இளவட்டங்கள் ‘துணி எறி’ விளையாடு வார்கள். இந்த விளையாட்டு எப்படி என்றால் ஒரு நீண்ட துண்டை எடுத்து அதன் ஒரு பக்கம் பெரிய முடிச்சாகப் போட்டுக்கொள்வார்கள். இன்னொரு நுனியைத் தங்கள் காலின் கட்டை விரலில் கவ்விக்கொள்வார்கள். பிறகு விளையாட்டில் சேர்ந்தவர்கள் எல்லாம் மண்டி போட்டு குனிந்துகொள்ள வேண்டும். ஒருவர் ‘சாட், பூட், திரி’ என்பார். உடனே இவர்கள் காலில் கவ்வியிருக்கும் துண்டின் நுனியைப் பின்னங்காலாலேயே தூக்கி அவரவர் தலைக்கு மேலாக வீசியெறிய வேண்டும். யாருடைய துண்டு தூரத்தில் போய் விழுகிறதோ அவர்கள் ஜெயித்தவர்கள் ஆவார்கள். யார் துண்டு கிட்டத்தில் விழுகிறதோ அவர்கள் தோற்றவராக அறிவிக்கப்படுவார். தோற்றவரின் முதுகில் ஜெயித்த ஒவ்வொருவரும் குதிரை ஏறிக்கொள்ள வேண்டும். முதல் துண்டு விழுந்த இடம்வரை சுமந்துகொண்டு போக வேண்டும்.
பாய்ந்து ஆடும் எட்டாந்தட்டு
பிறகு ‘எட்டாந்தட்டு’ விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கு நான்கு திக்கமும் காலாலேயே கோடு போட்டு அந்தக் கோடுகளை ஒன்று சேர்ப்பார்கள். கோட்டின் நீளத்தைப் பொறுத்து ஆறு பேர், எட்டுப் பேர் என்று காலால் ஒரு வட்டமிட்டு அதில் ஒரு அளவோடு நின்றுகொள்வார்கள். ஆறு பேர் நின்றாலும் சரி, எட்டுப் பேர் நின்றாலும் சரி நிற்பவர்கள் ஒவ்வொருவரும் இரு பக்கமும் கைகளை நீட்டி ஒருவர் கையை இன்னொருவர் தொடும்படியாகக் காலை அகலப்படுத்தி நின்றுகொள்வார்கள். இருவரின் கை நீளத்துக்கும் இடையில் சிறிய இடைவெளி இருக்கும். கோட்டு வட்டத்துக்குள் எத்தனை பேர் கால் வைத்திருக்கிறார்களோ அத்தனை பேர் வெளியே நிற்பார்கள். அவர்கள் வெளியே இருந்து இந்த வட்டத்துக்குள் கோட்டின் மீது நிற்பவர்களின் கைபடாது பாய வேண்டும். பாய்ந்த பிறகு மீண்டும் அவர்களின் கை தொடாமல் வெளியே பாய வேண்டும். ஒருவரைத் தொட்டுவிட்டால் ஆட்டம் தோல்விதான். அதனால் ஜாக்கிரதையாக விளையாடுவார்கள்.
காடு வாங்கும் கிளித்தட்டு
பிறகு ‘கிளித்தட்டு ஆட்டம்’. இதற்கு நாலு பக்கம் கோடு இழுப்பார்கள். நடுவில் ஒரு கோடு. கோட்டின் முடிவில் கொஞ்சம் வெற்றிடம் இருக்கும். இதற்கு ‘முத்தட்டு’ என்று பெயர். நடுக்கோட்டில் ஆறு பேர் நின்றால் அதற்குத் தலைவனானவன் ‘கிளி’. அவன் கோட்டுக்கு வெளியே கோட்டின் மூலையில் நிற்பான். இவர்களிடன் எத்தனை பேரோ அத்தனை எண்ணிக்கையின் எதிரணி ஆட்கள் வெளியே நிற்பார்கள். ஒருவர் ‘கிளி இறக்கம்’ என்று சொன்ன உடனே வெளியே இருப்பவர்கள் உள் கோட்டில் நிற்பவர்களிடமும் ஓடி வரும் ‘கிளி’யிடமும் அகப்படாமல் முத்தட்டை வந்து மிதிக்க வேண்டும். முத்தட்டை மிதித்த உடனே ‘காடு வாங்கலாம்’ என்று ஒருவர் சொல்ல, முத்தட்டை மிதித்தவன் கோட்டை விட்டு வெளியேறி ஓடுவான். அவனைக் ‘கிளி’யாக இருப்பவன் தொட்டுவிட வேண்டும். அப்படித் தொட்டுவிட்டால் இவர்கள்தான் ஜெயித்தவர்கள். எதிரணியினர் தோற்றவர்கள்.
குமரிகளின் கும்மியாட்டம்
குமரிகள் ஒன்றுபோல் நவ்வாப் பழக் கண்டாங்கிச் சேலை உடுத்தி, சில பெரியவர்களோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் ‘வடக்கு முகம்’ கொண்டு உட்கார்ந்திருக்கும் அம்மன் கோயிலை சுத்தப்படுத்துவார்கள். பிறகு அந்தக் கோயிலின் முன்னால் பொங்கல் பானை ஏற்றி, குலவையிட்டுப் பொங்கல் வைப்பார்கள். பூசாரி வந்து பூஜை செய்வார். கண் மலரும் கழுத்து நகையுமாக மஞ்சள் வர்ணப் பட்டுச் சேலையில் ஒளிரும் அம்மன் முன்னால் பொங்கல் பானையை இறக்கிவைப்பார்கள். பின்பு பளபளவென்று தேய்த்துக் கழுவிய பானை கழுத்து வளையத்தில் பூச்சுற்றி, சந்தனம், குங்குமம் வைத்துச் சூடம் ஏற்றி சாமி கும்பிடுவார்கள். அம்மனுக்கு மட்டும் மண்பானைப் பொங்கல் கிடையாது. வெண்கலப் பானைப் பொங்கல். பருத்தி சுளையில் நூலெடுத்துத் திரி போட்டு வெண்கல விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுவார்கள்.
பின்பு பொங்கல் பானையைச் சுற்றிவந்து கும்மி அடிப்பார்கள்.
‘நாழி நறுக்கு மஞ்ச நன்னாளி பச்ச மஞ்ச
அரச்சி வழிச்சாளோ மாரி அஞ்சு வகைக் கிண்ணத்துல
தேய்ச்சி முழுகினாளோ மாரி தெப்பக்குளம் தத்தளிக்க
ஆற்றினாள் முடிய மாரி அறநூற்று காதவழி
வாரி முடித்தாளோ வர்ணமுடி கையால
கோதி முடித்தாளோ கோல வர்ண கையால...’
இப்படிப் பாட்டுப் பாடி கும்மியடித்த பின் எல்லோருக்கும் அந்தப் பொங்கலைப் பகிர்ந்தளிப்பார்கள். பிறகு குமரிகளும் மந்தைக்குப் போய் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்களுக்கான விளையாட்டு துரோபூசணி, தவிடு கண்ணி, பொட்டக் கண்ணி, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சு... இப்படியான பல விளையாட்டுகளை விளையாடுவார்கள்.
- கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: arunskr@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago