தலைவாழை: தமிழ்ப் புத்தாண்டு விருந்து - வேப்பம்பூ பச்சடி

By ப்ரதிமா

கொளுத்தும் கோடைக்கு நடுவில் நாம் இளைப்பாறக் கிடைத்த நாளாக இருக்கிறது சித்திரை மாதப் பிறப்பு. தமிழர்கள் பலரும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். அன்று பெரும்பாலானோர் வீடுகளில் அசைவ விருந்து கமகமக்கும். சித்திரையில் திரும்பும் திசையெங்கும் மலர்கள் பூத்துக் குலங்க, அவற்றுள் ஒன்றான வேப்பம்பூவில் பச்சடி செய்வோரும் உண்டு. சித்திரை முதல் நாளைச் சிறப்பிக்கும் வகையில் வேப்பம்பூ பச்சடி செய்யக் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. பாரம்பரிய உணவைக் காலத்துக்கு ஏற்ப புதிய முறையில் சமைப்பதில் வல்லவர் இவர்.

என்னென்ன தேவை?
வேப்பம்பூ - 1 கைப்பிடி
வெல்லம் - 2 கைப்பிடி (துருவியது)
புளி – 1 நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
பெருங்காயம், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நெய், கடுகு, உளுந்து - தாளிக்க

எப்படிச் செய்வது?
வேப்பம்பூவை நெய்யில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து அதில் புளிக்கரைசல், பொடித்த வேப்பம் பூ சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் துருவிய வெல்லத்தைச் சேருங்கள். பின் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்கவிடுங்கள். கரைசல் கெட்டியானதும் நெய்யில் கடுகு, உளுந்து தாளித்துக் கொட்டுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE