வர்ஜினியாவின் வூல்ஃப்பின் ‘ மிசஸ் டாலவே’ வெளியான நாள்

By ஆர்.ஜெயக்குமார்

வர்ஜினியா வூஃப்ல்ப், உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். இவரது முதல் நாவல் ‘மிசஸ் டாலவே’. இந்த நாவல் மே 14, 1925-ல் ஹோகார்த் பதிப்பகத்தால் லண்டனில் வெளியிடப்பட்டது. இந்தப் பதிப்பகம் வர்ஜினியா வூஃப்ல்பும் அவரது கணவரான எழுத்தாளருமான லெனார்டு வூஃப்ல்பும் இணைந்து நடத்திய பதிப்பகம்.

‘மிசஸ் டாலவே’ நாவல், முழுக்கவும் எண்ணவோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பல தரப்பட்ட மனித மனங்கள், தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்ளும் சித்திரங்களை இந்த நாவல் விவரிக்கும்.

51 வயது கிளாரிசா டாலவே இந்த நாவலின் மையப் பாத்திரம். இவரது கணவர் ரிச்சர்டு டாலவே. மிசஸ் டாலவே தன் வீட்டில் ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்கிறார். அதற்குப் பூக்கள் வாங்க சாலையில் இறங்கி நடக்கிறார். இந்த ஒரு நாள்தான் கதைக் காலம். இந்த ஒரு நாளில் மிசஸ் டாலவேயுடன் குறுக்கிடும் மனிதர்கள் பலரின் மனவோட்டங்கள்தாம் இந்த நாவல்.

முதலாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டத்தில் அதன் பாதிப்புகள், லண்டன் நகரத்தின் மாற்றங்களையும் இந்த நாவல் சொல்லிச் செல்கிறது. மிசஸ் டாலவே நகர சாலைகளில் நடந்தபடி பழைய விஷயங்களை நினைத்தபடி செல்கிறார். தனது இளமைக் காலத்தை நினைக்கிறார். தன்னிடம் காதலை வெளிப்படுத்திய பீட்டரின் நினைவு வருகிறது. திடீரெனத் தன் மகளின் நினைவு வருகிறது. ‘அவளுக்கு 17 வயதுதான் ஆகிறது. ஆனால், அவளுக்கு ஏன் ஷாப்பிங்கில் விருப்பம் இல்லை?’ என நினைக்கிறார்.

வர்ஜினியா வூஃப்ல்ப்

அவரது மகளான எலிசபத் டாலவேக்கு அம்மாவின் இம்மாதிரியான விருந்துகளில் விருப்பம் இல்லை. அவளது உற்ற துணை ஆசிரியையான கில்மேன். கில்மேனுக்கு மிசஸ் டாலவேயின் பகட்டும் விருந்துகளும் அறவே பிடிக்காது.

மிசஸ் டாலவேயிடம் பீட்டர் என்பவர் காதலை வெளிப்படுத்திய சம்பவம் நினைவுக்கு வருகிறது. பீட்டரிடம் பேசியதும் விவாதித்ததும் மிசஸ் டாலவேவின் நினைவுக்கு வருகிறது. அன்றைய நாளில் அவர்கள் திடீரென நேரில் சந்தித்துக்கொள்கிறார்கள். பீட்டர், “நீ சந்தோஷமாக இருக்கிறாயா?” எனக் கேட்கிறார். மிசஸ் டாலவே இந்தக் கேள்வியைத் தொடர்ந்து ரிச்சர்டுடனான தன் வாழ்க்கையை நினைத்துக்கொள்கிறார். ரிச்சர்டு அவளுடன் தனிப்பட்ட முறையில் கழிப்பதே இல்லை என நினைத்துக்கொள்கிறார். ரிச்சர்டு, தன் மனைவிக்கு இப்படியொரு அபிப்ராயம் இருக்கிறது என நினைத்துக்கொள்கிறான். இரவு விருந்தில் அவளை சந்தோஷப்படுத்த மலர்களை வாங்கிச் செல்கிறார்.

விருந்தில் கலந்துகொள்ள இருக்கும் மனநல மருத்துவர் வில்லியம் ப்ராட்சாவும் இந்த நாவலுக்குள் இருக்கிறார். அவரது நோயாளியும் உலகப் போர் வீரருமான செப்டிமஸ் வாரன் சுமித்தின் மனவோட்டமும் வருகிறது. போருக்கு முன் கவிஞனாக இருந்த அவர், போரில் தன் நண்பனின் இறப்பைக் கண்டு புத்திப் பேதலித்துப் போகிறார். அவரது மனைவியான லுரசியாவின் தன் கணவனுக்கு மனநிலை சரியாக வேண்டும் என நினைக்கிறார். மருத்துவர், அவரை மருத்துவமனையில் சேர்க்க வலியுறுத்துகிறார். அதில் செப்டிமஸூக்கு விருப்பம் இல்லை. அவரைப் பிடித்துப் போக வீட்டுக்கே வருகிறார்கள். இதை அறிந்து ஜன்னல் வழியே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார் செப்டிமஸ். விருந்துக்குத் தாமதமாக வரும் வில்லியம் இதைப் பகிர்ந்துகொள்கிறார். யாரென்று தெரியாவிட்டாலும் இதைக் கேட்டு மிசஸ் டாலவே வருத்தப்படுகிறார். செப்டிமஸைக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸை பீட்டர் பார்த்திருக்கிறார். ‘லண்டன் எவ்வளவு மாறிவிட்டது’ என நினைத்துக்கொண்டு விருந்துக்கு வந்துவிடுகிறார். அந்த விருந்துக்கு எதிர்பாராதவிதமாக மிசஸ் டாலவேயின் தோழியான சாலி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஓர் உறவு இருந்திருக்கும். அதை நினைத்துக்கொள்கிறார் மிசஸ் டாலவே. அவளுடனான முத்தம் இன்றும் மிசஸ் டாலவேவின் நினைவில் இருக்கிறது. தன் தோழில் இன்று ஒரு பணக்காருக்கு வாழ்க்கைப்பட்டு ஒரு மரபான குடும்பப் பெண் ஆகிவிட்டார் என நினைத்துக்கொள்கிறார்.

இப்படிப் பலதரப்ப மனவோட்டங்களில் வழி, போருக்குப் பின்னான வாழ்க்கை, ஒருபால் ஈர்ப்பு, பணக்காரச் சீமாட்டிகளின் வாழ்க்கை, போரின் விளைவு எனப் பல நிலைகளை இந்த நாவல் மூலம் வர்ஜினியா சொல்லியிருக்கிறார். ஆனால், பெரிய திருப்பமோ, முடிவை நோக்கிய முடுக்கமோ இல்லாத இந்தக் கதை ஆர்ப்பாட்டமில்லாமல் முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE