முகம் நூறு: சிகரம் தொடும் அரசுப் பள்ளி!

By பிருந்தா சீனிவாசன்

பேருந்துகூட எட்டிப் பார்க்காத ஒரு குக்கிராமத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ஒருவரது எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? கிராமத்து வாழ்க்கை பழகாதவராக இருந்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வேறொரு பள்ளிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு செல்லலாம். வேறு வழியில்லாமல் பணிக்காலம் நிறைவடையும்வரை அந்தப் பள்ளியிலேயே பணிபுரியலாம். கடமை உணர்வு இருப்பவராக இருந்தால் மாணவர்களுக்கு நல்லபடியாகப் பாடம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை உயர்த்தலாம். ஆனால், இப்படி எந்தவொரு வட்டத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் அந்த அரசுப் பள்ளியோடு சேர்த்து மாணவர்களின் தரத்தையும் உயர்த்துவதையே தன் லட்சியமாகக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஆசிரியர் இந்திரா.

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் இருக்கிறது ராஜாவூர் கிராமம். அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் இந்திரா. 2008-ம் ஆண்டு அவர் இந்தப் பள்ளியில் பொறுப்பேற்றபோது பதினேழு மாணவர்கள்தான் படித்துக்கொண்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 39-ஆக அதிகரித்திருக்கிறது. ராஜாவூர் கிராமத்தின் மக்கள்தொகை முந்நூறுக்கும் குறைவு. அந்த விகிதப்படி பார்த்தால் இருபது மாணவர்களுக்கும் குறைவாகத்தான் அந்தப் பள்ளியில் படிக்க முடியும். அதனால் அருகில் இருக்கிற பள்ளியின் மாணவர்களை இங்கே பகிர்ந்தளித்து, எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறார்கள். இந்தப் பள்ளியின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் உதவித் தலைமை ஆசிரியர் மகேந்திரனும் துணை நிற்பதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் இந்திரா.

ஏழ்மையிலும் கல்வி

தன் வாழ்வும் வளர்ப்பும்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஈடுபாடும் அக்கறையும் ஏற்படக் காரணம் என்று சொல்லும் இந்திரா, ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். சொந்த ஊர் திருப்பத்தூர். அப்பா மெக்கானிக், அம்மா இல்லத்தரசி. ஏழு குழந்தைகளுக்கும் ஒரு வேளை சாப்பாடு போடுவதற்கே படாதபாடு பட்டிருக்கிறார் இந்திராவின் அப்பா.

“சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எங்களை எப்படியாவது படிக்கவைக்கணும்னு அப்பா உறுதியா இருந்தார். எங்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கித் தந்து உதவச் சொல்லி ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்க கிட்டே எங்கப்பா கையேந்தி நின்னது இன்னும் அப்படியே என் கண் முன்னால நிக்குது. அந்தக் காலத்துல பன்னிரெண்டாம் வகுப்புக்கு நாற்பது பைசாதான் ஃபீஸ். அதைக் கட்ட முடியாம, யூனிஃபார்ம் வாங்க முடியாம ஒரு மாசம் கழிச்சிதான் ஸ்கூலுக்குப் போனேன்” - வார்த்தைகளில் உறுதி இருந்தாலும் கண்களுக்குள் கண்ணீர் தளும்பி நிற்கிறது. அடுத்த நொடியே சமாளித்துக்கொண்டு தொடர்கிறார்.

“நான் பன்னிரெண்டாவது முடிச்சதுமே நல்ல வரன் வந்தது. உடனே கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க” என்று சொல்லும் இந்திரா, திருமணத்துக்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்தார். தன் கணவருக்குக் கடற்படையில் வேலை கிடைக்க, அதற்குப் போக வேண்டாம் என்று தடுத்திருக்கிறார். பிறகு தனக்குப் பிடித்த காவல்துறையில் சேரச் சொல்லி, தேர்வெழுத ஊக்கப்படுத்தினார். இந்திரா விரும்பியபடியே அவரது கணவருக்குக் காவல்துறையில் வேலை கிடைத்தது.

“எனக்கும் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கணும்னு ஆசை. அதை இவர்கிட்டே சொன்னப்போ, பெண்களுக்கு டீச்சர் வேலைதான் பொருத்தமா இருக்கும், அதனால டீச்சர் டிரெயினிங்ல சேருன்னு சொன்னார். ஆரம்பத்துல வேண்டா வெறுப்பாதான் சேர்ந்தேன். ஆனா பயிற்சி காலத்துலதான் ஆசிரியர் பணி உண்மையிலேயே எவ்வளவு மகத்தானதுன்னு புரிஞ்சது. எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பொக்கிஷமாதான் இந்த வேலையை நான் நினைக்கிறேன்” என்று நெகிழ்ந்துபோய் சொல்லும் இந்திரா, பதினோரு மாத மகனை அம்மா வீட்டில் விட்டுவிட்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.

உத்வேகம் தந்த அங்கீகாரம்

பயிற்சி முடித்ததும் 1991-ம் ஆண்டு கே.வி. குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களைப் பார்த்தபோது இந்திராவுக்குத் தன் இளமைக் காலம் நினைவுக்கு வந்தது. தன்னைப் போலவே வறுமையை வெல்லும் கனவுடன் படிக்கும் மாணவர்களின் தரத்தை ஓரளவுக்காவது உயர்த்த வேண்டும் என்று நினைத்தார். பாடம் சொல்லித்தருவதுடன் மட்டும் நின்றுவிடாமல் ஒவ்வொரு மாணவரிடமும் புதைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் செய்தார். ஒவ்வொரு மாணவரையும் அவர்களது குடும்பச் சூழலோடு சேர்த்தே புரிந்துகொண்டார். இந்திராவின் இந்த அணுகுமுறை அந்த ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்கித் தந்தது. இவரது தாக்கத்தால் அந்த ஊரில் இரண்டு குழந்தைகளுக்கு இவரது பெயரை வைத்திருக்கிறார்கள்!

“ரெண்டு குழந்தைகளுக்கு என் பெயரை வச்சதைக் கேள்விப்பட்டதும் ரொம்ப நிறைவா இருந்தது. நம் கடமையை செய்ததுக்கே இவ்ளோ கொண்டாடுறாங்களேன்னு தோணுச்சு. அதுதான் இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்யணும்ங்கற உத்வேகத்தையும் கொடுத்தது” என்று சொல்லும் போதே பழைய நினைவுகளின் தாக்கம் அவர் முகத்தில் பிரதிபலித்தது.

அரசுப் பள்ளியும் பள்ளிதான்

எட்டு ஆண்டுகள் அந்தப் பள்ளியில் பணிபுரிந்த பிறகு திருப்பத்தூருக்குப் பக்கத்தில் இருக்கும் கும்மிடிக்கான்பட்டி என்ற கிராமத்துக்கு மாற்றலாகி சென்றார். இந்த முறை உதவித் தலைமை ஆசிரியர் பணி. அந்தப் பள்ளியில் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதுடன் ஆங்கிலப் பயிற்சியும் அளித்தார். பெயரளவுக்கு ஆண்டு விழா நடத்தாமல் கலை நிகழ்ச்சிகளுடன் அதை ஒரு கொண்டாட்டமாகவே மாற்றினார். அறிவியல் கண்காட்சியில் தன் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு கருத்துக்களை மையமாக வைத்து மாதிரிகளை வடிவமைக்க உதவினார். பானையின் உட்புறம் முழுவதும் தார் பூசிவிட்டு, அதில் நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒட்டி இவர் செய்த, ‘அண்டத்தை அருகில் பார்க்கலாம்’ என்ற கருத்தாக்கத்துக்கு முதல் பரிசு கிடைத்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

மாற்றத்துக்கான களம்

அதன் பிறகு ராஜாவூர் தொடக்கப் பள்ளிக்கு மாற்றலுடன் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வும் கிடைத்தது. தான் காண விரும்பும் மாற்றம் அனைத்தையும் இந்தப் பள்ளியில் செயல்படுத்திவருகிறார். அரசுப் பள்ளி என்றாலே பழுதடைந்த கட்டிடங்களும் அழுக்குச் சீருடை மாணவர்களும்தான் என்ற நினைப்பை உடைத்துக்காட்ட வேண்டும் என்று நினைத்தார். சீரூடையும் செருப்பும் அரசாங்கம் தருகிறது. தன் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் தன்னுடைய செலவில் பெல்ட், டை, அடையாள அட்டை ஆகியவற்றை வாங்கித் தந்திருக்கிறார்.

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதுமைகளைக் கொண்டுவந்திருக்கிறார். மாணவர்களுக்குப் புத்தக அறிவுடன் பொது அறிவும் அவசியம் என்பதையும் இந்திரா உணர்ந்திருக்கிறார். அதனால்தான் தன் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தைத் தாண்டி, வெளியே பரந்து விரிந்திருக்கும் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளும் வித்தையையும் கற்றுத்தருகிறார். ராஜாவூர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகம் எல்லாம் தலைகீழ் பாடம். உயிர்மெய் எழுத்துக்கள், எண்கள், வாய்ப்பாடு என அனைத்தையும் தலைகீழாகக் கேட்டாலும் சொல்கிறார்கள்.

சாதனை புரியும் மாணவர்கள்

இந்தப் பள்ளி மாணவர்கள், பல்வேறு சாதனைகளைச் செய்திருப்பது, இந்திராவின் உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் சான்று. பேச்சு, பாட்டு ஆகியவற்றில் மட்டுமல்ல நினைவாற்றலிலும் இந்த மாணவர்கள் மேம்பட்டு நிற்கிறார்கள். எந்த வகுப்பில் எத்தனை பாடம் என்று கேட்டால் பட்டென்று சொல்லும் இவர்கள், ஒவ்வொரு பாடத்தையும் அடி மாறாமல் சொல்கிறார்கள். சொல்வது என்றால் ஒப்பிப்பது அல்ல. பொருள் உணர்ந்து, நிறுத்தி, நிதானமாக ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போலவே சொல்கிறார்கள்!

முதல் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99 பூக்களின் பெயர்களை 32 விநாடிக்குள் சொல்கிறாள் என்றால், இரண்டாம் வகுப்பு படிக்கும் தரணி, 220 நாடுகளின் பெயர்களை அவற்றின் கொடிகளோடு அடையாளப்படுத்துகிறாள். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்களின் பெயர்களை அவர்களுடைய நாட்டுடன் சேர்த்துச் சொல்வது, தமிழ் இலக்கிய ஏடுகளின் பெயர்களைச் சொல்வது, கம்பன் பாட்டைச் சொல்வது என்று இந்த மாணவர்களின் சாதனைப் பட்டியல் நீள்கிறது.

செயல்வழி கற்றல்

பள்ளியின் முகப்பில் இருக்கும் மரங்களைச் சுற்றி மாணவர்களோடு நின்றிருக்கிறார் இந்திரா. மாணவர்கள் அனைவரும் காலி தண்ணீர் பாட்டிலுக்குள் மண்ணை நிரப்பி, ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று ஒவ்வொரு வடிவில் அடுக்குகிறார்கள். இப்படித்தான் அவர்கள் கணித வடிவங்களைப் படிக்கிறார்கள்!

“பாடங்களை இப்படிச் செயல்வடிவத்துடன் கற்றுத்தரும்போது மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்” என்று சொல்லும் இந்திரா, ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் தன் ஒரு மாதச் சம்பளத்தை வைத்து அந்தக் கிராம மக்கள் அனைவருக்கும் சமபந்தி விருந்து கொடுக்கிறார். மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோரும் அமர்ந்து சாப்பிடுவது, தனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தருவதாகச் சொல்கிறார் இந்திரா.

பாடம் நடத்திவிட்டு, பாடத்திட்டத்தை ஒழுங்காக எழுதினாலே போதும் என்று தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் மாணவர்களின் நலன் சார்ந்து இந்திரா செய்துவரும் பணிகள் அவருக்குப் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆசிரியப் பணி அறப்பணி என்பதை இந்திரா போன்றவர்கள் நம்மிடையே நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

மேலும்