‘‘கா ல்பந்து விளையாட்டைப் பெண் உரிமைகளைப் பெறுவதற்கான கருவியாகக் கருதுகிறேன்’’ என்கிறார் கலிதா போபெல். ஆப்கானிஸ்தானில் முதல் பெண்கள் கால்பந்து அணியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். ஐந்து ஆண்டுகளாக அரசியல் தஞ்சம் பெற்று, டென்மார்க்கில் வசித்துவருகிறார். ஹம்மெல் என்ற தொண்டு நிறுவனத்தில் உலகம் முழுவதும் இரு பாலினத்துக்கும் பள்ளி கால்பந்து அணிகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி, உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெண்களின் நிலை மிகவும் மோசமானது. ஒருகாலத்தில் சுதந்திரமாகக் கல்வி கற்ற பெண்கள், கடந்த 30 ஆண்டுகளில் வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். கல்வி, வேலை, விளையாட்டு எல்லாமே ஆண்களுக்கான விஷயங்களாகப் பார்க்கப்பட்டன. இதனால் பெண்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாக்கப்பட்டனர். பெண்கள் தங்கள் உரிமைகளை மீட்கவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் கால்பந்து விளையாட்டை நேசிக்க ஆரம்பித்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கலிதா.
ஆர்வத்தைத் தூண்டிய கட்டுப்பாடுகள்
அது 2004-ம் ஆண்டு. பதினாறு வயது கலிதாவுக்குத் தன் சகோதரனின் கால்பந்து விளையாட்டைப் பார்த்து, தானும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்கத் தடை இருந்த காலகட்டம். கால்பந்து மைதானங்கள் மரண தண்டனைகளை நிறைவேற்றும் இடங்களாக இருந்தன. கட்டுப்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க அதை மீறும் எண்ணம் அழுத்தமாகப் பதிந்தது. ஓர் ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார் கலிதா. பள்ளியில் தன்னைப் போல ஆர்வம் கொண்ட பெண்களை ஒருங்கிணைத்தார். பெரிய சுவர்களுக்குப் பின்னால் கால்பந்து விளையாடினார்.
ஒரு கட்டத்தில் பெண்கள் விளையாடுவது வெளியே தெரியவந்தது. குப்பைகளையும் கற்களையும் விளையாடும் பெண்கள் மீது வீசினார்கள். வசைமாரிகளைப் பொழிந்தார்கள். ஆனாலும் பெண்கள் விளையாடுவதை நிறுத்தவில்லை. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விளையாட்டைத் தொடர்ந்தனர்.
2007-ம் ஆண்டு கலிதாவும் அவரது சகாக்களும் சேர்ந்து ஆப்கானிஸ்தானின் முதல் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கினார்கள். ஆனாலும் அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஹெலிகாப்டர் இறங்கும் தளத்துக்குச் சென்று பாதுகாப்பாக விளையாடினர். 3 முறை ஹெலிகாப்டர் தளத்தின் வாயிலில் தாலிபான்கள் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
அப்பொழுதுதான் கால்பந்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், பெண்கள் உரிமைகளைப் பெறுவதற்கான கருவியாக நினைத்தார் கலிதா. பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு தைரியமாக வெளியேறி வர ஆரம்பித்தனர். பெண்கள் கால்பந்தாட்ட அணிகள் உருவாகின. அதே அளவுக்குக் கலிதாவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகரித்தன. கலிதா மட்டுமின்றி, அவரது குடும்பமும் கொலை மிரட்டல்களுக்கு உள்ளானது.
பெண்களுக்குப் புதிய சீருடை
ஆப்கானிஸ்தானில் வசிக்க இயலாது என்ற நிலை வந்தபோது, நாட்டை விட்டு வெளியேறி, டென்மார்க்கில் அடைக்கலம் புகுந்தார் கலிதா. அங்கிருந்துகொண்டே தன் நாட்டில் பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். அவர் வேலை செய்துவரும் ஹம்மெல் தொண்டு நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறது. அந்த நிறுவனத்துடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணிக்கான புதிய சீருடையை உருவாக்கியிருக்கிறார் கலிதா. தலையில் ஹிஜாப், கைகளுக்கு உறைகள், கால்களுக்கு லெகிங்ஸ் என்று முழுக்க மூடப்பட்ட சீருடை இது.
“ஹிஜாப் அணிந்து ஆடும்போது திடீரென்று கண்களை மறைக்கும். கீழே விழுந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும்போது அந்தச் சீருடை மிகுந்த புழுக்கத்தைக் கொடுக்கும். இந்தப் புதிய சீருடை ஆப்கானிஸ்தானின் கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது, வீராங்கனைகளுக்கு வசதியாகவும் இருக்கிறது. இனிமேலாவது பெண்கள் கால்பந்து விளையாட அனுமதிக்க வேண்டும். குடும்பத்தை விட்டு, நாட்டை விட்டுத் தனியாக இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னைப் போல உரிமை கேட்டுக் குரல் கொடுத்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆப்கனைச் சேர்ந்த பல விளையாட்டு வீராங்கனைகள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள். எங்கள் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பும் பெண்கள் உரிமைகளும் மதிக்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். அப்பொழுது தாய் நாடு திரும்புவேன். என் நாட்டுக்காகப் பெண்கள் அணியை ஒலிம்பிக்கில் பங்கேற்க வைப்பதுதான் என் லட்சியம். தான் ஒரு பெண் என்பதையும் எங்கள் நாட்டுக் கொடிக்குக் கீழ் அணி வகுப்பதையும் ஆப்கன் பெண்கள் பெருமையாக நினைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்’’ என்கிறார் கலிதா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago