மகாராஷ்டிர மாநிலம் சிங்கணாப்பூரில் உள்ள சனி பகவான் கோயில் கருவறைக்குள் பெண்கள் நுழைந்தால் அவர்கள் மீது பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் அதிகரிக்கலாம் என்று துவாரகை சாரதாபீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து தொடர்பாக, ‘பெண்கள் பிழைத்திருப்பதே குற்றமா?’ என்று கடந்த ஏப்ரல் 17-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். சங்கராச்சாரியாரின் கருத்து கண்டிக்கத்தக்கது என்றே பெரும்பாலான வாசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வழிபாட்டு உரிமை மட்டுமே பெண்ணுரிமை கிடையாது என்றும் சிலர் வாதிட்டிருந்தார்கள். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் இங்கே...
கோயில் கருவறைக்குள் நுழைந்தால் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிக்கலாம் என்ற மடாதிபதியின் பேச்சு பொறுப்பற்றது. மூடநம்பிக்கைகளை அது மேலும் ஆழமாக்கும். இன்று பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் தலைமை போன்றவை கிடைத்திருக்கின்றன. இந்த நேரத்தில் மடாதிபதிகளின் இதுபோன்ற பயனற்ற பேச்சுக்களைக் கேட்டுப் பெண்கள் பின்வாங்க வேண்டியதில்லை. அதே வேளை கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் பெண்கள் முனைப்புடன் இருக்க வேண்டும். பாலினச் சமத்துவம் பற்றி பேசி மட்டுமே பலனில்லை.
- கு. ரவிச்சந்திரன், ஈரோடு.
அடுக்கடுக்காக அச்சுறுத்தல்கள் எழுவது ஓரளவு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றாலும் இன்னொரு பக்கம் பெண்களுக்கும் இதில் பங்குண்டு. தன்னடக்கம், தன்னம்பிக்கை, தற்சார்பு மூன்றும் இந்தக் காலத்துப் பெண்களுக்குத் தேவை. பெண்களைத் தவறாகப் பார்க்கும் ஆண்களை இந்தச் சமூகம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் ஒரு பெண் லேசாகத் தடுமாறினாலும் பட்டம் கொடுத்துவிடுகிறார்கள். அதை எதிர்த்து நிர்கும் துணிவும் துடுக்கும் பெண்களுக்குத் தேவை.
- அ. சம்பத், சின்னசேலம்.
மடாதிபதியின் இந்தப் பேச்சு, ஆணாதிக்கச் சிந்தனை உடையவர்களை உசுப்பிவிட்டு, பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளத் தூண்டக்கூடும். திறமையால் தன்னை நிரூபிக்கும் பெண்களை வீழ்த்த முடியாத ஆண்கள்தான், ‘பாலியல் வன்முறை’ என்னும் அஸ்திரத்தை அவளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் துணிச்சல், முன்னெச்சரிக்கை, சாதூர்யம் ஆகியவற்றின் துணையோடு இதுபோன்ற தடைக்கற்களைத் தகர்த்தெறிய வேண்டும்.
- கஜலெட்சுமி சுப்பிரமணி, திருவானைக்காவல்.
பட்டாசு வெடிப்பு மரணங்களுக்கும் பெண்களின் கோயில் கருவறை நுழைவுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வரூபானந்தா சொல்வது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது. ஆண்களின் போதைப் பொருட்களின் பயன்பாட்டால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிக்கிறது என்று சொல்லும் அவர், இதுவரை ஏன் போதைப் பொருட்களின் கட்டுப்பாடு குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை? இவர்கள் எல்லாம் சமூகத்தில் களை போன்றவர்கள்.
- எஸ். பிரபு மதி, தேனி.
சனீஸ்வரர் பார்வை பெண்களுக்கு உகந்தது இல்லை என்ற சங்கராச்சாரியாரின் விளக்கம் பெண்களைப் பயமுறுத்துவதாக இருக்கிறது. பண்பாடு கெடும், புனிதத் தன்மை மறைந்துவிடும் என்று பெண்களையே குற்றம் சொல்லாமல் பெண்கள் போகக் கூடாது என்பதற்கான காரணத்தை அறிவியல்பூர்வமாகவோ ஆன்மிக ரீதியாகவோ விளக்கியிருக்கலாம். அப்படிச் சொல்லி, பெண்கள் இரண்டாம் பாலினமாக நடத்தப்படுவதில்லை என்பதை உணர்த்தியிருந்தால் இதுபோன்ற சர்ச்சைகள் வராது.
- ஜானகி ரங்கநாதன், சென்னை.
பெண்கள் எங்கே ஆணுக்கு இணையான இடத்தைப் பிடித்துவிடுவார்களோ என்ற பயம்தான் இதுபோன்ற அச்சுறுத்தல்களைச் செய்யச் சொல்கிறது. இதுபோன்ற பேச்சுக்கும் செயலுக்கும் எப்போதும் நியாயம் சேர்க்கக் கூடாது. பெண்களின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் பண்பாடும் புனிதமும் கெட்டுவிடும் என்ற மாயத் தோற்றத்தை வளர்க்கவே இந்தப் பேச்சு உதவும்.
- பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.
எந்த ஆதாரமும் ஆய்வும் இன்றி பெண்களுக்கு எதிரான வக்கிர உணர்வுடன் கற்பனையாக சில செய்திகளை சாதாரண மனிதர்கள் சொன்னாலே பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் மடாதிபதி என்ற பொறுப்பான பதவியில் இருக்கிறவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? துறவிகளிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகள் வெளிப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. நாடெங்கும் உள்ள சனீஸ்வரர் கோயிலில் பெண்கள் வழிபடும்போது எழாத பிரச்சினை, சிங்கணாப்பூரில் வழிபட்டால் மட்டும் ஏற்படுமா? இதுபோன்ற பிற்போக்குத்தனங்கள் நீடிப்பது நமது தேசத்துக்கு மாபெரும் அவமானம்.
- பொன். கருணாநிதி, கோட்டூர்.
தங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் முன்னுரிமை அழிக்கப்பட்டுவிடுமோ என்று ஆண்களுக்கு ஏற்படும் பயம்தான் இதுபோன்ற அச்சுறுத்தலுக்குக் காரணம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், பெண்களைக் குறைசொல் கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை பெண்களை பலம் இழந்தவர்களாகக் காட்டினாலும் உண்மையில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மன பலம் மிக்கவர்கள். அதைப் புரிந்துகொண்ட ஆண்கள், அவர்களை யோசிக்கவிடாமல், மனபலத்தை இழக்கச் செய்யும் சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களுடைய சக்தியைச் செயலிழக்கச் செய்கிறார்கள். தவிர, எல்லாப் பெண்களும் துணிச்சலாகச் செயல்பட முன்வருவதில்லை. அவர்களைக் கொண்டே, தன்னிச்சையாக செயல்படும் பெண்களை அவதூறுக்கு ஆளாக்குகிறார்கள். தனிநபராகச் செயல்படுவதைவிட ஒரு சமூகமே சேர்ந்து செயல்பட்டால், ஆண்களின் எதிர்ப்பைச் சமாளிக்கலாம்.
- என்.உஷாதேவி, மதுரை.
பெண் என்பவள் ஒரு மாபெரும் சக்தி. அதுதான் ஆண்களின் பயத்துக்குக் காரணம். பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சாதனை புரிந்துவருகின்றனர். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்று ஒவ்வொரு முறையும் பெண்கள் நிரூபித்துவருகின்றனர். ஓதுவார்களாகக்கூட இன்று பெண்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது பெண்களைக் கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது, ஆண்களின் சர்வாதிகாரப் போக்கைத் தெளிவுபடுத்துகிறது.
- ரேவதி விஸ்வநாதன், சின்னமனூர்.
சட்டத்தின் முன் மட்டுமல்ல வழிபாடுகளிலும் ஆண், பெண் வேறுபாடு கிடையாது. அதற்காக மதவாதிகள் சொல்லும் காரணங்கள், கருத்துக்கள் எல்லோர் மனதையும் புண்படுத்துவதாகவே உள்ளன. ஒரு சில கோயில்களுக்கென்று நியமங்கள் இருந்தால் அதைப் பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படி செய்யப்படவேண்டும். வழிபாடு அனைவருக்கும் பொதுவானது. அதை ஒரு சாராருக்கு மறுப்பது சரியாகப் படவில்லை. பெண்களால் பண்பாடு, புனிதத்தன்மை கெட்டுவிடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்ணைத் தெய்வமாக மதிக்கும் இந்த நாட்டில் பெண்கள் இரண்டாம் தர மனிதர்களாக நடத்தப்படுவது கொடுமையானது.
- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.
பெண்கள் மீது பல வகையான நிர்பந்தங்கள் திணிக்கப்படுவதும், குடும்ப வாழ்க்கையிலும், அதற்கு அப்பாலும் அவர்களது செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் பல காலமாக நடைமுறையில் உள்ளன. நாம் அனைவரும் இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். நாகரிகமான எந்தச் சமூகமும் இத்தகைய பிற்போக்குத்தனத்தை அங்கீகரிக்கக் கூடாது. பெண்களின் கோயில் நுழைவு குறித்து சங்கராச்சாரியாரின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதுவும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு மதத் தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை ஆண்களிடம் பெண்களை அடக்கியாளும் எண்ணத்தை மேலும் வலுவடையச் செய்யதா?
- ஜா. அனந்த பத்மநாபன், திருச்சி.
பெண்களை நசுக்கும் மனோபாவம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. பெரியார் காலம்தொட்டே, அவரைப் போன்றவர்கள் சாத்தியப்படுத்திய பெண் விடுதலை மாற்றங்களை, பழமையில் ஊறிய பெருந்தலைகள் மட்டம்தட்டியும் கொச்சைப்படுத்தியும் விமர்சித்த நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தூக்கியெறிந்து முன்னேறியதாலேயே இன்று பெண்கள் இந்த நிலையை அடைந்துள்ளோம். இதே உறுதியுடன் இனியும் தொடர்ந்து போராடுவோம்!
- இரா. பொன்னரசி,வேலூர்.
விரதம், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை உருவாக்கியவர்கள் மனிதர்கள்தானே? பெண்களை கோயில்களில் நுழையக் கூடாது என்று எந்த மதமும் சொல்லவில்லை. ஆதி காலத்தில் இருந்தது பெண்வழிச் சமூகம்தான். இடைக்காலத்தில் சில ஈனபுத்தி மனிதர்களால் அது மாற்றப்பட்டதில் இருந்து பெண் இரண்டாம் பாலினமாகவே புறக்கணிக்கப் படுகிறாள். மதக் கோட்பாடுகளை மீறும் பெண்கள் அடங்காப் பிடாரிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பெண்களை எப்போதும் மயக்கத்திலேயே வைத்திருக்கும் ஆண்களின் சதிவலை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து எறியப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது முழுவதும் கிழிபடும் நாள் வெகு தூரம் இல்லை.
- தேஜஸ், கோயம்புத்தூர்.
இந்து மதத்தில் மட்டுமல்ல, மற்ற மதங்களிலும் குறிப்பாக இஸ்லாம் மதத்தில், இதைவிடத் தீவிரமான கட்டுப்பாடுகள் இருப்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் ஒரு வியாக்கியானமுமே இல்லையே? பல இஸ்லாமிய குருமார்கள் துவாரகா சங்கரச்சர்யாரை விடவும் பெண்களுக்கெதிரான தீவிரமான கருத்துக்களை முன்வைக்கிறார்களே?
- சுப்ரமண்யம்
எப்போதெல்லாம் பெண் முன்னேற்றப் பாதையில் அடுத்த இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்கிறாளோ, அதைத் தடுக்கவே பாலினப் பாகுபாடு, பாலியல் வன்முறை போன்றவற்றை இந்த ஆணாதிக்கச் சமூகம் கட்டவிழ்த்துவிடுகிறது. இது போன்ற நிகழ்வுகளில் பெண் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால் மட்டுமே எதையும் எதிர்கொள்ள முடியும்.
- அ. கோகிலவாணி, ஈரோடு.
தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கவும் சாதிக்கவும் வைப்பது ஒவ்வொரு ஆணின் கடமையாகும். அப்போதுதான் பெண்ணுரிமை முன்னுரிமையாக்கப்படும். வீடு ஏற்றம் பெற்றால்தான் நாடும் ஏற்றம் பெறும். அதைவிட்டுவிட்டு பெண்களை இரண்டாம் பாலினமாக ஏன் புறந்தள்ள வேண்டும்?
- ரம்யா, கோயம்புத்தூர்.
சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தற்போது மகிழ்ச்சி கிடைத்திருக்கலாம். அதே மகிழ்ச்சி குடும்பம், பணிபுரியும் இடம், சமுதாயம் எங்கும் பரவி, சமுதாய மாற்றம் ஏற்படுகிறதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சடங்குகளைவிடச் சமுதாய மாற்றம் உயர்ந்தது. சடங்கு, குறுகிய வட்டம். சமுதாய மாற்றம், தொலைநோக்குப் பார்வை.
- பாலன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
24 mins ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago