பெண்ணை மையப்படுத்திய படைப்புகள் அனைத்தும் பெண்ணெழுத்து ஆகிவிடாது. சமூகத்தின் எல்லா நிலைகளிலும் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படும் பெண்ணுலகின் நிலையைச் சமரசமின்றி உரைப்பவையே அவ்வெழுத்துக்கு நியாயம் சேர்க்கின்றன. மறுக்கப்படும் உரிமைகளை, மறக்கப்பட்ட ஆளுமை களை, நசுக்கப்படும் குரல்களை, தடைதகர்த்த முகங்களின் கதைகளைத் தன்னுள்ளே தீக்கங்குகளாக மினுங்கச் செய்யும் படைப்புகளே வாசக மனங்களில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படியான படைப்புகள் காலந்தோறும் மாற்றத்தை விதைக்கத் தவறுவதில்லை. 2022 சென்னை புத்தகக் காட்சியையொட்டி வெளியாகியிருக்கும் பெண்கள் சார்ந்த நூல்களில் சில இவை:
தெய்வமே சாட்சி
l ச. தமிழ்ச்செல்வன்
விலை: ரூ.150
பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு: 044 - 24332424/24332924
சமூக நிர்ப்பந்தத்தாலும் கற்பிதங்களாலும் கொல்லப்பட்ட அல்லது தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பெண்களை அவர்களின் இறப்புக்குப் பிறகு தெய்வமாக வணங்கும் மரபு நம்மிடையே இருக்கிறது. சிறுதெய்வங்களில் பல அப்படித் தோன்றியவைதாம். கொல்லப் பட்டுத் தெய்வமாக்கப்பட்ட தமிழகப் பெண் களின் கதைகளைத் தொகுத்திருக்கிறார் ச.தமிழ்ச் செல்வன். ஒவ்வொரு கதையும் ஆணாதிக் கத்தின் கோரமுகத்தைத் தோலுரிக்கிறது.
உஷா சுப்பிரமணியன் கதைகள்
விலை: ரூ.590
பிறகு வெளியீடு
தொடர்புக்கு: 9840065000
சமகால கதைகளை வாசிக்கிறவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன் உஷா சுப்பிரமணியன் எழுதிய கதைகள் அந்நியமாகத் தோன்றாது. காலம் மாறினாலும் மனித மதிப்பீடுகள் எப்போதும் ஒன்றுதானே. குடும்ப அமைப்புக்குள் நிலவும் ஒடுக்குதலை அலங்காரமும் பூச்சுமற்ற எளிய நடையால் விவரிக்கையில் வாசிக்கிற மனங்களில் அதிர்வு ஏற்படத்தான் செய்கிறது. எந்த அமைப்புக்குள்ளும் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்கிற நிதர்சனத்தைப் பேசுகின்றன இவரது கதைகள்.
அடங்க மறு
l ஸர்மிளா ஸெய்யித்
விலை: ரூ.300
நீலம் வெளியீடு
தொடர்புக்கு: 6369825175
பெண்ணைச் சிறைபடுத்தும் அனைத் தையும் உடைத்தெறிய வேண்டியதன் அவசியத்தை இந்நூலின் வழி உணர்த்துகிறார் ஸர்மிளா ஸெய்யித். குடும்பமும் சமூகமும் எப்படியெல்லாம் பெண்களை அடிமைப்படுத்திவருகின்றன என்பதைத் தன் அனுபவங்களின் வழியாகவும் தான் எதிர்கொண்ட நிகழ்வு களின் துணையோடும் விளக்குகிறார் ஸர்மிளா ஸெய்யித்.
துப்பட்டா போடுங்க தோழி
l கீதா இளங்கோவன்
ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு
தொடர்புக்கு: 9840907398
பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் பெயரால் பெண்கள் மீது மட்டும் இந்தச் சமூகம் அடுக்கடுக்கான சுமைகளை ஏற்றியவண்ணம் இருக்கிறது. அவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் பெண்களை ஒடுக்குகிறது அல்லது தனிமைப்படுத்துகிறது. இதுபோன்ற ஆதிக்கச் செயல்பாடுகளை நாம் கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை எழுதுகிறார் கீதா இளங்கோவன். பெண்ணுக்கான வாழ்க்கை முறையை ஆண் எழுதத் தேவையில்லை என்பதுதான் இவரது கட்டுரைகளின் அடிநாதம்.
புற்றிலிருந்து உயிர்த்தல் (சிகிச்சை அனுபவம்)
l சாலை செல்வம்
விலை: ரூ.120
கறுப்புப் பிரதிகள்
தொடர்புக்கு: 9444272500
மார்பகப் புற்றுநோயுடன் தான் போராடி மீண்ட கதையைச் சொல்கிறார் சாலை செல்வம். நான் இவ்வளவு துயரப்பட்டேன் என்று எடுத்துரைத்து நம் பரிவைக் கோரவில்லை அவர். மாறாக, மார்பகப் புற்றுநோயைத் தான் அணுகிப் புரிந்துகொண்ட விதம் குறித்தும் மருத்துவச் சிகிச்சை, அறிவியல் தகவல்கள் என அனைத்தையும் விளக்கியிருக்கிறார். புற்றுநோயைக் கண்டறிந்தால் நாம் பதறத் தேவையில்லை என்கிற நம்பிக்கையைத் தன் வார்த்தைகளின் மூலம் நமக்குள் கடத்துகிறார் சாலை செல்வம்.
ஆச்சிமார்களின் புழங்கு பொருள்சார் பண்பாடு
l எஸ். கண்ணப்பன்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9498335039
நவீன சமையலறைச் சாதனங்களோடு வாழப் பழகிவிட்ட இந்தத் தலைமுறைக்கு, நகரத்தார் வீட்டு ஆச்சிமார்கள் புழங்கிய பொருட்கள் பெரும் வியப்பைத் தரலாம். நகரத்தார் வீடுகளில் புழக்கத்தில் இருந்த பொருட்கள் குறித்தும் அவற்றின் பயன்பாடு குறித்தும் ஆய்வுசெய்து எழுதியிருக்கிறார் எஸ். கண்ணப்பன். பொருட்களோடு அவற்றுக்கான படங்களையும் இணைத்திருப்பது புரிதலை எளிதாக்குகிறது.
முள்
l முத்துமீனாள்
விலை: ரூ.150
துருவம் வெளியீடு
தொடர்புக்கு (வாட்ஸ் அப்): 9841943437
தன் வரலாற்றுக் கதைகள் சாமானியர்களுக்கும் சொந்தமானது. அந்த வகையில் முத்து மீனாள் எழுதிய ‘முள்’ ஏற்கெனவே மிகுந்த கவனம் பெற்றது எனலாம். தற்போது மறுவெளியீடாக வந்திருக்கும் இந்நூலில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலை, சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டது என்று தொடங்கி நோய் நீங்கிய பிறகு தான் திருமணத்துக்காக காத்திருந்த நாட்களின் வலிகளையும் ஒன்று சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார் முத்து மீனாள்.
ஆற்றுக்குத் தீட்டில்லை
l நித்தில்
விலை: ரூ.120
புலம் வெளியீடு
தொடர்புக்கு: 9840603499
பெண்களின் கதைகளைப் பெண் பேசுகையில் மிகையும் புனைவும் தானாக உதிர்ந்துவிடும். நித்தில் என்கிற புனைபெயரில் எழுதுகிற முத்துலட்சுமியின் கதைகள் எதார்தத்தை இறுகப் பற்றியபடி இதை நிரூபிக்கின்றன. இவை நம்மைச் சுற்றி, நம்மிடையே வாழும் பெண்களின் கதைகள்.
ஆனந்தவல்லி
l லஷ்மி பாலகிருஷ்ணன்
விலை: ரூ.230
பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு: 044 - 24332424/24332924
பெண்ணை அடிமைப்படுத்துவது நமக்குப் புதிதல்ல. காலமும் களமும் மாற, அவற்றுக்கேற்ப அடிமைப்படுத்துதலும் நவீனப்பட்டுக்கொண்டு இருக்கிறதே தவிர ஒழிந்தபாடாக இல்லை. பெண்ணை அடிமைப்படுத்துதல் என்கிற நீண்ட நெடிய வரலாற்றிலிருந்து சிறு கண்ணியை எடுத்துக்கொண்டு உண்மைச் சம்பவங்களின் துணையோடு நாவலாக்கியிருக்கிறார் லஷ்மி பாலகிருஷ்ணன். மராட்டிய அரச வம்சத்துக்கு அடிமையாக விற்கப்படுகிற ஆனந்தவல்லிதான் கதையின் மையச்சரடு என்கிறபோதும் அதைச் சுற்றிப் பல்வேறு சமூகச் சிடுக்குகளையும் லஷ்மி கவனப்படுத்தியுள்ளார்.
ஆதிப் பெண்ணின் அடி தேடி
l ஓவியா
விலை: ரூ.110
கருஞ்சட்டைப் பதிப்பகம்
தொடர்புக்கு: 044-24726408
ஆண்களால் எழுதப்பட்ட வரலாறு என்பதாலேயே என்பதா லேயே அது ஆணை மட்டுமே முன்னிறுத்திய தாக இருக்கிறது. எழுதப்படவில்லை என்பதற்காக வரலாற்றில் பெண்ணுக்கு இடமில்லை எனப் புறக்கணித்துவிட முடியாது என்கிறார் ஓவியா. அதைத் தகுந்த சான்றுகளோடும் வரலாற்றுத் தகவல்களோடும் இந்நூலில் அவர் விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் தங்கள் தடங்களை விட்டுச் சென்றிருக்கும் பெண் ஆளுமைகளைக் கண்முன் நிறுத்துவதன்மூலம் ஆணுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் பெண்கள் அல்ல என்பதை உணர்த்துகிறார்.
மீ டூ # ME TOO
l வழக்கறிஞர் கே. சாந்தகுமாரி
விலை:ரூ: 350
எதிர் வெளியீடு
தொடர்புக்கு: 9942511302/04259-226012
பெண்கள் மீது ஆண்கள் பாலியல் சீண்டலை நிகழ்த்தாத இடம் இவ்வுலகில் இல்லை. ஆனால், நிகழ்த்தப்படும் குற்றங்கள் எல்லாம் பதிவாவதும் இல்லை, தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப் படுவதும் இல்லை. இப்படியொரு பின்னணியில், பெண்கள் மீதான பாலியல் சீண்டலைப் பகிரங்கப்படுத்தும் பெரும் இயக்கமாக ‘மீடூ’ உருவெடுத்தது. ஹாலிவுட் நடிகையில் தொடங்கி ஆய்வு மாணவி வரை தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் சீண்டல்களை அம்பலப்படுத்தினர். ‘மீடூ’ விவகாரம் தொடர்பான வழக்குகளைத் துறைவாரியாகத் தரவுகளோடு நேர்த்தியாக எழுதியிருக்கிறார் சாந்தகுமாரி.
சாவித்திரிபாய் புலேவின் வாழ்வும் போராட்டமும்
l தொகுப்பாசிரியர்கள்: பிரஜ் ரஞ்சன் மணி, பமீலா சர்தார்
தமிழில்: வெ. கோவிந்தசாமி
விலை: ரூ.120
பரிசல் புத்தக நிலையம், தொடர்புக்கு: 9382853646/8825767500
தாழ்ந்து கிடந்த இந்தியாவில் அடிமைத்தனத்தில் வீழ்ந்து கிடந்த மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த போராளி சாவித்திரிபாயின் வாழ்வைப் பேசுகிறது இந்நூல். பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களின் கல்விக்காகவும் அவர்களின் வாழ்நிலை உயர்வுக்காகவும் போராடியவர் சாவித்திரிபாய். எண்பதுகளிலேயே பெண்களுக்காக மூன்று பள்ளிகளை நடத்தியவர். கைம்பெண்களுக்குப் புகலிடம் தரவும், சிசுக்கொலையைத் தடுக்கவும் விடுதியொன்றை அவர் நடத்திவந்தார். இப்படியொரு மானமிகு வாழ்க்கையை வாழ அவர் எதிர்கொண்ட இன்னல்களும் சவால்களும் ஏராளம். அவற்றையும் இந்நூல் பதிவுசெய்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago