எங்க ஊரு வாசம்: ராத்திரியைக் குளுமையாக்கும் கூட்டாஞ்சோறு

By பாரததேவி

ஒருவழியாகத் தைப்பொங்கல் முடிந்துவிட்டது. அதன் எச்சங்களும் மிச்சங்களும் வீடு, மந்தை, தெரு என்று எல்லா இடத்திலும் பொங்கல் நாளை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தன.

வழக்கம் போல இரவு ஆண்களும் பெண்களும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அந்தக் காலங்களில் யாரும் வீட்டுக்குள் தனிக்குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலிருந்து வட்டிலிலும் கும்பாவிலுமாக வரஞ்சோறு, குருதாலிச் சோறு, சானை, தினை, காடகண்ணிச் சோறு என்று கொண்டுவருவார்கள். சிலர் சோளச் சோறு, கம்பஞ் சோறு என்றும் கொண்டுவருவார்கள். மழை பெய்து குளம் பெருகும் காலங்களிலும் குளம் வற்றும் காலங்களிலும் பெரும்பாலும் கெண்டை, அயிரை, ஜிலேபி, கெளுத்தி என்று மீன் குழம்பாக இருக்கும். மவுளி, துயில், கும்மிடி, புளியஞ்சிறுகீரை என்று காட்டில் முளைத்திருக்கும் கீரையை மடி நிறையப் பிடுங்கிக்கொண்டு வந்து கடைவார்கள்.

இந்தக் கீரைகள் தரிசு நிலங்களிலும் விதையிட்ட உழவு நிலங்களிலும் நிறைய கிடைக்கும். ஒரு மழை பெய்துவிட்டால் போதும். அங்காங்கே சிறு சிறு கூட்டமாகக் குடிபெயர்ந்தது போல கூட்டம் கூட்டமாகக் காளான் பூத்து, குடை விரித்திருக்கும். அதனால் காளான் குழம்புகளும் உண்டு. இதில் பூஞ்சை காளான், குடை காளான், மடி காளான், வெடிப்புக் காளான் என்பதோடு விஷக் காளான்களும் உண்டு.

குருதவாலி, சாமை, தினை ஆகியவற்றை பச்சையாகக் குத்துவதென்றால் கொஞ்சம் கஷ்டம். அதனால் வயதானவர்கள், கொஞ்சம் உடல் நலிவாக இருப்பவர்கள் எல்லோரும் இந்த மூன்று தானியங்களோடு காடகண்ணியை ஒன்றாகப் போட்டு அவித்துப் புழுங்கலாக்கி, காயப்போட்டுக் குத்தி, அரிசியாக்கிவிடுவார்கள். இது குத்துவதற்கு லேசாக இருக்கும். ஆனால் இந்தச் சோறு இப்போதைய நெல்லரிசி சோற்றப் போல் இருக்கும். புளித்தண்ணிப் பானையில் உருட்டிப் போட முடியாது.

இதில் சாமை அரிசிக்கு ஒரு விசேஷம் உண்டு. நாய்க்கடி, பாம்புக்கடி, மஞ்சள் காமாலை இந்த மாதிரி நோய் வந்தால் அப்போதெல்லாம் பச்சை இலைச் சாறுதான் மருந்தாகப் பயன்பட்டது. இந்த மருந்துக்குச் சில சமயங்களில் நாற்பது நாள் உப்பு, உறைப்பு சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். அப்போது இந்தச் சாமைக் கஞ்சியைத்தான் உப்பு போடாமல் பத்தியக் கஞ்சியாகக் குடிக்க வேண்டும். வேண்டுமென்றால் பாசிப் பருப்பு துவையல் அல்லது கடைந்து சாப்பிடலாம். வரகை மட்டும் அவிக்க மாட்டார்கள். அவித்தால் அது நன்றாக இருக்காது.

கருநாகம் கடித்தால்கூட யாரும் பதறுவதில்லை. நல்ல நீர் கோர்த்த வாழைமட்டையை வெட்டி, பாம்பு கடிபட்டவரை அதில் படுக்கவைப்பார்கள். அதே நீர் கோர்த்த மட்டையை வெட்டி அவர் வாயில் பிழிந்து குடிக்கவைப்பார்கள். இதற்குள் ஒருவர் வைத்தியரைக் கூட்டிக்கொண்டு வருவார். வரும் போதே வைத்தியர் பச்சிலையைக் கசக்கிக்கொண்டே வந்து இவர் வாயில் சாற்றைப் பொழிந்துவிட்டு வேப்பிலை கொண்டு அடித்து, விஷத்தை இறக்குவார். இதுதான் மருந்து.

எல்லாரும் ஒன்றாக உட்காந்து கூட்டாஞ்சோறாகச் சாப்பிடுவதால் சோறும் வெஞ்சனமும் பகிர்ந்துகொள்ளப்படும். இவர்கள் சாப்பிடும் முன், ஊர்க்காலி, மாடு மேய்ப்பவர், துணி வெளுப்பவர், முடி வெட்டுகிறவர் என்று இருட்டி ஒரு நாழிகை ஆனதுமே சோறு கேட்டு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு முதலில் ஒவ்வொரு உருண்டை சோறும் ஒரு ஆப்பை குழம்பும் ஊற்றிவிட வேண்டும். அது ஊரின் கட்டுப்பாடு.

சாப்பிட்டு முடித்து வெற்றிலை, பாக்கு போட ஆரம்பிக்கும் போது ஊர்ப் பெரியவர்களும், நாட்டாமையும் சேர்ந்து சொல்வார்கள், ‘யாராகு கோயிலுக்குப் போகணுமின்னு நினைக்கீகளோ அவுகள்ளாம்போயிட்டு வந்துருங்க. பெறவு கல்யாண வேலை வந்துரும். அப்ப யாரும் எங்கிட்டும் நவர முடியாது. அப்ப பார்த்து கோயிலுக்குப் போறேன், குளத்துக்குப் போறேன்னு சொல்லக் கூடாது’ என்று கண்டித்துச் சொல்ல, பெண்கள் குரல் அடங்கி முணுமுணுவென்று முனங்கலாய்த் தங்களுக்குள்ளே பேசிக் கொள்வார்கள்.

இப்போதைப் போல் அப்போது யாரும் அதிகமாக எந்தக் கோயிலுக்கும் போனதில்லை. எல்லோருடைய குல தெய்வங்களும் மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டிய வனங்களுக்குள்தான் இருந்தன. அதனால் ஆறேழு வண்டிகளைக் கட்டிக்கொண்டு ஒரே நாளில் போய்விட்டு வந்துவிடுவார்கள். இப்போது அவர்கள் போவது சங்கரன்கோவிலுக்கு. அடுத்து கல்யாணங்களைப் பேசி முடித்துவிட்டால் குளுமையைக் (கிடா வெட்டுதல்) கொடுப்பதற்காக கோபால மலைக்குப் போக வேண்டும்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்