துப்புரவாளர் இனி திருவீதியாண்டார்!

By வா.ரவிக்குமார்

சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பின் சிகரம்தொட்ட திருநங்கை விருது வழங்கும் விழா ஒன்பதாம் ஆண்டாக சென்னை ராணி சீதை அரங்கில் அண்மையில் நடந்தது.
வாழ்நாள் சாதனையாளர் விருது நர்த்தகி நடராஜ், விழுப்புரம் ராதா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கை சமூக சேவகருக்கான விருதை பெங்களூருவைச் சேர்ந்த லாவண்யா, சென்னையைச் சேர்ந்த சந்தியா ஆகியோர் பெற்றனர். திருநங்கைகளுக்காகத் தனது வாதத் திறமையைப் பயன்படுத்தும் ஊட்டியைச் சேர்ந்த வழக்குரைஞர் திருநங்கை சவுமியா, காவலர் பிரபா ஆகியோர் பெற்றனர்.
தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்ததற்கு ‘பார்ன் டு வின்’ அமைப்பின் சுவேதாவுக்கு நன்றி கூறிய நர்த்தகி, “இந்த இடத்தில் இந்த அமைப்பினருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தன்னலமற்ற சேவையால் சமூகத்துக்கு ஒப்பற்ற சேவை செய்துவரும் துப்புரவாளரை இனிமேல் ‘திருவீதியாண்டார்’ என்று அழைக்க வேண்டும் என்று அன்பாக வேண்டிக்கொள்கிறேன். தேவாரத்திலிருந்துதான் இந்தப் பெயரை நான் எடுத்துக்கொண்டேன். இந்தப் பெயரை அரசின் கவனத்துக்கும் வைக்க இருக்கிறேன்” என்றார். ஆலயங்களில் உழவாரப் பணி செய்பவர்களை ‘திருவீதியாண்டார்’ என்று அழைப்பது நம் மரபில் இருக்கிறது.
அம்பேத்கரைப் பற்றிய கானா பாடல்களை யூடியூபில் வெளியிட்டுவரும் முதல் திருநங்கை கானா பாடகியாக அறியப்படும் விமலா, சத்தீஷ்கர் மாநிலத்தின் சிறந்த திருநர் செயற்பாட்டாளர் காஜல் இருவரும் விருது பெற்றனர்.
செவிலியர் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை அன்பு ரூபி, சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை துபாயைச் சேர்ந்த மிலா ஆகியோர் பெற்றனர். சிறந்த மாணவருக்கான விருதை புதுச்சேரியைச் சேர்ந்த சாக்ஷியும் சிறந்த ஆன்மிக நெறியாளருக்கான விருதை சென்னையைச் சேர்ந்த குமாரியும் பெற்றனர். தமிழ் சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நடிகையாக நேஹா விருது பெற்றார்.
கேரளத்திலிருந்து வந்திருந்த திருநங்கை மருத்துவர் ப்ரியா, ஆணழகன் போட்டியில் வென்றிருக்கும் திருநம்பி பிரவீன் நாத், மத்திய அரசுப் பணியிலிருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த திருநங்கை சிந்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கும் கண்மணி ஆகியோர் விருது பெற்றனர். இது தவிர சிறந்த தொழில்முனைவோர், சிறந்த தம்பதி ஆகிய பிரிவுகளிலும் திருநர்கள் பலர் விருது பெற்றனர்.
“இசை, பக்தி, தொழில்முனைவோர், கல்வி, அழகுக் கலை இப்படி ஒவ்வொரு பிரிவிலும் சாதனை புரிந்த திருநங்கைகளைக் கொண்ட காலண்டர்களை வெளியிட்டு வருகிறோம். மூன்றாம் பாலினத்தவருக்கான கல்வி, பணிகளில் இடஒதுக்கீட்டை உண்டாக்குவதற்கு அரசு சார்ந்த அமைப்புகளுக்கு தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஏனென்றால், அரசின் இந்த இடஒதுக்கீடு கிடைத்தால்தான் மாற்றுப் பாலினத்தவருக்கான நாளைய எதிர்காலம் இருக்கிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார் சுவேதா.
முன்னுதாரண காலண்டர்
கடந்த 2013-ல் தொடங்கப்பட்ட ‘பார்ன் டு வின்’ அறக்கட்டளையின் மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் திருநங்கைகளை முன்னுதாரணமாகப் பொது வெளியில் அடையாளப்படுத்த 2014-ல் முதன் முறையாக நாள்காட்டியை வெளியிட்டது இந்த அமைப்பு. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டான 2015-ல்தான் அமெரிக்காவில் இப்படியொரு காலண்டர் மாற்றுப் பாலினத்தவர் சார்பாக வெளியிடப்பட்டது. அந்த வகையில் உலகத்திலேயே நாள்காட்டியின் வழியாக முன்னோடி திருநங்கைகளை வெளிக்கொணர்ந்ததிலும் சாதிக்கப் பிறந்தவர்கள் கூட்டமைப்பு முன்னணியில் இருக்கிறது.

சிறந்த வழக்குரைஞர் விருதுபெறும் திருநங்கை கண்மணி
​​​


திருநர்களின் திறன் வளர்க்கும் அமைப்பு
குடும்பச் சூழ்நிலையால் வீட்டைவிட்டு வெளியேறும் இளம் திருநங்கைகள், திருநம்பிகளின் கல்விக் கனவை நனவாக்க ‘பார்ன் டு வின்’ அமைப்பு உதவுகிறது. அதோடு தையல், சோப்பு தயாரிப்பு, அடுமனை போன்ற தொழில்களைக் கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது. இவர்களுக்கென்றே டெய்லரிங் யூனிட், பேக்கரி யூனிட் இயங்குகின்றன. விரும்பும் படிப்பைப் படிப்பதற்கு உதவுவதோடு, படிப்புக்குப் பின் அதையொட்டி அவர்கள் ஏதேனும் சிறுதொழில்கள் செய்வதற்கு விரும்பினால் அதற்கான கடன் உதவிகளையும் வங்கிகளின் மூலமாகக் கிடைப்பதற்கு இந்த அமைப்பு உதவுகிறது.
திருநம்பிகளையும் ஆதரித்து அவர்களுக்கான ஆலோசனைகளைக் கூறி, அவர்களுக்கான பணி, அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தையும் அவர்களைப் பற்றிய சமூகத்தின் தவறான பார்வையையும் பொது மேடையில் அவர்களை நிற்கவைத்து அவர்களின் கருத்துகளைச் சொல்லவைப்பதன் மூலமாகப் போக்கிவருகிறது சாதிக்கப் பிறந்தவர்கள் கூட்டமைப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE