும் பத்திட்டுப் போயி நல்லா மேய்ச்சிட்டு வருவீல்ல?’ என்று கேட்க, காளி தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்.

‘சரி, அவன் சாப்பிட்டானா?’ என்று கேட்க, அவசரத்தோடு மூன்று பேருமே இல்லை என்று பரிதாபமாகத் தலையை ஆட்டினார்கள். இவர்களின் தலையாட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘அடடா’ என்றபடி ‘உண்ணாமல, உண்ணாமல’ என்று குரல் கொடுத்தார்.

வீட்டுக்குளிருந்து என்ன என்று சத்தம் மட்டுமே கேட்டது. ‘நம்ம வீட்டுக்கு ஒரு பய மாடு மேய்க்க வந்திருக்கான். பாவம். காலையில இருந்து வவுத்துப் பசியோடு கெடக்கான் போலுக்கு. இம்புட்டு சோறு கொண்டாந்து கொடு’ என்றார்.

அந்தக் காலத்தில் அரைப்படி அரிசிச் சோற்றை ஒரு ஆள் ஒரே நேரத்தில் சாப்பிட்டுவிடுவார்கள். அதனால் உண்ணாமலை பொங்கல் இன்றோடு முடிந்துவிட்டது, மறுநாளைக்குச் சோறு வேண்டுமே என்பதற்காக, வராஞ்சோறு ஆக்கிப் புளிச்சத் தண்ணிப் பானையில் உருண்டை உருட்டிப் போட்டுக்கொண்டிருந்தாள். அதில் மூண்டு உருண்டை சோற்றை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு அகப்பை காணப்பருப்பு குழம்பையும் ஊத்திக் கொண்டுவந்து வைத்தாள். சீமைத் தண்ணிக் கூட்டின் வெளிச்சத்தில் எங்கும் இருட்டில் நிழல் கவிந்திருந்தது. அந்தச் சோற்றை மூன்று பேருமே சாப்பிட்டார்கள். காளி படுப்பதற்காக ஒரு சாக்கை சீனி எடுத்துக் கொடுக்க, மூன்று பேரும் மந்தையை நோக்கிப் போனார்கள்.

மறுநாள் சீனி மாடு மேய்க்க வந்தப் பையனைத் தேடிவந்தபோதுதான் தெரிந்தது, இந்தப் பெண்கள் மாறுவேடம் போட்டு வந்த விஷயம். இந்த விஷயம் ஊருக்குத் தெரிந்ததும் அனைவரும் சிரித்துக் குலுங்கினார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்