சடசடவென்று பொழியும் மழையும் புள்ளினங்களின் கீச்சிடலும் சிலுசிலுசிலுக்கும் காற்றும் பின்னணி அமைக்க, நேர்த்தியாக உருவாகும் இசையைப் போலவே ரசித்துச் சமைக்கிறார் ஓமனா அம்மா. 67 வயதாகும் இவர் சமைக்கும்போது துளிகூடச் சிரிப்பதில்லை; வேறெதிலும் கவனம் செலுத்துவதில்லை. “வேலை செய்யும்போது சிரிப்பது எனக்குப் பிடிக்காது” என்று சொல்லும் ஓமனா, கைகால்களை உதறியபடி வார்த்தைகளைக் கடித்துக் குதறி, காதில் ஈயத்தை ஊற்றுகிற தொகுப்பாளர்களிடம் இருந்து நமக்கு விடுதலை தருகிறார்.
கேரளம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஓமனா. இவருடைய உறவினர்களான அம்ஜித், அபிஜித் இருவரும் சிறுவயதில் இவரது சமையலை ருசித்தவர்கள். தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற ‘ராகுல்காந்தி புகழ்’ ‘வில்லேஜ் குக்கிங்’ சேனலைப் பார்த்துத்தான் தங்களுக்கு இப்படியொரு எண்ணம் உதித்ததாகச் சொல்கிறார்கள் இந்தச் சகோதரர்கள். கேரளத்தின் எழில் கொஞ்சும் இயற்கைப் பின்னணியில் கேரளத்தின் உணவு வகைகளைச் சமைப்பதுதான் இவர்களது திட்டம். இதற்கு ஓமனா அம்மாவைச் சம்மதிக்க வைக்கவே ஆறு மாதங்களாகினவாம்!
2018இல் தொடங்கப்பட்ட இவர்களது, ‘வில்லேஜ் குக்கிங் - கேரளா’ யூடியூப் சேனலுக்குத் தற்போது பத்து லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள். இவர்களது முகநூல் பக்கத்தையும் லட்சக்கணக்கில் பின்தொடர்கிறார்கள். இவர்கள் வெளியிடுகிற வீடியோக்களில் சில கொஞ்சம் நீளமானவையாக இருந்தாலும் செய்முறையின் நேர்த்தியில் நாம் கண்ணிமைக்க மறந்துவிடுகிறோம்.
ஓமனா அம்மா சமைப்பதைப் பார்ப்பதே பசியாற்றும். அவர் காய்கறிகளை நறுக்குவதைப் பார்ப்பது அலாதியானது. சிறு கத்தியை வைத்து, காய்கறிகளைக் கையில் பிடித்தபடியே அவர் லாவகமாக நறுக்குவது அவ்வளவு அழகு. பீட்ரூட்டைத் தோல் சீவி, கையில் பிடித்தபடியே சிறு சிறு கீறுகளாக வகுந்து, அதையும் பொடியாக நறுக்குவது தேர்ந்த சிற்பி சிலையை வடிப்பதுபோல் இருக்கிறது. ஓமனா பயன்படுத்தும் கத்திக்கு 27 வயது! இவ்வளவு வருட உழைப்பில் அது தேய்ந்துவிட்டது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு வருமோ என்று வருதத்தோடு சொல்கிறார் ஓமனா.
கேரளப் பாரம்பரிய உடையான முண்டு அணிந்து சமைக்கிறார் ஓமனா. வீடியோவில் சமையல் குறித்து எதையும் இவர் பேசுவதில்லை என்பதால் சமையலுக்கான செய்முறை விளக்கத்தைத் தனியாகத் தருகிறார்கள். யூடியூப் சேனல் தந்திருக்கும் புகழ் வெளிச்சம் ஓமனாவுக்குப் பரிச்சயமில்லாதது. “யூடியூபில் வருவது நீங்கதானே” என்று யாரேனும் சொன்னால், சிரித்தபடியே கடக்கிற ஓமனா, சிலநேரம், “அது நான் அல்ல” என்றும் சொல்லிவிடுவாராம்!
ஓமனா சமைக்கப் பயன்படுத்துகிற கறுநிற மண்பாத்திரங்கள் பழமையும் பாரம்பரியமும் இணைந்த கலவை. சமையலுக்குத் தேவையான மசாலா சாந்துகளை அம்மியில் அரைக்கிறார். மாவு வகைகளை உரலில் ஆட்டுகிறார். நவீனச் சமையலறைச் சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை. தன் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாரம்பரிய சமையல் தனக்குப் பக்கபலமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். நான்கு மாதங்களுக்கு முன்பு இவர் பதிவேற்றிய உடனடி வெங்காய ஊறுகாயை இதுவரை 54 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். வேர்க்கடலையில் செய்த மிக்ஸர் 35 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. காளிபிளவர் 65-ஐ 31 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஓணம் விருந்து, நேந்திரங்காய் சிப்ஸ், வாழைக்காய் வறுவலுடன் வெல்லம் சேர்த்த சக்கரை வரட்டி, பல வகை ஊறுகாய், நாட்டுக்கோழி சமையல் என ஒவ்வொன்றும் நம்மை கேரளத்துக்கே அழைத்துச் செல்கிறது!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago